(963)

(963)

பணங்களாயிரமுடையநல்லவரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,

இணங்கிவானவர்மணிமுடிபணிதர இருந்தநல்லிமயத்து,

மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,

பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும் பிரிதிசென்றடைநெஞ்சே!

 

பதவுரை

வானவர்

–

தேவர்கள்

இணங்கி

–

திரளாகக் கூடி

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணை பள்ளி கொள் பரமா என்று

–

‘ஆயிரம் படங்களையுடைய திருவனந் தாழ்வானாகிற சயனத்திலே பள்ளி கொண்டருளும் பரமபுருஷனே!’ என்று சொல்லி,

மணி முடி பணி தர இருந்த நல்இமயத்து

–

மணி முடிகளாலே வணங்கும் படி எம்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல்ல இமயமலையின் கண்,

மணம் கொள் நெடு மாதவி கொடி அவை

–

பரிமளமுள்ளவையும் நீண்டவை யுமான குருக்கத்திக் கொடிகளானவை

விசம்பு உற நிமிர்ந்து

–

ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து

முகில் பற்றி பிணங்கு

–

மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே

பூ

–

புஷ்பிக்கப்பெற்ற

பொழில்

–

(குருக்கத்திச்)சோலைகளிலே

வண்டு நுழைந்து

–

வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து

இசை சொலும்

–

இசைபாடுமிடமான

பிரிதி

–

திருப்பிரிதியை

நெஞ்சே! சென்று அடை-;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை


பணங்க ளாயிரமுடைய நல்லரவணைப்பள்ளிகொள் பரமா! என்று *

இணங்கி வானவர் மணிமுடி பணி தர இருந்த நலிமயத்து *

மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில்பற்றி *

பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டிசைசொலும் , பிரிதி சென்றடை நெஞ்சே!



***-(பணங்களாயிரம்.) தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிசர்க்கும் அநுகூலமாக இமயமலையிலேவந்து எழுந்தருளியிருக் கிறானென்பது தோன்ற அருளிச்செய்கிறார்.

வானவர்கள் திரள் திரளாக இமயமலையின்கண் வந்து எம்பெருமானை நோக்கி ‘ ஸ்வாமிந்! தேவரீர் திருப்பாற்கடலிலே சேஷசயனத்திலே பள்ளி கொண்டிருந்த பெருமானன்றோ ‘ என்று சொல்லி அவன் திருவடிகளிலே தலையை வீழ்த்தி வணங்குவர்களாம். இணங்கி– பொருந்தி என்றுமாம்.

பின்னடிகளின் கருத்து: நறுமணமுள்ள குருக்கத்திக்கொடிகளானவை ஆகாசம் வெளியடையும்படி ஒங்கிப்படர்ந்து மேகமண்டலத்தோடு போராடும் போது அந்த ஸம்மர்த்தத்தாலே பூக்கள் அலரும் ; அப்பூக்களிலே மதுபானம் பண்ண நினைத்து வண்டுகளானவை அம்மேகத்துக்கும் கொடிக்கும் நடுவே நுழைந்து மதுவைப் பருகிக் களைத்துச் செருக்குக்குப் போக்குவீடாக இசைபாடாநிற்கும்; திருப்பிரிதியடங்கலும் இந்த ஆரவாரமேயாயிருக்கும்.  அப்படிப்பட்ட தலத்தைச் சென்று சேர் நெஞ்சே!.

மாதவிக்கொடியானது முகிலோடு பிணங்குவதாகவும் வண்டுகள் இசை பாடுவதாகவுஞ் சொல்லுகிறவிதற்கு ஒரு உள்ளுறை பொருள் கூறலாம்;- மாதவிக்கொடியென்று பிராட்டியைச் சொல்லுகிறது; முகில் என்று எம்பெருமானைச் சொல்லுகிறது ; அபராதிகளான சேதநர்களை க்ஷமித்து ரக்ஷிப்பதற்காகப் பிராட்டி எம்பெருமானோடே போராடி மன்றாடுவளிறே; அதைச் சொல்லுகிறது. ஸாரக்ராஹிகளான மஹான்கள் வந்து புகுந்து தோத்திரம் பண்ணும்படியைச் சொல்லுகிறது வண்டிசைசொலும் என்று. பணம், பரமன், மாதவி-வடசொற்கள். … … (சு)


English Translation

“Thousand-hooded snake- recliner of Milky-Ocean, Lord in the Vyuha state!”, — Gods in hordes’do come and offer worship with their heads to Resident of Himavan peaks! Fragrant Madavi climbing high to touch the sky and playing with the cushion-clouds, O! Bees in gardens hover drinking nectar, come to sing in Piriti, — O, Go to, my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top