(962)
கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய்மேகலையலர்மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து,
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே.
பதவுரை
|
கனை கழல் தொழுது ஏத்த |
– |
(ஆபரணங்கள் பூண்டதனால்) ஒலிசெய்கின்ற திருவடிகளை |
|
அமரர்கள் |
– |
தேவர்கள் |
|
தொழுது ஏத்த |
– |
ஸேவித்துத் துதிக்கும்படியாக, |
|
கரை செய் மா கடல் கிடந்தவன் |
– |
தனக்குத்தானே கரை செய்து கொண்டிருக்கிற பெரிய கடலிலே (‘க்ஷீரஸாகரத்தில்) பள்ளி கொண்ட பெருமான், |
|
அரை செய்மேகலை அலர் மகளவளொடும் அமர்ந்த |
– |
திருவரையிலே சாந்தப்பட்ட மேகலையை யுடையளான பெரிய பிராட்டியோடு கூட எழுந்தருளியிருக்கப்பெற்ற |
|
நல் இமயத்து |
– |
நல்ல இமயமலையின் கண், |
|
வரைசெய் மா களிறு |
– |
மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை |
|
இள வெதிர் |
– |
இளமூங்கிலைகளுடைய |
|
வளர் மூளை |
– |
ஓங்கி வளர்ந்தமுளைகளை(ப்பிடுங்கி) |
|
அளை மிகு தேன் தோய்த்து |
– |
முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து |
|
பிரசம் வாரி |
– |
(அந்தத்) தேன்வெள்ளத்தை |
|
தன் இள பிடிக்கு |
– |
தனது இளையபேடைக்கு |
|
அருள் செயும் |
– |
கொடுக்குமிடமான |
|
பிரிதி |
– |
திருப்பரிதியை |
|
நெஞ்சே சென்று அடை-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
எழுதிய விளக்க உரை
கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழ லமரர்கள் தொழுதேத்த *
அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும் அமர்ந்த நலிமயத்து *
வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை அளைமிகு தேன் தோய்த்து *
பிரசவாரி தன்னிளம்பிடிக் கருள்செய்யும் பிரிதி சென்றடை நெஞ்சே! .
(கரைசெய்மாக்கடல்.) அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடியை அநுஸந்தித்துப் பேசுகிறார் இதில்.
ஆபரணங்கள் பூண்டதனாலே ஒலிசெய்துகொண்டிருக்கிற பரவாஸுதேவன் திருவடிகளை ஸேவிக்கவேணுமென்கிற குதூஹலமுடைய நான்முகன் முதலான தேவர்கட்கு ஸ்ரீவைகுண்டத்திலே சென்று காணப்பெறுகை அஸாத்தியமாகையாலே அவர்கள் இழந்தே போகாதபடி திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்து அவர்களுக்கு ஸேவைஸாதிக்கிற ஜீராப்திநாதன் பிராட்டியுந் தானுமாய்வந்து பொருந்திவாழும் இமயமலையின்கண்.
மலைபோற்பெரியசரீரமுடைய யானைகளானவை இளையமூங்கில் முளைகளைப் பிடுங்கித் தேனிலே தோய்த்துத் தம் பேடைகளின் வாயிலே பிழியாநிற்கப் பெற்ற பிரிதியைச் சென்றுசேர் நெஞ்சமே!.
வரைசெய்மாக்களிறு = செய் – உவமவுருபு; மலைபோன்ற பெரிய யானைகள். வெதிர் என்று மூங்கிலுக்குப் பெயர். அது முளைக்கும்போதே நெடுக ஓங்கி வளருமாதலால் வளர்முளை என்றார். யானையானது தன் பேடையை மகிழ்விக்கவேண்டி இனிய உணவு கொடுக்க விரும்பும்; மூங்கில் முளையைப் பெயர்த்துத் தேனிலே தோய்த்து அதன்வாயிலே பிழியும்.* ” பெருகுமத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று, இருகணிள மூங்கில் வாங்கி – அருகிருந்த, தேன் கலந்து நீட்டுந் திருவேங்கடங்கண்டீர், வான்கலந்த வண்ணண் வரை.” என்கிற பாசுரத்திலும் இவ்விஷயம் காணத்தக்கது. * இரண்டாந்திருவந்தாதி-75.
பிரசவாரி = பிரசம் என்று, கள்-தேனீ-தேன்-தேன் கூடு-வண்டு ஆகிய இவற்றுக்குப் பெயர்; வாரி என்பதற்குப் பல பொருள்களிருந்தாலும், அவற்றுள் இங்கு வெள்ளமென்னும் பொருள் கொள்ளத்தகும்; தேன் வெள்ளத்தை என்றதாயிற்று. தேனீக்கள் நிறைந்த தேனை என்றும் சொல்லலாம்.
English Translation
Deep in Milky-Ocean, reclining on serpent bed, his feet worshipped by celestials, He’s the Lord who’s chest has lotus lady Lakshmi on it, — Resident of Himavan peaks, Mountain-like elephants pluck the tender Bamboo shoot of mountain growing grass, Feed their young ones with it dipping it in mountain honey; Piriti,– O, Go to, my heart!
