(943)

(943)

கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்

பண்டை வல்வினை பாற்றி யருளினான்

எண்டி சையு மறிய இயம்புகேன்

ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே.

பதவுரை

பிரான்

–

பரமோபகாரகராய்
காரி மாறன்

–

பொற்காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார்
என்னை

–

(தமது பெருமையை அறியாத) என்னை
கண்டு

–

கடாக்ஷித்து
கொண்டு

–

கைக்கொண்டு
பாண்டை வல் வினை

–

அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாவங்களை
பாற்றி அருளினான்

–

உருமாய்ந்து போம்படி பறக்கடித்தருளினார்; (ஆதலால்)
ஒண் தமிழ் சடகோபன் அருளையே

–

அழகிய தமிழ்க்கவிகளுக்கு ஆகரமான அவ்வாழ்வாருடைய க்ருபையையே
எண் திசையும்

–

எட்டுத் திக்கில் உள்ளவர்களும்
அறிய

–

அறியும்படி
இயம்புகேன்

–

சொல்லக்கடவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “நன்புகழேத்தவருளினான்” என்றவிடத்துக் கூறிய புகழேத்துகையாவது இதுதான் என்று இப்பாட்டில் வெளியிடுகிறார்: ஆழ்வார் திருவாய்மொழி பாடவல்லவர், எம்பெருமானையும் வசப்படுத்தவல்லவர் இத்யாதியாகவுள்ள அவருடைய புகழ்களை நான் ஏத்துகிறவனல்லன்; பாவங்கள் கூடுபூரித்துக்கிடந்த அடியேனைப் பரமபரிசுத்தனாக்கி ஆட்கொண்ட பெருமையாதொன்றுண்டு. இதற்குமேல் வேறொருபெருமை ஆழ்வார்க்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை; அந்தப் பெருமையையே நாடெங்குமறியப் பறையடிக்கின்றேன் என்கிறார்.

கண்டுகொண்டு என்றவிடத்தில் கொண்டு என்பது துணைவினையன்று; கண்டு என்றும் கொண்டு என்றும் இரண்டும் தனித்தனி வினையெச்சங்கள். என்னைக் கடாக்ஷித்து, என்னுடைய துர்க்கதியே பற்றாசாக என்னை அங்கீகரித்தருளி என்றபடி. “இருந்தான் கண்டுகொண்டு எனதேழை நெஞ்சாளும்” என்று ஆழ்வார் பகவத் விஷயத்திலே அநுஸக்தித்தவாற்றை இவர் ஆழ்வார் விஷயத்திலே அநுஸந்திக்கிறார்.

காரி மாறன் – ஆழ்வாருடைய திருத்தகப்பனார்க்குப் பொற்காரியார் என்று திருநாமம். ஆழ்வார் உலகநடைக்கு மாறாயிருந்ததால் மாறன் எனத்திருநாமம் பெற்றார். மாறன் பிரான், மாறப்பிரான்; “சில விகாரமா முயர்திணை” (நன்னூல்).

பண்டை வல்வினையாவது-பகவச்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதஸேஷத்வமென்று அறியப்பெறாமை.  பாகவத விஷயத்தை விலக்கிப் பகவானளவிலே பண்ணும் பக்தியைப் பாபமென்றிறே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வது. “***“ = பரதேந ததாநக:” என்றவிடத்து அநக: என்பதற்கு வியாக்கியானம் ஸேவிக்க.

பாற்றி – பாறச்செய்து; பாறுதல் உருமாய்ந்தொழிதல்: பாறு என்ற வினைப்பகுதியடியாப் பிறந்து பிறவினையில் வந்த வினையெச்சம்.

அறியவியம்புகேன் =   “அறியச் சொன்னவாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப்போலே நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார். “தமிழ்ச் சடகோபன்” என்றது தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.

English Translation

My Kari-Maran took a note of Karmas of my older days. I shall let the Quarters know, Satakopan-the-Tamil’s grace.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top