(931)

(931)

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்

கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு

வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.

பதவுரை

பாரம் ஆய

பொறுக்கமுடியாத சுமையாயிராநின்ற
பழ வினை

அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து

சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை

(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்

தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி

இப்படி செய்துவைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்

என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்

(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)

கோரம் மா தவம்

உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்

(முற்பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்

அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்

ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்

பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ

அத்திருமார்பன்றோ
அடியேனை

தாஸனான என்னை
ஆள் கொண்டது

அடிமைப்படுத்திக் கொண்டது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியார்களைப் பரிந்து  காத்தருளவல்ல பெரியபிராட்டியாரும், ஸர்வரக்ஷகத்வத்தை வெளிப்படுத்தவல்ல ஹாரமும் திகழப்பெற்ற திருமார்பின் அழகே என்னை ஆட்படுத்திக்கொண்டதென்கிறார்.

காலமுள்ளதனையும் ப்ராயச்சித்தம் பண்ணினாலும் கழிக்கவொண்ணாதபடி வளர்ந்து செல்லுகிற என் தொல்லைத் தீவினைகளை வாஸனையோடுகூட அடியறுத்து அடியேனை நிஷ்கல்மஷனாக்கித் தன்னிடத்தில் பக்ஷபாதமுடையவனாக ஆக்கிக்கொண்ட மாத்திரத்தோடு நில்லாமல், இத்தனைகாலமாய்ப் பாவங்களுக்கு இருப்பிடமாயிருந்த என்னெஞ்சை அப்பாவங்களை யோட்டிவிட்டுத் தனக்கிருப்பிடமாக்கிக் கொண்டான் ஸ்ரீ ரங்கநாதன் என்கிறார் முன் அடிகளில். “கல்லும் கனைகடலும் வைகுந்தவானொடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்” என்ற பெரியதிருவந்தாதிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தகும்.

தன்வீட்டைத் தான் தான் ஆளவொண்ணாதபடி நெடுநாளாக ஆக்ரமித்துப்போந்த குறும்பர்களைச் சீற்றத்தோடு ஓட்டித் துரத்திவிட்டு மேனாணிப்புடன் தன் வீட்டில் விஜயஞ்செய்கின்ற மஹாராஜன்போல, அடியேனுடைய நெஞ்சை எம்பெருமான் தன்னதாக அபிமானித்து அரியபெரிய காரியங்கள்செய்து வந்து புகும்படிக்கீடாக நான் எந்த ஜந்மத்தில் என்ன தபஸ்ஸூ பண்ணினேனோ தெரியவில்லையே! என்று தடுமாறுகிறார் மூன்றாமடியில். “பெண்ணுலாஞ் சடையினாலும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப” என்றபடி-மெய்யே தவம்புரிந்த பெரியோர்களும் இப்போது பெறாமல் வருந்திநிற்க, தமக்கு அசிந்திதமாக இப்பேறு வாய்த்தது தீவ்ரமானதொரு அபூர்வ தபஸ்ஸின் பலனாயிருக்கவேணுமென்றும், அத்தபஸ்ஸூ தம் முயற்சியால் நிகழ்ந்தல்லவென்றும், எம்பெருமானே இதற்கு நோன்புநோற்றவன் என்றும் இவருடைய உட்கருத்தாமென்க.

இனி, செய்தனன் என்பதைத் தன்மைவினைமுற்றாகக் கொள்ளாமல் படர்க் கைவினைமுற்றாகக்கொண்டு, இப்படி என் நெஞ்சினுள் புகுவதற்கு எம்பெருமான் உபயகாவேரிமத்தியத்திலே நின்று கொண்டு என்ன கடுந்தவம் புரிந்தானோ? என்பதாக உரைத்தருளின தூப்புற்பிள்ளை வியாக்கியானமும் மிக்க பொருத்தமுடைத்தேயாம். அந்த முநிவாஹநபோகத்தில், “இது அதிவாதகர்ப்பமாக உத்ப்ரேக்ஷித்தபடி” என்று ஊடே ஒருவரி வரைந்து அச்சிட்டிருப்பது ஆது நிகர்களின் கைச்சரக்காயிருக்கவடுக்கும். ஓரடியானைப் பெறுதற்கு எம்பெருமான் படுகிறகாடு இப்பிச்சுக்களுக்கு என்ன தெரியும்? அநாவ்ருத்தி ஸூத்ர ஸ்ரீபாஷ்யத்தில் “………………” நச பரமபுருஷஸ்ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநி நம் ல்ப்த்வா” என்று எம்பெருமானார் அருளிச்செய்த ஸ்ரீஸூக்தியில் லப்த்வா என்ற பரமாஸத்தைப். பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளிற் பணிந்து கேட்கப் பெற்ற

நம்தேசிகன் திருந்தி உரைத்த இச்சுவடறிவார் ஆர்கொல்?

பாரம், கோரம், ஆரம் என்பவை வடசொற்களின் விகாரம். வாரம்-பக்ஷபாதம்.

English Translation

Relieving me of my load of misdeeds, the Lord of Arangam made me his devotee; and what is more, he entered into me. What great penance did I do, I do not know. O, His’ auspicious garland-chest has possessed me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top