(932)
துண்ட வெண்பிறை யான்துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேயவப்பன்
அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி யேனை யுய்யக்கொண்டதே!
பதவுரை
| து ண்டம் |
– |
ஒரு துண்டாயிருக்கிற (கலாமாத்ரமான) |
| வெண்பிறையன் |
– |
வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய |
| துயர் |
– |
(பிச்சையெடுத்துத் திரிந்த) பாதகத்தை |
| தீர்த்தவன் |
– |
போக்கினவனும் |
| அம் சிறைய வண்டு |
– |
அழகிய சிறகையுடைய வண்டுகள் |
| வாழ் |
– |
வாழ்தற்கிடமான |
| பொழில் சூழ் |
– |
சோலைகள் சூழப்பெற்ற |
| அரங்கம் நகர் |
– |
திருவரங்கப்பெருநகரிலே |
| மேய |
– |
பொருந்தியிராநின்ற |
| அப்பன் |
– |
ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய |
| அண்டர் |
– |
அண்டத்துக்குட்பட்ட தேவாதிவர்க்கங்களையும் |
| அண்டம் |
– |
அண்டங்களையும் |
| பகிரண்டம் |
– |
அண்டாவரணங்களையும் |
| ஒரு மா நிலம் |
– |
ஒப்பற்ற மஹாப்ருதிவியையும் |
| எழு மால் வரை |
– |
ஏழு குலபர்வதங்களையும் |
| முற்றும் |
– |
சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும் |
| உண்ட |
– |
அமுதுசெய்த |
| கண்டம் கண்டீர் |
– |
திருக்கழுத்துக்கிடீர் |
| அடியேனை |
– |
தாஸனான என்னை |
| உய்யக் கொண்டது |
– |
உஜ்ஜீவிப்பித்தது |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஒருகாலத்திலே, பரமசிவன், தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் ‘இதற்கு என் செய்வது?’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்க வேண்டும்; என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்ட அகலும்’ என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித்திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாஸ்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி இரந்தபோது, அப்பெருமான்: ‘அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம். இவ்வரலாற்றுமுகத்தால், ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை வெளியிட்டவாறு. ஈஸ்வரனென்று பெயருடைய ருத்ரன் கர்மவச்யனென்பதும், தன்னைத்தான் ரக்ஷித்துக்கொள்ளமாட்டாத இவன் வேறொருவர்க்கும நிரபேக்ஷரக்ஷகனாக மாட்டானென்பதும், ஸ்ரீமந்நாராயணனே ஸர்வாநிஷ்ட நிவர்த்தகன் என்பதும் நன்கு வெளியாகும்..
அஞ்சிறைய வண்டு என்றது ஞானானுட்டானங்கள் நன்கு அமைந்த ஆசிரியர்களைக் கூறியபடி. பலவகை மலர்களிலு ஞ்சென்று அவற்றின் ஸாரமான தேனைஅம்மலர்கள் கெடாதபடி கவர்ந்து உண்ணுந்தன்மை யனவான வண்டுகளை, பலவகை சாஸ்த்ரங்களிலும் அவகாஹித்து அவற்றின் ஸாரமான தத்துவப் பொருளை அந்நூல்கள் நலிவுபடாதபடி க்ரஹித்து அநுபவிக்குந் தன்மையரான ஆசிரியராகச் சொல்லத்தட்டில்லை.
சிறகுகள் வண்டுகளின் கமநத்துக்கு ஸாதநமாவதுபோல் ஜ்ஞாநாநுஷ்டா நங்கள் உன்னதகதிக்கு ஸாதநமாமென்க.
காரணாவஸ்தையில் எல்லாக்காரியங்களையும் தன்பக்கலில் உபஸம்ஹரித்துப் பின்பு ஸ்ருஷ்டிக்குமாறு “வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட” என்றபடி ஸகல பதார்த்தங்களையும் பிரளயப் பெருவெள்ளத்தில் நின்றும் தப்பவைத்துத் தன் திருவயிற்றிலே அடக்கிநோக்கின பெருநன்றியையும், இப்போதும் தம்மை ஸம்ஸாரஸாகரம் விழுங்காதபடி ஆட்படுத்திக்கொண்ட உபகாராதிசயத்தையும் ஆநந்தமாகப் பேசுகிறார் பின்னடிகளில்.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்-“சந்த்ரனுடைய க்ஷயத்தைப்போக்கினானென்றுமாம்” என்று அர்த்தாந்தரமும் அருளிச் செய்யப்பட்டிருப்பதால் “துண்டவெண்பிறையின்” என்றும் ஒருபாடமுண்டுபோலே.
அண்டம், பஹிரண்டம், கண்டம்-வடசொற்கள்.
English Translation
My Lord saved the crescent-crested Siva from sin. He swallowed, the world, the people, the space, the Earth, the seven mountains and all else. He resides in Arangam city surrounded by flower groves that hum with bees. O, see his neck elevates my spirits!
