(719)
மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
பதவுரை
| மன்னுபுகழ் |
– |
நிலை நின்ற புகழையுடைய |
| கௌசலை தன் |
– |
கௌஸல்யையினுடைய் |
| மணி வயிறு |
– |
அழகிய வயிற்றிலே |
| வாய்த்தவனே |
– |
பிள்ளையாகத் திருவவதரித்தவனே! |
| தென் இலங்கை கோன் |
– |
தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய |
| முடிகள் |
– |
பத்துத் தலைகளையும் |
| சிந்துவித்தாய் |
– |
சிதறப் பண்ணினவனே! |
| செம் பொன் சேர் |
– |
செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய் |
| கன்னி |
– |
அழிவில்லாததாய் |
| நல் |
– |
விலக்ஷணமாய் |
| மா |
– |
பெரிதான |
| மதில் |
– |
திருமதிளாலே |
| புடை சூழ் |
– |
நாற்புறமும் சூழப்பட்ட |
| கணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற |
| என் கருமணியே |
– |
நீலரத்நம் போன்ற எம்பெருமானே! |
| என்னுடைய இன்அமுதே |
– |
எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே! |
| இராகவனே! |
– |
ஸ்ரீராமனே! |
| தாலேலோ |
– |
(உனக்குத்) தாலாட்டு |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதில், முதலடியால் அவதாரமும், இரண்டாமடியால் அவதார ப்ரயோஜநமும் சொல்லப்பட்டன வென்க. கணபுரம் – கண்ணபுரம் என்பதன் தொகுத்தல், திருக்கண்ணபுரம் என்னும் இத்திவ்யதேசம் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று. இத்தலத்தில் சௌரிராஜப்பெருமாள் மிகவும் வரப்ரஸாதி என்பது ப்ரஸித்தம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வர் ஆகிய ஐவர்களால் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற சிறந்த திவ்யதேசம் இது. தாலேலோ – வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்; தால் – நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழில் இத்தாலாட்டை எட்டாம் மாதத்திற் கூறுவது கவிமரபு.
English Translation
Sleep, my sweet child Raghava, Talelo! My Dark-gem-Lord of Kannapuram, surrounded by high stone walls inlaid with gold! You are the jewel of the precious womb of world-famous Kousalya. You severed the heads of Lanka’s king Ravana.
