(602)

(602)

கணமா மயில்காள் கண்ணபி ரான்திருக் கோலம்போன்று

அணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன்

பணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்

மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே

பதவுரை

கணம்

–

கூட்டமாயிருக்கிற
மா மயில்காள்!

–

சிறந்தமயில்களே!
கண்ணபிரான்

–

கண்ணபிரானுடைய
திருகோலம் போன்று

–

அழகிய வடிவு போன்ற வடிவையுடையீராய்க் கொண்டு
அணி மா நடம் பயின்று

–

அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி
ஆடுகின்றீர்க்கு

–

ஆடுகின்ற உங்களுடைய
ஆடி

–

திருவடிகளிலே
வீழ்கின்றேன்

–

ஸேவிக்கின்றேன். (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்)
பணம் ஆடு அரவு அணை

–

படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
பல்பல காலமும்

–

காலமுள்ளதனையும்
பள்ளி கொள்

–

பள்ளி கொண்டருளாநின்ற
மணவாளர்

–

அழகியமணவாளப் பெருமாள்
நம்மை வைத்த பரிசு

–

எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம்
இது காண்மின்

–

இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-சிலமயில்கள் கூட்டங்கூட்டமாக இருந்துகொண்டு கூத்தாடுவதைக்கண்டு தரிக்கமாட்டாதாளாய் ‘இக்கூட்டத்தாடுதலை நிறுத்துங்கள், உங்கள்காலிலே விழுகிறேன்‘ என்கிறாள்.

“நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமால்“ (பெரியாழ்வார் திருமொழி) என்னப்பட்ட எம்பெருமானுக்கு இவை ஸ்மாரகங்களாய்க்கொண்டு நலிகிறபடியால் “கண்ணபிரான் திருக்கோலம்போன்று“ என்கிறாள். அடிவீழ்கின்றேன் – இக்கூத்து ஒழியவேணுமென்று ப்ரபத்திபண்ணுகிறேனென்றபடி.

இப்படி இவள்சொன்னவாறே, அந்தோ! பெரியாழ்வார் திருமகளாகப் பெற்ற பெருமைவாய்ந்த நீ இப்படிச் சொல்லத்தகுமோ? உன்காலிலேயன்றோ நாங்கள் விழக்கடவோம்“ என்று அம்மயில்கள் சொல்வனவாகக்கொண்டு, கூறுகின்றாள். (பணமாடரவணையித்பாதி) “சென்றால்குடையாம் இருந்தால் சிங்காசன்மாம்“ என்றபடி – திருவனந்தாழ்வானை ஸர்வப்ரகாரங்களாலும் அடிமைகொண்டு சிறப்பிக்குமவர் என்னை உங்கள் காலிலே விழும்படிசெய்த பின்பு நான் செய்யலாவதுண்டோ? என்கிறாள்.

“பணவாளரவணை“ என்றும்பாடமுண்டு, அப்பாடத்தில், படங்களையும் ஒளியையுமுடைய அரவு என்க. வாள் – ஒளி.

English Translation

O Flocks of Peacocks sporting my Lord Krishna’s hues! Yes, you are artful dancers; but I fall at your feet, pray stop. The bridegroom sleeps eternally on a hooded serpent. See the plight he has brought on me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top