(601)

(601)

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல்நல் வேங்கட

நாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின்

ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து

கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே

பதவுரை

பாடும்

பாடுகின்ற
குயில்காள்!

குயில்களே!
ஈடு

(கர்ண கடோரமான) இக்கூசல்
என்ன பாடல்?

என்னபாட்டு
நல்வேங்கடம் நாடர்

விலக்ஷணமான திருவேங்கடமலையை இருப்பிடமாகவுடைய பெருமான்
நமக்கு

என்விஷயத்திலே
ஒரு வாழ்வுதந்தால்

ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக்கொடுப்பனாகில் (அப்போது)
வந்து பாடுமின்

(நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள்
ஆடும்

ஆநந்தத்தாலே) ஆடுகின்ற
கருளன்

பெரிய திருவடியை
கொடி உடையார்

த்வஜமாகக் கொண்டிருக்கிற அப்பெருமான்
அருள் செய்து

க்ருபைபண்ணி
வந்து கூடுவர் ஆயிடில்

(இங்கே) வந்து சேர்வனாகில்
கூவி

(அப்போது உங்களை) வரவழைத்து
நும் பாட்டுக்கள்

உங்களது பாட்டுக்களை
கேட்டும்

கேட்போம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எந்தப்பக்கம் நோக்கினாலும் ஒவ்வொரு புஷ்பம் கண்ணிலே தோற்றி ஹம்ஸகமாயிருந்தபடியாலே ‘கண்ணைமூடிக் கொண்டோமாகில்‘ சுகப்படலாம் என்று நினைத்துக் கண்ணை மூடிகொண்டாள். உடனே குயில்களின் பாட்டுக்கள் செவிப்பட்டன. அவற்றைக்கேட்டுத் தரிக்கமாட்டாதாளாய் அக்குயில்களே நோக்கி ‘நீங்கள் ஏன் இப்படி கர்ணகடோரமாகக் கத்துகின்றீர்கள்? போரும்  போரும்; உங்கள் பாட்டை நிறுத்துங்கள்‘ என்கிறாள்.

இரண்டருகும் நெருப்புப்பற்றி யெரியா நிற்கச் செய்தே நடுவேயிருந்து சந்தனம் பூசுவாரைப்போலே யிருந்ததீ!, உங்கள் பாட்டைக் கேட்கும்படியாகவோ இப்போது என்னுடைய தஸையிருப்பது; ஐயோ! என்னபாட்டுப் பாடுகிறீர்கள். ஸம்ஸ்லேஷரஸாநுபவம் செல்லும்போது பாடத்தக்க பாட்டுக்களை நீங்கள் விஸ்லேஷத்தில் பாடாநின்றீர்களே!; பாவிகள்! பாடினது போரும்; எம்பெருமான் இங்கேயெழுந்தருளி என்னை வாழ்விக்குங்காலம் வாய்க்குமாகில் அப்போது நீங்கள் இங்குவந்து ஆசைதீரப் பாடுங்கள் என்கிறாள் முன்னடிகளில்.

“எம்பெருமான்“ என்று பொதுப்படையாகச் சொல்லாமல் “நல்வேங்கடநாடர்“ என்று சிறப்பித்து அருளிச்செய்துள்ளமையால், அந்தஸ்வாரஸ்யத்துக்கு இணங்கப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார் – “ஆற்றுப்பெருக்கில் முன்னே சினையாறுபடுமாபோலே அவன் வரவுக்குறுப்பான நற்குறிகள் உண்டாயிராநின்றன; அது பலித்தால் வந்து பாடப்பாரிகோள். ஆச்ரிதர்க்கு அருமைப்படவேண்டாதபடி வந்து நிற்கிறவராய்த்து பரமபதம் கலவிருக்கை யாயிருக்க, அத்தைவிட்டுத் திருமலையிலே வந்து முகங்காட்டினார். ஸ்ரீவில்லிபுத்தூரிலேபோலேயிருந்து பயணம்“.

நமக்கொருவாழ்வுதந்தால் என்றது – உங்கள்பாட்டைக் கேட்கும்படியான காதை எனக்குத் தந்தால் என்றபடி; இப்போது ஸர்வேந்த்ரியங்களும் அவனாலே அபஹரிக்கப்பட்டு அழிந்துகிடக்கின்றமை அறிக. வந்துபாடுமின் – இப்போது உங்களுடைய காட்சி எனக்கு அஸஹ்யமாயிருக்கையாலே ஒழிந்துபோங்கள் என்றபடி.

வேங்கடநாடர்வந்து உனக்கு வாழ்வுகொடுக்கும் மையம் எங்களுக்கு எப்படித்தெரியும்? தெரிந்தாலன்றோ அந்த ஸமயத்தில் நாங்கள்வந்து பாடக்கூடும் என்று அக்குயில்கள் கேட்பனவாகக்கொண்டு கூறுகின்றாள் (ஆடுங்கருளக்கொடியுடையார் இத்யாதி) அவருடைய வரவுக்கு ஸூசகமாகப் பெரிய திருவடி நாயனார் சிறகைவிரித்துக் கூத்தாடிக்கொண்டு வருவர்; அந்த அடையாளத்தைக் கொண்டே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அப்படி நீங்கள் தெரிந்துகொள்ளாவிட்டாலும் அப்போது நானே உங்களை வரவழைத்து உங்கள் பாட்டைக்கேட்பேன் போங்கள் என்கிறாள்.

English Translation

Enough, O Singing Koels! What song is this? If the Lord of Venkatam promises a new life, come again. He is the Lord bearing the dancing Garuda-banner. If he comes to me, we will both sit and hear you sing.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top