(603)
நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக் கினியொன்று போதுமே
பதவுரை
| நடம் ஆடி |
– |
கூத்தாடிக்கொண்டு |
| தோகை விரிக்கின்ற |
– |
தோகைகளை விரிக்கிற |
| மா மயில்காள் |
– |
சிறந்தமயில்களே! |
| உம்மை |
– |
உங்களுடைய |
| நடம் ஆட்டம் காண |
– |
கூத்தைப் பார்ப்பதற்கு |
| பாவியேன்நான் |
– |
பாவியனநான் |
| ஓர் முதல் இலேன் குடம் ஆடு கூத்தன் |
– |
குடக்கூத்தாடினவனான |
| கோவிந்தன் |
– |
கோபாலக்ருஷ்ணன் |
| கோமிறை செய்து |
– |
கேட்பாரற்ற மிறுக்குக் களைப்பண்ணி |
| எம்மை |
– |
என்னை |
| உடை மாடு கொண்டான் |
– |
ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினான் |
| இனி |
– |
இப்படியிருக்க |
| ஒன்று |
– |
(என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம் |
| உங்களுக்கு |
– |
உங்களுக்கு |
| போதுமே |
– |
தகுமோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘உங்கள் கூத்தைநிறுத்துங்கள்‘ என்று மயில்களின் காலிலே இவள் விழுந்து வேண்டிக்கொள்ளவே, அம்மயில்கள் இவளுடைய எளிமையை நன்று தெரிந்து கொண்டு ‘இவளுக்கு நாம் அநிஷ்டமானதைச் செய்தால் நம்மை இவள் தண்டிப்பளோவென்று நாம் அஞ்சவேண்டா; இவள் புகலற்றுக்கிடக்கின்றான்; இவளை நாம் எப்படி ஹிம்ஸித்தாலும் கேட்பாரில்லை என்று எண்ணி முன்னிலும் அதிகமாகத் தோகைகளை விரித்துக் கூத்தாடத்தொடங்கின; அவற்றை நோக்கி மீண்டும் தன் அவஸ்தையை முறையிட்டுக்கொள்கிறாள்.
நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள் – தோகைவிரித்து நடமாடுகின்ற மாமயில்காள்! என்க. உள்ளபழயே அந்வயிப்பதும் ஒக்கும். (உம்மை இத்யாதி) கண்ணுடையவர்கள் உங்கள் கூத்தைக் கண்டால் பரமாநந்தம் பெறுவர்கள் என்பதில் தட்டில்லை; கண் இழந்திருக்கிற நான் உங்கள் கூத்தை எங்ஙனே காணவல்லேன்? முதல் இலேன் என்றது – காண்பதற்கு முக்யஸாதநமான கண்ணையுடையேனல்லேன் என்றபடி. “என்ஐம்புலனும் எழிலுங்கொண்டு“ என்றபடி எல்லா இந்திரியங்களையுங் கொள்ளை கொண்டானிறே எம்பெருமான்.
“பாவியேன் நானோர்முதலிலேன்“ என்று சொன்னதை விரித்துரைக்கின்றனா பின்னடிகளில் நாற்சந்தியிலே குடக்கூத்தாடி அக்கூத்திலே எல்லாரை ஈடுபடுத்திக்கொண்டவனாய், பசுக்களுக்கும் இடையர்க்குங்கூட பண்ணி என்னுடைய ஸர்வஸ்பத்தையும் கொள்ளைகொண்டான், இப்படிப்பட்ட தஜையிலே நீங்களும் என்னைவந்து ஹிம்ஸிப்பது தகுதியோ? என்கிறாள்.
கோமிறை -கோ- அரசர்கள், மிறை – மிறுக்கு; அரசர்கள் செய்யும்படியான மிறுக்காவது ஈரநெஞ்ச இளநெஞ்சு இல்லாமல் புரியங் கொடுமைகள் கொடுமைகள். கோக்கள் மிறுக்கு செய்யுமாபோலே செய்து என்படி. அரசர்கள் எதுசெய்தாலும் கேட்பாரில்லையே.
(எம்மையுடை மாடு கொண்டான்) எம்மை – எங்களுடைய உடை – ஆடையையும், மாடு – செல்வத்தையும், கொண்டான் என்றும்; எம்மையுடை- எங்களுடைய , மாடு – ஸர்வஸ்வத்தையும் என்றும் பொருள்கொள்ளலாம். ‘மாடு பொன் பக்கஞ் செல்வம்‘ என்ற நிகண்டு அறியத்தக்கது. திருவாய்மொழியில் “மாலுக்கு வையமளந்த மணாளற்கு“ என்ற திருவாய்மொழியிற் கூறியபடி எல்லாவற்றையும் இழந்துகிடக்கிற என்னை நீங்களும் நலிகை ப்ராப்தமன்று என்கிறாள்.
English Translation
O Good Peacocks spreading your feathers in preparation for another dance! This sinner self has nothing to give you for your performance. The pot-dancer Govinda has plundered my all, and left me a pauper. Now is it proper for you to dance?
