(600)
முல்லைப் பிராட்டி நீயுன் முறுவல்கள் கொண்டுஎம்மை
அல்லல் விளைவியே லாழிநங் காய்உன்ன டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந் திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே
பதவுரை
| முல்லைப் பிராட்டி! |
– |
அம்மா! முல்லைக் கொடியே! |
| ஆழி நங்காய்! |
– |
கம்பீரமான இயல்வையுடையாய்! |
| நீ |
– |
நீ |
| உன் முறுவல்கள் கொண்டு |
– |
(எம்பெருமானது முறுவல்போன்ற) உனது விகாஸத்தாலே |
| எம்மை |
– |
என்விஷயத்திலே |
| அல்லல் விளைவியேல் |
– |
வருத்தத்தை உண்டாக்க வேண்டா, |
| உன் அடைக்கலம் |
– |
(இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன். |
| சொல்லை அரக்கியை |
– |
வரம்புகடந்தவளான சூர்ப்பணகையை |
| மூக்கு அரிந்திட்ட |
– |
மூக்கறுத்துத் துரத்தின |
| குமரனார் |
– |
சக்ரவர்த்தி திருமகனாருடைய |
| சொல்லும் |
– |
வார்த்தையே |
| பொய் ஆனால் |
– |
பொய்யாய் விட்டால் |
| நான் பிறந்தமையும் பொய் அன்று |
– |
நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கோவைக்கொடியில் நின்றும் கண்ணைத்திருப்பி வேறோரிடத்தே வைத்தாள், அங்கே முல்லையானது நன்றாகப் பூத்துக்கிடந்தது, அதைக்கட்டவாறே எம்பெருமானுடைய முறுவல் நினைவுக்கு வரவே ஆற்றமாட்டாதாளாய் அதின்காலிலே விழுகிறாள்.
வழிபறிக்கவந்த கள்ளனைக் கண்டால் ‘பிரானே! நாயனே! அப்பனே! என்னுமாபோலே முல்லைப்பிராட்டி என்கிறாள் அம்மா முல்லைக்கொடியே கோடல்பூக்களுக்கும் மேல்தோன்றிப் பூக்களுக்கும் கோவைக்கொடிக்கும் ஒரு வாறு தப்பிப் பிழைத்தோமென்று நான் மகிழ்ந்திருக்கையில், நீ உன்விகாஸத்தைக்காட்டி என்னை துன்பப்படுத்துவது தகுதியோ? இனி இப்படி என்னைத் துன்பப்படுத்தாதே, உன்காலிலேவிழுந்து உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன், என்னை ஹமஸிக்கவேண்டாமம்மா! என்கிறாள்.
ஆழி நங்காய்! – ஆழியென்றதனால் – காம்பீர்யமுடைமை சொல்லப்படுகிறது, நங்காய் என்றதனால் – பரிபூர்த்தி சொல்லப்படுகிறது. உலகில் துதிப்பவர்கள் இப்படிப்பட்ட குணங்களையிட்டுத் துதிப்பது வழிக்கமாதலால் ஆண்டாளும் இம்முல்லைக்கொடியை அங்ஙனே துதிக்கின்றாளென்க. இனி, ஆழி என்றதனால் – வட்டமாயிருக்குந்தன்மை சொல்லிற்றாகவுமாம். முல்லைச்செடியை முட்டாக்கிட்டாற்போல் புஷ்பங்கள் வட்டமாகப் பூத்திருக்குமிறே.
இவள் பெரியாழ்வார் திருமகளாயிருந்துவைத்து எம்பெருமானையும் தன்காற்கீழே வீழ்த்தவேண்டியிருக்க இவள்போய் அசேதங்களின் காலிலே விழும்படி என்னை! என்று சிலர் நினைக்கக்கூடும் என்றெண்ணி, “எனக்குப் பெரியாழ்வார் திருவயிற்றிற் பிறப்பு அசிஞசித்கரம்“ என்கிறாள் பின்னடிகளில்.
கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் – இராமபிரான், அவருடைய சொல்லாவது – “***“ (மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந) அதாவது – ஒருவன் மெய்யான் அன்போடு என்னை வந்து பற்றாவிட்டாலும் அன்பன்போல் பாவனை செய்துகொண்டு வந்துசேர்ந்தானேலும் அவனையும் நான் ஒருவிதத்திலும் கைவிடமாட்டேன் என்ற வார்த்தை. இரவுபகல் மாறாடினாலும் என்னுடைய வார்த்தையானது எந்த க்ஷணத்திலும் எள்ளளவும் மாறாடமாட்டாது என்ற அவருடைய வார்த்தையை என்னளவில் பொய்யாய்விட்டபோது, பெரியாழ்வார் வயிற்றிற் பிறப்பா எனக்குக் கார்யகரமாகப் போகிறது? என்று அதிலும் அதிசங்கிக்கிறாள்.
கொல்லையரக்கி என்றது – வரம்பு அழிந்தசெயலையுடையவள், அதாவது – மரியாதையைத் தப்பி நடந்தவள் என்றபடி. பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப்பற்றி உய்ந்து போகலாமாயிருக்க அங்ஙன் செய்யாதே பிராட்டியின்மீது விபரீதமான எண்ணங்கொண்டு அவளை விழுங்கப் போனாளிறே.
சூர்பணகை மூக்கறுப்புண்டு பொறுக்கமுடியாத துக்கத்தோடும் பரிபவத்தோடும் கதறிக்கொண்டு போகிறவள். பெருமானை மனம்போனபடியே நிந்திக்கவேண்டி யிருக்கச்செய்தேயும் “தருணௌ ரூபஸம்பந்நௌ“ என்று பருவத்துக்கும் அழகுக்கும் தோற்றுப்போனமை தோற்றப் பேசினாளாகையாலே “அரக்கியை முக்கரிந்திட்ட குமரனார்“ என்கிறாள்.
“குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே என்றதற்கு- “அப்பெருமானுடைய வார்த்தை பொய்யாய்விட்டாலும் என்பிறப்பு பொய்யாய்விடாதிறே“ என்று பொருள் சொல்லலாமாயினும் வியாக்கியானத்திற்குச் சேராது – “பொய்யன்றே என்றது பொய்யாமிறே என்கை“ என்றிறே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த்து. அன்றே – அன்றோ என்றபடி.
English Translation
Madam Mullai creeper! Pray do not torture me, with your white smiles; I fall at your feet, my Lady! My Lord is the prince who maimed the defiant demoness. If his promises be false, I too was never born.
