(599)

(599)

கோவை மணாட்டி நீயுன் கொழுங்கனி கொண்டுஎம்மை

ஆவி தொலைவியேல் வாயழ கர்தம்மை யஞ்சுதும்

பாவி யேன்தோன்றிப் பாம்பணை யார்க்கும்தம் பாம்புபோல்

நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே

பதவுரை

கோவை மானாட்டி

அம்மா! கோவைக் கொடியே!
நீ

நீ
உன்

உன்னுடைய
கொழுங்கனி கொண்டு

அழகியயழங்களாலே
எம்மை

என்னுடைய
ஆவி

உயிரை
தொலைவிவேல்

போக்கலாகாது.
வாய் அழகர் தம்மை

அழகியவாய்படைத்த பெருமான்விஷயத்திலே
அஞ்சுதும்

பயப்படாநின்றேன்!
பாவியேன்

பாவியானாநான்
தோன்றி

பிறந்தபின்பு
நாணிலியேனுக்கு

லஜ்ஜை யற்றவளான என் விஷயத்திலே
பாம்பு அணையார்க்கும்

சேஷசாயியான பெமாளுக்கும்
தம் பாம்பு போல்

தமது படுக்கையான திருவனந்தாழ்வானுக்குப்போல
நாவும் இரண்டு உள ஆயிற்று

இரண்டு நாக்குகள் உண்டாயின.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மேற்புறங்களில் நின்றும் கண்ணைமீட்டுப் பக்கங்களில் நோக்கினாள் அங்கே ஒரு செடியிலே கோவைக்கொடி படர்ந்து பழுத்துக்கிடந்தன; அவற்றை நோக்கிப் பேசுகின்றாள். கோவைக்கனிகள் எம்பெருமானுடைய திருவதரத்திற்கு ஸ்மாரகங்களாய் இருப்பவையாதலால் அவ்வழியாலே அவை தன்னை நலியவே அந்த நலிவுபொறுக்கமாட்டாமற் சொல்லுகிறாளென்க.

கீழ்பாட்டுக்களில் “கார்க்கோடல்பூக்காள்!“ என்றும் “மேல்தோன்றிப்பூக்காள்!“ என்றும் சொன்னதுபோல் இப்பாட்டிலும் ‘கோவைக்கொடிகாள்!‘ என்றாவது, ‘கோவைக்கனிகாள்!‘ என்றாவது சொல்லாமல் கோவைமணாட்டி! என்றதென்னென்னில்; ‘கொடியாகையாலே ஸாபத்ந்யத்தாலே நலிந்தாப்போலேயிராநின்றது“ என்றருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை, வடமொழியில் கொடிக்கு வாசகமாகிய லதா, வல்லீ முதலிய ஸப்தங்கள் ஸ்திரீலிங்கமாதல் அறிக. ஸத்ரீகளைக் கொடிகளாகவே கூறுதலும் வழக்கம். இனி மாணாட்டி என்று மணமுனைடமை சொல்லிற்றாகவுமாம். அதாவது பரிமளத்தை உடைத்தாகை.

ஓ! கோவைக்கொடியே நீ உனது சிறந்தகனிகளைக்காட்டி என் உயிரைச் சிதைக்கவேண்டா; உன்கனிகளைக் காணும்போதே திருமாலிருஞ்சோலையழகருடைய திருவதாரம் நினைவுக்கு வந்து மிகவும் தளர்ந்தொழிவேன்; அதுபற்றி எனக்கு மிகவும் அச்சமாயிருக்கிறது என்கிறாள் முன்னடிகளில்.

“***“ (அபயம் ஸர்வபூதுப்யோ ததாமி) என்று அபயப்ரதாநம் பண்ணியருளினவன் விஷயத்தில் பயப்பட ப்ரஸக்தி ஏது? என்று அவை கேட்கக்கூடுமென்றுகொண்டு, அவ்வெம்பெருமானுடைய வாக்கு என்னளவில் பொய்யாய்விட்டதென்கிறாள் பின்னடிகளில். பாவியான நான் பிறப்பதற்குமுன் அவன் “ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லை சொல்லுவான்“ என்னும் ஸத்யவாக்காயிருந்தானாகிலும், நான் தோன்றினபிறகு என்னுடைய பாவத்தினால் அவன் அஸத்பவாக்காய்விட்டான். சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய்விட்டான். நாக்கு ஒன்றாயிருந்தாலன்றோ சொல்லும் செய்கையும் ஒன்றாயிருக்கும் இரட்டை நாக்குப் படைத்தவனான திருவனந்தாழ்வானோடு இடைவிடாதசேர்த்தியாலே இவனும் அவனைப்போலே இரண்டுகாக்குப் பெற்றானாயினான், “***“ (அபயம் ததாமி) என்ற நாக்கு இப்போது இல்லை என்கிறாள்.

தம்பாம்புபோல் – ‘தவிஜிஹ்வ‘ என்றுமு ‘த்விரஸந‘ என்றும்சொல்லப்படுமிறே பாம்பு. (நாவும் இரண்டுளவாயிற்று) நாக்கு ஒன்றாயிருந்தால் வாக்கும் ஒன்றாயிருக்கும்; வாக்கு இரண்டுபட்டபடியால் நாக்கும் இரண்டாய் விட்டதென்றிருக்கிறாள்.

நாணிலியேனுக்கே – நான் தவிர மற்றபேர்கள் விஷயத்தில் அவன் ஸத்யவாக்கவே இருக்கக்கூடும். வெட்கங்கெட்ட என்விஷயத்தில் மாத்திரமே அவன் த்விஜிஹ்வனாய் விட்டானென்கிறாள், இப்படி அவன் பொய்யனாயிருக்கச் செய்தேயும் நான் அவனையே வாய்வெருவாநின்றமைப்பற்றித் தன்மை வெட்கமற்றவளாகக்ச் சொல்லிக்கொள்ளுகிறாள்.

English Translation

Madam Kovai creeper! Pray do not torment me. I shudder to see your berries, as beautiful as the lips of the Lord. The shameless sinner that I am! By me, the Lord has become two tongued, like his serpent-companion.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top