(581)
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.
பதவுரை
| வேங்கடத்து |
– |
திருமலையிலே |
| தேன் கொண்ட மலர் சிதற |
– |
தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி |
| திரண்டு ஏறி பொழிலீர்காள் |
– |
திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும் |
| வான்கொண்டு கிளர்ந்து எழுந்த |
– |
ஆகாயத்தைக் கபளீகரித்துக்கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள |
| மா முகில்காள்! |
– |
காளமேகங்களை! |
| ஊன் கொண்டவள் உகிரால் |
– |
வலியள்ளவையாய் கூர்மையுடையவையான நகங்களாலே |
| இரணியனை உடல் இடந்தான் தான் |
– |
ஹிரண்யாஸுரனுடைய உடலைப் பிளந்தெறிந்த பெருமான் |
| கொண்ட |
– |
என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன |
| சரிவளைகள் |
– |
கைவளைகளை |
| தரும் ஆகில் |
– |
திருப்பிக் கொடுப்பதாக விருந்தால் |
| சாற்றுமின் |
– |
எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முன்னடிகளிரண்டும் மேகவிளி. ஆகாசத்தை விளாக்குலைகொண்டு – எங்குப்பார்த்தாலும் நீங்களேயாய்ப் பரந்து கிடக்கின்ற மேகங்களை! தேன் நிறைந்த நல்ல புஷ்பங்கள் சிதறி விழும்படி அவற்றுக்குக் கெடுதியை விளைத்துக் கொண்டு நீங்கள் மழைபொழிவதனால் என்ன பயன்? பிறர்க்குத் தீங்கை விளைப்பதோ உங்களுக்குப் புருஷார்த்தம், இடர்ப்பட்டாரை இன்பக்கடலில் ஆழ்த்த வேண்டாவோ நீங்கள்? முன்னடிகளில் உட்கருத்து.
விஸ்லேஷ காலத்திலே எனக்கு உத்தீபங்களாய்க்கொண்டு தோற்றுகின்ற மலர்களை நீங்கள் சிதறவடிப்பது எனக்குச் சந்தோஷந்தான், ஆகிலும் அவ்வளவு செய்தமாத்திரத்தால் பயனில்லை, திருவேங்கடமுடையானோடே நான் ஸம்ஸிலேஷம்டுபெற்று இம்மலர்களைப் போகோபகரணமாகக் கொண்டு களிக்கும்படியாகச் செய்துவைக்கவேணும் என்பதாகவும் கருத்துக்கொள்வர். அநிஷ்டத்தைத் தவிர்ப்பதோடு இஷ்டத்தைக் கொடுப்பதுஞ செய்யவேண்டியதாதலால், இப்போது எனக்கு அநிஷ்டங்களான மலர்களைச் சிதறவடிப்பது மாத்திரம் போதாது, பகவத் ஸம்ஸ்லேஷமாகிற இஷ்டப்ராப்தியையும் பண்ணித்தரவேஞ மென்கை.
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமின் – எம்பெருமான் ஆண்டாளிடமிருந்து சரிவளைகள் கொண்டானோவென்னில், அவன் இவளைவிட்டுப்பிரிந்த்தனால் இவள் மேனிமெலிந்து வளைகள் கழன்றுபோகப் பெற்றாளாதலால் இவ்வளை நீங்குதலுக்கு அவனே காரணமாகின்றமைபற்றித் தருகையாவதென்னென்னில், மறுபடியும் ஸம்ஸ்லேஷித்து வளைகள் தங்கும்படிசெய்தல். ஆகவே சரிவளைகள் தருமாகில் என்றது – அவ்வெம்பெருமான் என்னோடுவந்து புணரத் திருவுள்ளம்பற்றியிருக்கிறானாகில் என்றபடி. சரி என்பதே கைவளைக்குப் பெயராயிருக்க, சரிவளை என்றது “கர்ணகுண்டலம், – கரிகலபம்“ என்பனபோலவாம். சாற்றுமின் – அவனுடைய ஆபிமுக்யத்தை அறிந்துகொண்டு என் நிலைமையை அவனுக்குச் சொல்லுங்கள் என்கை. இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்தி – (சாற்றுமினே) அவன் தரிலும் தருகிறான். தவிரிலும் தவிருக்கிறான். நீங்கள் அறிவித்துப் போருங்கோள்“.
அன்றியே, அவனுடைய திருவுள்ளத்தை நீங்கள் அறிந்துகொண்டு அதனை என்னிடம்வந்து சொல்லுங்கள் என்றுமாம்.
English Translation
O Great Clouds, piercing through the sky, raining nectared flowers on the hills of Venkatam over the Lord who tore the Asura’s chest with lion-claws! Ask if he would return the bangles he took from me.
