(582)
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்துஎன்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே.
பதவுரை
| சலம் கொண்டு |
– |
ஸமுத்ரஜலத்தை முகந்து கொண்டு |
| கிளர்ந்து எழுந்த |
– |
மேற்கிளம்பி விளங்குகின்ற |
| தண் முகில் காள் |
– |
குளிர்ந்த மேகங்களே! |
| மா வலியை |
– |
மஹாபலியிடமிருந்து |
| நிலம கொண்டான் வேங்கடத்து |
– |
பூமியை ஸ்வாதீநப்படுத்திக் கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே |
| நிரந்து |
– |
பரவி |
| ஏறி |
– |
உயரவிருந்து |
| பொழிவீர் காள்! |
– |
பொழிகின்ற மேகங்களே! |
| உலங்கு உண்ட |
– |
பெருங்கொசுக்கள் புஜித்த |
| விளங்கனி போல் உள்மெலிய |
– |
விளாம்பழம்போல நான் உன்மெலியும் படி |
| புகுந்து |
– |
என்னுள்ளே பிரவேசித்து |
| என்னை |
– |
என்னுடைய |
| நலம் கொண்ட |
– |
நிறைவுகளை அபஹரித்த |
| நாரணற்கு |
– |
நாராயணனுக்கு |
| என் நடலை நோய் |
– |
எனது கஷ்டவ்யாதியை |
| செப்புமின் |
– |
தெரிவியுங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதிலும் முன்னடிகளிரண்டும் மேகவிளி. ‘கடலில்நீரை முகந்துகொண்டு கிளம்பின குளிர்ந்த மேகங்களே! என்றது – உங்களுடைய வடி வழகும் குளிரிச்சியுமெல்லாம் போக்யமாகத்தானிருக்கிறது, அதில் ஒரு குறையில்லை என்றபடி பின்னை எந்த அம்ஸத்தில் குறையுள்ளதென்றால், அதுதோன்றச் சொல்லுகிறாள் “மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்!“ என்று. ப்ரயோஜநாந்தரபரரான தேவர்களுக்காத் தன்னை யாசகனாக்கிக் காரியம்செய்த பெருமான் எழுந்தருளியிருக்கிற தேஸத்திலே வர்த்திக்கிற நீங்கள் அநந்யப்ரயோஜநையான் எனக்காகக் காரியஞ்செய்ய வேண்டாவா? எம்பெருமான் அஸுரன் பக்கலிலேபோய்க் காரியம் செய்ததுபோல் நீங்களும் ஒரு அஸுரன் பக்கலிலேபோய்க் காரியஞ் செய்ய வேணுமென்று நான் சொல்லுகிறேனோ? உடையவன் பக்கலிலேயன்றோ உங்களைப் போகச்சொல்லுகிறேன். என் காரியத்தைச் செய்யாதது உங்களுக்குக் குறையன்றோ என்கை.
“(ஏறிப் பொழிவீர்காள்!) சாய்கரத்தை உயரவைத்துத் தண்ணீர்வார்ப் பாரைப்போலே, காணவே விடாய்கெடுப்படி உயரவேறி வர்ஷிக்கிறிகோளிறே, அவன் வர்த்திக்கிற தேஸித்திலே வர்த்தித்து அவனோடே உங்களுக்கு ஒரு ஸம்பந்தமுண்டானால் அவன் ஸ்வபாமுண்டாக வேண்டாவோ?“ என்பது வியாக்கியன் ஸ்ரீஸூக்தி.
உனக்காக யாம் செய்யத்தக்கது என்னவென்று அந்தமேகங்கள் கேட்க அவற்றுக்குச் செய்யத்தக்கது சொல்லுகிறாள் பின்னடிகளில் உலங்கு என்பது பெருநுளும்பு, (விளாம்பழத்தை மொய்க்கிற கொசுக்கள்,) அவை விளாம்பழத்திலே மொய்த்தவாறே அதின் ரஸமெல்லாம் சுவறிப்போம், அதுபோல என்னுடம்போடே அணைந்து என் ஸர்வ ஸ்வத்தையும் அபஹரித்த பெருமானுக்கு நான் இப்படி நோவுபட்டுக் கிடக்கிறே னென்பதைத் தெரிவியுங்கள் என்கிறாள்.
சலம் – ஜலம், நலம் – பெண்மைக்கு உரிய நரண், மடம், அச்சம் முதலிய குணங்கள். நடலைநோய் – நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்ப்படுகிறநோய்.
English Translation
O Cool dark clouds, laden with water! Go and pour over Venkatam, then tell him of my woe. He, — the Lord who took the Earth from Bali, — has dried me, like a wood-apple dried by hovering fruit files.
