(86)

(86)

தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்ப

படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல்

உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க

தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.

பதவுரை

சங்கிலிகை தொடர்

இரும்புச்சங்கிலியின் தொடர்பு
சலார்பிலார் என்ன

’சலார்பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு

தொங்குகின்றனவும்
பொன்

பொன்கயிற்றிற்கட்டியிருப்பனவுமான-
மணி

மணிகள்
ஒலிப்ப

ஒலிக்கவும்
படு

உண்டான
மும்மதம் புனல்

மூன்று வகையான மதநீர்
சோர

பெருகவும்
நின்று

இருந்துகொண்டு
வாரணம்

யானை
பைய

மெல்ல
ஊர்வது போல்

நடந்து போவது போல
கிண்கிணி

காற்சதங்கைகள்
உடன்கூடி

தம்மிலே தாம்கூட்டி
ஆரவாரிப்ப

சப்திக்கவும்
உடை

திருவரையில் கட்டிய
மணி

சிறு மணிகள்
பறைகறங்க

பறைபோல் சப்திக்கவும்
சார்ங்கம்

சார்ங்கமென்னும் வில்லை
பாணி

கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு

(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை

இளநடையை
நடவானோ

நடக்கமாட்டானோ?

[நடக்கவேணும். ]

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச் சதங்கை கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நேருமாதலால் இதற்கு ஓர் ஏற்ற உபமாநம் கூறுகின்றார் முன்னடிகளில்; யானையானது மதத்தின் மிகுதியால் கட்டுத்தறியை முறித்துவிட்டுக் காலிலிட்ட இருப்புச் சங்கிலியை யிழுத்துக்கொண்டு நடக்கையாலே அந்தச் சங்கிலித் தொடர் சலார்பிலாரென்று சத்திக்கவும், பொன் கயிற்றினால் கட்டித் தனது இருபுறத்திலும் தொங்கவிட்ட மணிகள் ஒலிக்கவும், மதநீர்பெருகவும் மெல்ல நடக்கும் யானை ஏற்ற உவமையாம்.  சலார்பிலார்-ஒலிக்குறிப்பு.  மூன்று+மதம்=மும்மதம்: “மூன்றனுறுப்பழிவும் வந்ததுமாகும்” என்னும் சூத்திரவிதி அறிக; கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூவிடங்களிலும் தோன்றும் மதம்.  வாரணம்- வடசொல்.  உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப-அரைச்சதங்கை (நழுவிவிழுந்து திருவடிகளிலேசேர்ந்து இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள்) தம்மிலெகூடிச் சப்திக்க என்றுமாம்.  இணைதாள்-தமக்குத்தாமே ஒப்பான திருவடிகள் என்றலுமொன்று.  சார்ங்கபாணி-வடசொற்றொடர்.  தளர்நடை-(திருவடிகளை நன்றாகப் பதியவைத்து நடக்கும் பருவமன்றாகையாலே) தட்டித் தடுமாறி நடக்கும் நடை.

English Translation

Jaunting like a rutted elephant with the clangour of chains and the chime of hanging bells, ichor oozing in three spots, will no my Lord Sarangapani come toddling? His waist-bells peeling, his ankle-bells joining in the din, is he going to come toddling now?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top