(31)
அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளிவளை யீர்வந்து காணீரே.
பதவுரை
| அதிரும் |
– |
கோஷிக்கின்ற |
| கடல்நிறம் |
– |
கடலினது நிறம்போன்ற |
| வண்ணனை |
– |
நிறத்தையுடைய கண்ணனுக்கு |
| ஆய்ச்சி |
– |
யசோதையானவள் |
| மதுரம் முலை ஊட்டி |
– |
இனிய முலைப்பாலை ஊட்டி, |
| வஞ்சித்து வைத்து |
– |
(மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறியவொண்ணாதபடி) ஏமாத்தி |
| பதறப் படாமே |
– |
தன் எண்ணம் தப்பாதபடி |
| பழ தாம்பால் |
– |
பழகின கயிற்றாலே |
| ஆர்த்த |
– |
கட்டிவைத்த |
| உதரம் இருந்த ஆ |
– |
வயிறு இருந்தபடியை |
|
காணீர்! |
||
| ஒளிவளையீர் |
– |
ஒளிமிக்க வளையையுடைய பெண்காள்! |
|
வந்து காணீர்!! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணபிரான் இளம்பிராயத்தில் கோகுலத்திலுள்ள இடையர் மனைகளில் எல்லாஞ் சென்று அவர்களது பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைத் திருடி உண்டதை அவ்விடைச்சிகள் வந்து முறையிட, அறிந்த யசோதை அக்குற்றத்திற்காக ஒரு தண்டனையாகக் கண்ணனை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலோடு பிணித்து வைத்தாளென்பது இதில் அறியத்தக்கது. ‘கடல்நிறவண்ணன்’ என்னாமல் ‘அதிருங் கடல்நிற வண்ணன்’ என்றது கண்ணனுடைய அடங்காத் தன்மையைக் காட்டும்.
English Translation
Bright bangled Ladies, come here and see the beautiful radiant stomach of the dark ocean hued Lord. His mother gave him sweet suck, then stealthily bound him with an old rope without rousing him.
