(978)
ஏனமுனாகியிருநிலமிடந்து அன்றிணையடியிமையவர்வணங்க,
தானவனாகம்தரணியில்புரளத் தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்,
தேனமர்சோலைக்கற்பகம்பயந்த தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து,
வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
பதவுரை
| முன் அன்று |
– |
முன்னொரு காலத்தில் |
| இணை அடி |
– |
(தனது) உபய பாதங்களைத் |
| இமையவர் வணங்க |
– |
தேவர்கள் வந்து வணங்குமாறு |
| ஏனம் ஆகி |
– |
மஹாவராஹரூபியாகி |
| இரு நிலம் இடந்து |
– |
விசாலமான பூ மண்டலத்தைக் கோட்டு நுனியாற் குத்தி யெடுத்தவனாயும், |
| தானவன் ஆகம் |
– |
இராவணணுடைய சரீரமானது |
| தரணியில் புரள |
– |
பூமியிலே (செத்துப்) புரளும்படி |
| தடசிலை குனித்த |
– |
பெரிய வில்லை வளைத்தவனாயுமிருக்கிற |
| என் தலைவன் |
– |
அஸ்மத் ஸ்வாமி |
|
(எங்கேயுள்ளான் என்னில்;) |
||
| வானவர் |
– |
தேவர்கள், |
| தேன் அமர் சோலை கற்பகம் பயந்த |
– |
தேன் நிறைந்த நந்தனவனத் திலேயுள்ள கல்ப வ்ருக்ஷங்கள் கொடுத்த |
| தெய்வம் நல் நறு மலர் |
– |
திவ்யமாய் நல்ல மணம் மிக்க பூக்களை |
| கொணர்ந்து |
– |
கொண்டு வந்து ஸமர்ப்பித்து |
| வணங்கும் |
– |
வணங்குமிடமாய் |
| கங்கையின் கரை மேல் |
– |
கங்கையின் கரையிலுள்ள தான |
| வதரி ஆச்சிரமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
| உள்ளான் |
– |
எழுந்தருளியிருப்பவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
முதற்பத்து-நான்காந்திருமொழி.
ஏனமுனாகி.
அவதாரிகை:-
கீழ்த் திருமொழியில் வதரிவணங்குதுமே என்று ஸ்ரீபதரிகாச்ரமத்திற்கு ஆதாரமான திருமலையை வணங்கப் பாரித்தார் ; பதரீநாதன் எழுந்தருளியிருக்கும் ஸந்நிதிமாத்திரம் இவர்க்கு உத்தேச்யமன்று; அந்த ஸந் நிதிக்கு ஆதாரமான திருமலை முழுதுமே உத்தேச்யமா கையாலே அது தன்னைப் பேசினார் கீழே. வழியடைவே மலையுச்சியிற்சென்று பதரிகாச்ரமமென்னும் ஸந் நிதியையும் அதில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீநரநாராயணப் பெருமாளையும் அநுபவித்துப் பேசுகிறதாயிருக்கிறது இத்திருமொழி. “தாட்கடிமையென்று தமையுணரார்க் கெட்டெழுத்துங் கேட்க வெளியிட்டருளுங் கேசவனை – வேட்கையொடு, போவதரிதானாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே, மாவதரியாச்சிரமத்து.” என்ற நூற்றெட்டுத் திருப்பதியந்தாதிப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது. முன்னொரு காலத்தில் குருசிஷ்யக்ரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் நன்கு விளக்குவதற்காக நானென்னும் சிஷ்யனும் நாராயணனென்னும் குருவுமாக ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எம்பெருமான் அவதரித்து, சிஷ்யனுக்குக் குரு திருமந்திரத்தை உபதேசித்தருளின விடம் இது என்பது ஸம்ப்ரதாயம்.
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.
ஏனமுனாகி யிருநிலமிடந்து அன்றிணையடி யிமையவர்வணங்க *
தானவனாகம் தரணியில் புரளத்தடஞ்சிலைகுனித்த வென் தலைவன் *
தேனமர்சோலைக் கற்பகம்பயந்ததெய்வநன்னறுமலர்கொணர்ந்து *
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (க)
***:- (ஏனமுனாகி.) ஸ்ரீதேவி பூதேவிகட்காக அரிய பெரிய காரியஞ்செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார். முதலடியில் பூதேவிக்குக் காரியஞ் செய்தமையும், இரண்டா மடியில் ஸ்ரீதேவிக்குக் காரியஞ் செய்தமையுஞ் சொல்லுகிறது. பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துப் போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியைக் கொணர்ந்து பழையபடி விரிப்பதற்காகவும், பூமிக்கு நேர்ந்த பிரளயாபத்தைப் போக்கியருளுதற்காகவும் திருமால் வராஹாவதாரம் செய்தருளினதை முதலடியிற் கூறினர். ஸ்ரீதசரத ராமனாய்த் தோன்றி இராவணனை ஸம்ஹரித்து ஸ்ரீ தேவியின் காரியம் செய்தமையை இரண்டாமடியிற் கூறினர். இமையவர் வணங்க என்பது நடுநிலைத் தீபகமாய் முன்னும் பின்னும் அந்வயிக்கும். “இமையவர் வணங்க ஏனமாகி” என்றும் “இமையவர் வணங்கத் தடஞ்சிலை குனித்த” என்றும் அந்வயிப்பது. தேவர்கள் வணங்கும்படியாக அவதரித்தவன் என்றும், தேவர்கள் வணங்கி வேண்டிக்கொண்டதனாலே அவதரித்தவன் என்றும் இருவகையும் பொருள் படும்.
தானவனாகம் தரணியில்புரள = இங்கே தானவன் என்று ராக்ஷஸராஜனா கிய இராவணனைச் சொல்லுகிறது. கெட்டகாரியஞ் செய்பவர்களை யெல்லாம் ஆஸுரயோனிகளென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே இராவணனைத் தானவ னென்னக் குறையில்லை. “தையலாள் மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்” என்று மேலேயும் அருளிச் செய்வர். ”ஏனமுனாகி” என்றெடுத்த வரா ஹாவதாரப்ரகரணத்திற்குச் சேர, தானவன் என்பதற்கு ஹிரண்யாக்ஷனென்கிற அஸுரனை அர்த்தமாகச் சொல்லலாமாயினும் தடஞ்சிலை குனித்த என்ற ஸ்வாரஸ்யம் பொருந்துகைக்காக இராவணனையே அர்த்தமாக அருளிச் செய் தார் பெரியவாச்சான் பிள்ளையும். இப்படி நிலமகளிருவர்க்கும் காரியஞ் செய்த பெருமான் தான் என்றைக்கும் அஸ்மதாதிகளுக்கும் காரியஞ் செய்வதற்காக ஸ்ரீபதரிகாச்ரமத்திலே நித்ய ஸந்நிதிபண்ணி எழுந்தருளியிருக்கிறா னென்கிறார். இந்திரன் முதலிய தேவர்கள் தேனொழுகுகின்ற கற்பக நறுமலர்களைக் கொணர்ந்து வணங்குமிடமாயும் கங்கைக் கரையிலுள்ள தாயுமிருக்கிற ஸ்ரீபதரி காச்ரமத்திலே வாழ்பவன்.
வணங்கும் என்ற அடைமொழி கங்கையிலே அந்வயிக்கவுமாம் வதரியாச்சிரமத்திலே அந்வயிக்கவுமாம். ”வதரியாச்சிராமத்துள்ளானே ” என்று எங்கும் பாடம் வழங்கி வருகின்றது. ரா என்று நீட்டவேண்டிய காரண மொன்றுமில்லை. ‘ ‘பதரிகாச்ரமம் என்ற வடசொல் : வதரியாச்சிரமம்’ என்று திரியுமேயன்றி ரகரம் நீண்டுவரக் காரணமில்லை. ”வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல், விரித்தல் தொகுத்தல் வருஞ் செய்யுள் வேண்டூழி” என்ற நன்னூற் சூத்திரத்தைக் கொண்டு நீட்டலுக்கு உபபத்தி சொல்ல வேண்டும். வேண்டுழி என்றாராகலின் அந்த நீட்டல் இங்கு வர ப்ரஸக்தியில்லை. ‘வதரியாச்சிராமத்துள்ளானே’ என்ற பாடத்தில் குற்றங்குறையொன்று மில்லா திருக்க நீட்டல் விகாரம் ஏதுக்கு? ஆயினும் எங்குமுள்ள பெரியோர்களெல்லாரும் ஒருமிடறாக நீட்டியே ஒதுகின்றனராதலால் அப்பாடத்தை இன்று நாம் மறுப்பது தகுதியன் றென்று கொண்டு யாமும் அப்பாடத்தையே ஆதரிக்க முற்பட்டோம். கற்று ணர்ந்த பெரியோர்கள் இதனை விமர்சிக்கக் கடவர்கள். … .. (க)
English Translation
Then in the yore, worshipped by celestials, the Lord came as a boar and lifted the Earth. Then he wielded his bow and felled the mighty Danava Ravana. He is my master. Gods bring freshly culled Kalpaka flowers from nectared groves wafting with divine fragrance, and worship Him on the banks of the Ganga, in Vadari-Ashrama.
