(88)
மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்
மின்னில் பொலிந்த தோர்கார் முகில்போலக் கழுத்திணில் காறை யொடும்
தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ.
பதவுரை
| மின்கொடியும் | – | கொடிமின்னலும் |
| ஓர் வெண் திங்களும் | – | அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும் |
| சூழ் | – | (அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும் |
| பரிவேடமும் ஆய் | – | பரிவேஷத்தையும் போல |
| பின்னல் | – | (திருவரையில் சாத்தின) பொற்பின்னலும் |
| துலங்கும் அரசிலையும் | – | விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும் |
| பீதகம் சிறு ஆடையோடும் | – | (இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும், |
| மி்ன்னில் | – | மின்னலினால் |
| பொலிந்தது | – | விளங்குவதாகிய |
| ஓர் | – | ஒப்பற்ற |
| கார்முகில் போல | – | காளமேகம் போல |
| கழுத்தினில் காறையோடும் | – | கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய) |
| தன்னில் பொலிந்த | – | (இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற |
| இருடீகேசன் | – | ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன் |
| தளர்நடை நடவானோ-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – மின் + கொடி மின்னுக்கொடி. “மின் பின் பன் கன் தொழிற்பெயரனைய” எனச் சிறப்புவிதிகாண்க. பரிவேடம் – ‘பரிவேஷம்‘ என்ற வடசொற்றிரிபு. சந்த்ரனைச் சுற்றிச் சிலகாலங்களிற் காணப்படும் ரேகை. இது ஊர்கோள் எனவும் படும். பொற்பின்னலும் அதைச்சேர்ந்து விளங்குகின்ற அரசிலைப்பணியும் இவ்விரண்டையுஞ் சூழ்ந்துகொண்டு விளங்குகின்ற பீதகச் சிற்றாடையும் முறையே, மின்னற்கொடியையும் அதைச்சார்ந்து விளங்கும் களங்கமற்ற சந்திரனையும் இவ்விரண்டையுஞ் சூழ்ந்து கொண்டிருக்கும் ஊர்கோளையும் போலுமென்க. இல்பொருளுவமை: (???) அரசிலைப்பணிக்கு வெண்திங்களை உவமையாகச் சொன்னதனால், அவ்வாபரணம் வெள்ளியினாற் செய்யப்பட்டதென விளங்கும். கருநிறக்கழுத்திற் பொற்காறை விளங்குவது – காளமேகத்திற் செந்நிறமின்னற்கொடி விளங்குவது போலும்.
English Translation
The braided silver waist-thread and silver flag leat over creamy-silk loin-cloth are like a flash of lightning, a big white moon and its halo surrounding it. The golden choker around his neck and the darkness of his frame look like a rain-cloud lit by its lightning. This self-illumined child, Hrisikesa, is he going to come toddling now?
