(863)

(863)

வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி

மாளுநாள தாதலால்வ ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே

ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்த தன்றியும்

மீள்விலாத போகம்நல்க வேண்டும்மால பாதமே.

பதவுரை

நாள்கள்

–

தினங்களானவை
வாள்கள் ஆகி செல்ல

–

(நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள்போன்று கழிய
நோய்மை

–

பலவகை வியாதிகளாலே
குன்றி

–

உடல் பலக்குறைபட்டு
மூப்பு எய்தி

–

கிழத்தனமும் வந்து சேர்ந்து
மாளும் நாள் அது

–

மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது;
ஆதலால்

–

ம்ருத்யுகாலம் குறுகிவிட்டபடியால்
என் நெஞ்சமே

–

எனது மனமே!
ஆனது நன்மை ஆகும் என்று

–

எம்பெருமானுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மையென்று
நன்கு உணர்ந்து

–

த்ருடமான அத்யவஸாயங்கொண்டு
வணங்கி வாழ்த்து

–

(அவ்வெம்பெருமானைத்) தொழுது ஏத்துவாயாகா;
அது அன்றியும்

–

அதற்கு மேலே
மால பாதமே

–

அப்பெருமானுடைய திருவடிகளே
மீள்வு இலாத போகம்

–

மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகத்தை
நல்க வேண்டும்

–

அளிக்கக்கடவது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”என்றபடி நமது வாழ்நாள் இன்ன போது முடியுமென்று தெரியாததாகையால் வாழ்நாளுள்ள வரையில் எம்பெருமானை வணங்கி வாழ்த்தவேணுமென்று தமது திருவுள்ளத்தைக் குறித்து உபதேசிக்கிறார். நாள்களோ கடுங்குதிரைபோல் விரைந்தோடிக்கொண்டேயிருக்கின்றன; ‘ஆயுஸ்ஸை அறுக்கிற வாள்களோ இவை என்னும்படியாக நாள்கள் பழுதே கழியாநிற்க, யௌவநப் பருவத்திலுண்டாகக் கூடிய ரோகங்களாலே உடல் குன்றிப்போய் இடிவிழுந்தாற்போல் திடீரென்று கிழத்தனமும் வந்து சேர்ந்து செத்துப்போகும் நாள் அணுகிவிட்டது; ஆயுஸ்ஸு அஸ்திரமாகையாலும், உள்ள ஆயுஸ்ஸில் விக்கங்கள் பலவு முண்டாகையாலும், ‘நாளைக்குத் தொழுவோம்’ என்றிராமல் இப்போதே திருவடிகளிலே வணங்கி வாழ்த்தப்பாராய் நெஞ்சே!; ஆனது நன்மையாகும் என்று நன்கு உணர்ந்து வணங்கி வாழ்த்து என்று அந்வயம். போதைப் போக்குவதற்காகவன்றியே ‘அடிமைசெய்வதுதான். புருஷார்த்தம் என்கிற அந்யவரையத்துடனே வணங்கி வாழ்த்து’ என்கிறார்.

English Translation

Our days are passing like a saw with illness and infirmity. The day of death is hanging low, so offer praise and bow, O Heart! Know the only good there is, is service to the holy feet. The Lord will grant the permanent — a life on Earth without return.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top