(730)

(730)

வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான்

நின்றாயை அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு

என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த கைகேசி தஞ்சொற் கேட்டு

நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே உன்னை நானே

பதவுரை

எம் இராமாவோ

–

ஓ எமது இராமனே!
வளம் நகரம்

–

அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்
வல் தாளின் இணைவணங்கி தொழுது ஏத்த

–

(சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்) வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க
மன்னன் ஆவான் நின்றாயை

–

அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்
அரி அணை மேல் இருந்தாயை

–

சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை
நெடுங்கானம் படர போகு என்றாள்

–

பெரியகாட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்
நல் மகனே

–

நல்ல குமாரனே!
நான்

–

நான்
உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு

–

உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக்கேட்டு
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்

–

நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன் என்றது – கல்லைக்கடிக்க நன்றாய் சமைத்தாய் என்பது போன்ற விபரீதலக்ஷணை. இப்படி நான் உன் பக்கல் பெருந்தீங்கு செய்தவிடத்திலும் நீ சிறிதும் குணங்குறைந்தாயில்லை; உன் குணம் மேன்மேல் மிக்கு விளங்கப்பெற்றாய் நானே குணக்கேடுடையனாய் நின்றேன் என்பான் நன்மகனே என்று விளித்தான். புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க. ஈற்றடி இரக்கத்தை நன்கு விளக்கும். போகு – என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது, சிறுபான்மை உயிர்வரக் குற்றியலுகரம் கெடாது பொது விதியால் வகரவுடம்படு மெய் ஏற்று, போகுவென்றாள் என்று நின்றது. இவ்விடத்து இது செய்யுளோசை நோக்கியது. இராமாவோ – ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார். நன்னூலாரும் உன்னை நானிலத்தை ஆள்வித்தேன். இரண்டு செயப்படு பொருள் வந்த வினை என்பர் வடநூலார்.

English Translation

I had thought I would offer worship; seat you on lion throne and crown you king of the city today. Alas your mother Kaikeyi made you roam the forest instead! O My Rama! Assenting to her wishes, well did I bequeath my kingdom to you, my good son!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top