(493)
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
பதவுரை
முப்பத்து மூவர் அமரர்க்கு |
– |
முப்பத்து முக்கோடி தேவர்கட்கு |
முன் சென்று |
– |
(துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி |
கப்பம் |
– |
(அவர்களுடைய) நடுக்கத்தை |
தவிர்க்கும் |
– |
நீக்கியருளவல்ல |
கலியே |
– |
மிடுக்கையுடைய கண்ணபிரானே! |
வெப்பம் |
– |
(பயமாகிற) ஜ்வரத்தை |
கொடுக்கும் |
– |
கொடுக்கவல்ல |
விமலா |
– |
பரிசுத்தஸ் வபாவனே! |
துயில் எழாய்-’ |
||
செப்பு அன்ன |
– |
பொற்கலசம் போன்ற |
மென் முலை |
– |
விரஹம் பொறாத முலைகளையும் |
செம் வாய் |
– |
சிவந்த வாயையும் |
சிறு மருங்குல் |
– |
நுண்ணிதான இடையையுமுடைய |
நப்பின்னை நங்காய் |
– |
நப்பின்னைப் பிராட்டியே! |
திருவே |
– |
ஸ்ரீ மஹாலக்ஷ்மியே! |
துயில் எழாய்-’ |
||
துயில் எழாய் |
– |
படுக்கையினின்றும் எழுந்தருள் |
செப்பம் உடையாய் |
– |
(ஆச்ரிதாக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே |
திறல் உடையாய் |
– |
பனிசுவர் மண்ணுன்னும் படியான வலிமையுடையவனே! |
செற்றார்க்கு |
– |
சத்துருக்களுக்கு |
(துயிலெழுந்த பின்பு.) |
||
உக்கமும் |
– |
(நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்யும (விசிறியையும்) |
தட்டொளியும் |
– |
கண்ணாடியையும் |
உன் மணாளனை |
– |
உனக்கு வல்லபனான கண்ணபிரானையும் |
தந்து |
– |
கொடுத்து |
எம்மை |
– |
(விரஹத்தால் மெலிந்த) எங்களை |
இப்போதே |
– |
இந்த க்ஷணத்திலேயே |
நீராட்டு |
– |
நீராட்டக் கடவாய்’ |
ஏல் ஓர் எம் பாவாய்-. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில், “தத்துவமன்று தகவு” என்று ஆய்ச்சிகள் தங்களாற்றாமையினால் வருத்தந் தோற்றச் சில குற்றங் கூறினலேயாயினும், பெருமானுடைய திருவுள்ளமறிந்து ஏற்ற அவகாசத்தில் விண்ணப்பஞ் செய்வோமென்றெண்ணி நப்பின்னை பேசாதே பள்ளிகொண்டிருந்தாள்’ அவளோட்டைக் கலவியிற் பரவசப்பட்டுள்ள கண்ணபிரானையும் “நப்பின்னைப் பிராட்டியை நோக்கி அதிக்ஷேபமாகக் கூறுகின்ற பெண்களுக்கு நாம் முகங்காட்டக் கடவோ மல்லோம்” என்று சீற்ற முற்றிருக்கக்கூடும் இவன் என்று அதிசங்கித்த ஆய்ச்சிகள், மீண்டும் அக்கண்ண பிரான்றன்னை நோக்கி, அவனுடைய பெருமைகள் பலவற்றையும் பாக்கப் பேசித் துயிலெழ வேண்டினவிடத்தும் அவன் வாய்திறவாதிருக்க, இவ்வாய்ச்சிகள், “நாம் ப்ரணய ரோஷத்தினால் நப்பின்னை விஷயமாகக் கூறிய சில வார்த்தைகள் இவனுக்கு அஸஹ்யமாயின போலும்’ இனி, அவளுடைய பெருமைகளைப் பேசினோமாகில் இவனுடைய சீற்றம் ஒருவாறு தணியப் பெறும்” என நினைத்து அவளுடைய ஆத்ம குணங்களையும் தேஹகுணங்களையுங் கூறி ஏத்தி, “நங்காய்! எங்கள் மநோரதத்தைத் தலைகாட்டி யருளவேணும்” என வேண்டுமாற்றாற் செல்லுகிறது, இப்பாட்டு.
முப்பத்து மூவரமரர்- அஷ்டவஸுக்கள், ஏகாதசருத்ரர். த்வாதசாதித்யர், அச்விநிதேவதைகள் இருவர், ஆக அமரர் முப்பத்து மூவராய், முக்கியரான அவர் களைக் கூறியது மற்றுள்ளாரையுங் கூறியவாறாகக் கொள்க.
இப்போது இவ்வாய்ச்சிகள் கண்ணனை நோக்கி, “முப்பத்து மூவரான தேவர் களைக் காத்தருளினவனே!” என விளித்தற்கு இருவகைக் கருத்தாம்’ ஆண்புலி களாயும், மிக்க மிடுக்கராயும், ஸ்வப்ரயோஜக பாராயும், உபாயந்தர உயேயாந்தரங்களில் நசையுடையராயும், தங்கள் காரியம் தலைக்கட்டினவாறே உன்னையே எதிரிடுமவர்களாயும், உன்னை எழுப்பி எதிரிகளின் அம்புக்கு இலக்காக்குமவர்களாயும், கொன்றாலும் சாவாதவர்களாயும், உன் வடிவழகின் அநுபவத்தையே போக்யமாகக் கொள்ளாமல் அம்ருதத்தைப் போக்யமாக உகக்குமவர்களாயும் நோவுபட்டால் ஆற்றவல்லவர்களாயுமுள்ள தேவர்கட்கோ நீ உதவி புரிய வேண்டுவது? வலியற்ற பெண் பிள்ளைகளாயும், “உனக்கே நாமாட் செய்வோம்” என்று உன்திறத்திற் கைங்கரியத்தையே புருஷார்த்தமாக உடையோமாயும், “ஏற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன் றன்னோடு உற்றோமே யாவோம்” என்று கால தத்துவமுள்ள தனையும் உனக்கு அணுக்கராயும், “அடிபோற்றி! திறல் போற்றி!, புகழ்போற்றி! கழல்போற்றி! குணம்போற்றி!, கையில் வேல்போற்றி!” என்றிப்படி மங்களாசாஸநம் பண்ணுகையையே ஸ்வரூபமாக உடையோமாயும், “உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” என்றிருப்பவர்களுமான எங்களைக் காத்தருள்வதன்றோ உனக்குப் பெருமையாமென விநயந்தோற்றக் கூறுதல், ஓர் கருத்தாம். இங்ஙனம் அளவற்ற ஆண் புலிகளைக் காத்து நீ படைத்த புகழடங்கலும், இன்று நீ எம்மை நோக்காத மாத்திரத்தினால் இழக்கபட்டதேயா மென மிடுக்காகக் கூறுதலும் ஓர் கருத்தாம். அமரர் என்னும் வடசொல், என்றைக்குஞ் சாவாதவர் எனப் பொருள் படும். முன்சென்று என்பதற்கு, முன்கோஷ்ட்டியிற் சென்று என்று பொருளுரைப் பதினும், அவர்களுக்கு ஒரு தீங்கு வருவதற்கு முன்னமே சென்று என்றுரைத்தல் சிறக்குமென்க. ஆகவே, இது-காலமுன்’ இடமுன் அன்று. நடுக்கமென்னும் பொருளையுடைய கம்ப: என்ற வடசொல், இங்கு எதுகையின்பம் நோக்கிக் கப்பமென வலித்துக்கிடக்கின்றது. தேவர்கள், அஸுரராக்ஷரால் குடியிருப்பையுமிழந்து புகலிடமற்றுப்பட்ட நடுக்கத்தைத் தவிர்த்தமை கூறப்பட்டது. இனி கப்பமென்று இறையாய், தேவர்கள் ராவணாதிகட்குப் பணிப்பூவிட்டுத் திரியாமல் காக்கப்பெற்றமை கூறியவாறுமாம்.
திருவே துயிலெழாய்-பிராட்டியின் திருநாமத்தை நீ வஹிப்பதற்கு இணங்க அவளுடைய குணங்களும் உனக்கு வரவேண்டுமன்றோ? அவன் அடியார்க்காகப் பத்துமாதம் பிரிந்து ஊணு முறக்கமற்றுச் சிறையிலகப்பட்டுப் பட்டபாடுகளை நீ ராமாயணத்தில் கேட்டறிதியன்றோ’ அவ்வளவு வருத்தமும் நீ படவேண்டா’ எங்களுக்காக இப்போது துயிலெழுந்தாயாகிற் போதுமென்றபடி.
“துயிலெழாய்” என்றதைக்கேட்ட நப்பின்னை, ஆய்ச்சிகாள்! நான் உறங்குகிறே னல்லேன்’ கண்ணபிரானால் உங்கட்குப் பெறுவிக்கவேண்டியவற்றை மநோரதித்துக் கொண்டிரா நின்றேன்’ நான் எழுந்து செய்யவேண்டுவதென்கா? சொல்லுங்கள்” என்ன’ நோன்புக்கு வேண்டிய உபகரணங்களையெல்லாம் தந்தருளிட உன்மணாளனையும் எங்களையும் நீராட்டுவிக்கவேணுமென வேண்டுகின்றனர். நீராட்டு – ஸம்ச்லேஷிக்கச்செய் என்றவாறு.
விசிரியும் கண்ணாடியும் தரும்படி வேண்டினவிது-மற்றும் வேண்டியவை எல்லாவற்றையும் அபேக்ஷித்தமைக்கு உபலக்ஷணமென்க. இப்போதே-இந்த க்ஷணம் தப்பினால் பின்பு ஊராரும் இசையமாட்டார்’ நாங்களும் உயிர் வாழ்ந்திருக்ககில்லோ மென்கை. எம்மை என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறபடி.
English Translation
Wake up, O warrior who leads the hosts of thirty-three celestials and allays their fears! Wake up, O strong One, Mighty One, Pure One, who strikes terror in the hearts of the evil. Wake up, O full breasted lady Nappinnai with slender waist and coral lips! Give us your fan and your mirror, and let us attend on your husband now.