(492)
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
பதவுரை
குத்து விளக்கு |
– |
நிலை விளக்குளானவை |
எரிய |
– |
(நாற்புரமும்) எரியா நிற்க, |
கோடு கால் கட்டில் மேல் |
– |
யானைத்தந்தங்களினாற் செய்த கால்களையுடைய கட்டிலிலே |
மெத்தென்ற |
– |
மெத்தென்றிருக்குமதாயும் |
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி |
– |
(அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும்) ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி |
கொத்து அலர் பூ குழல் |
– |
கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான |
நப்பின்னை |
– |
நப்பின்னைப் பிராட்டியினுடைய |
கொங்கை |
– |
திருமுலைத் தடங்களை |
மேல் வைத்து |
– |
தன்மேல் வைத்துக் கொண்டு |
கிடந்த |
– |
பள்ளி கொள்கின்ற |
மலர்மார்பா |
– |
அகன்ற திருமார்பையுடைய பிரானே! |
வாய் திறவாய் |
– |
வாய்திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்யவேணும் |
மை தட கண்ணினாய் |
– |
மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணையுடைய நப்பினாய்! |
நீ |
– |
நீ |
உன் மணாளனை |
– |
உனக்குக் கணவனான கண்ணபிரானை |
எத்தனைபொதும் |
– |
ஒரு நொடிப்பொழுதும் |
துயில் எழ ஒட்டாய் |
– |
படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’ |
எத்தனையேலும் |
– |
க்ஷணகாலமும் |
பிரிவு ஆற்ற கில்லாய் |
– |
(அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’ |
ஆல் |
– |
ஆ! ஆ!!. |
தகவு அன்று |
– |
நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’ |
தத்துவம் |
– |
(இஃது) உண்மை’ |
ஏல் ஓர் எம் பாவாய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டால் நப்பின்னைப் பிராட்டியை உணர்த்திச் “சீரார்வளையொலிப்ப வந்து திறவாய்” என வேண்டினவாறே அவள் கதவைத் திறப்போமென்று எழுந்து புறப்பட, அதனைக்கண்ட கண்ணபிரான், “நம்மைப்பற்றினாரை இவள் தன் அடியாராக அபிமானிப்பது போல, நாமும் இவளைப்பற்றினாரை நம்மடியாராக அபிமானிக்கவன்றோ அடுப்பது’ ஆனபின்பு நம்முடையாரான இவ்வாய்ச்சிகட்கு இவள் முற்பட்டுக் காரியஞ் வெய்தாளாக்கூடாது’ இவளை நோக்கிக் ‘கடை திறவாய்’ என்ற இவர்கட்கு நாம் முற்பட்டுக் காரியஞ்செய்தோமாக வேணும்’ அதனால் வரும் புகழச்சியை நாம் பெறவேணும்” எனக்கருதித்தான் சடக்கென எழுந்து நப்பின்னையைக் கதவுதிறக்கவொட்டாமல் மற்கட்டாகக் கட்டிப் பிடித்திழுத்துப் படுக்கையில் தள்ளித் தானும் அவள் மேல் விழுந்து, அவளுடைய திருமேனியின் ஸ்பர்சத்தினால் தானும் மயங்கி, ஆய்ச்சிகள் வந்த காரியத்தையும் மறந்து கிடக்க, இவர்கள் அவனை எழுப்பின வளவில், நப்பின்னை, ‘நம்முயற்சியைத் தடை செய்து ஆய்ச்சிகளின் வெறுப்புக்கு நம்மை உறுப்பாக்கின இவனை வாய்திறக்க வொட்டுவதில்லை’ என்று அவனை விடை சொல்லவும் வல்லமையறும்படி சிக்கனக் கட்டிக்கொண்டு கிடக்க, இங்ஙன் மீண்டும் இவளை உணர்த்துவதும் கண்ணபிரானை உணர்த்துதற்காகவே என்க.
முதலடியில் முந்துறமுன்னம் “குத்துவிளக்கெரிய” என்றது-நம்மைப்போல் ‘பொழுது விடியிற் செய்வதென்? என்று அஞ்சாமலும், இருளைத் தேடவேண்டாமலும் விளக்கினொளியிற் கிடந்து கிருஷ்ணன் முகத்தைக் கண்டு களிக்கப்பெறுகின்ற இந்நப்பின்னை என்ன நோன்பு நோற்றாள் கொலோ?’ என்னும் வியப்பை விளக்குமென்க. குத்துவிளக்கு – இஷ்டமான இடங்களில் பேர்த்துவைப்பதற்கு உரிய விளக்கு “கோட்டுக்கால் கட்டில் ல்” என்றதும் – ‘எங்களைப் போலே நெரிஞ்சிற்காடும் மணற் கொட்டகமுந்தேடி ஓடவேண்டாமல், இவள் ஒருத்தி மாத்திரம் வாய்த்தபடுக்கையில் சுகமாகக்கிடக்கப்பெறுவதே! என்னும் நினைவு நிகழ்வதைக்காட்டும். நந்தகோபன் உந்துமதகளிற்றனாகக் கூறப்பட்டனனாதலால் அவனது மாளிகையிற் கோட்டுக்கால் கட்டில் இருக்கத் தட்டில்லையே.
பஞ்சசயனம் – அழகு குளிர்த்தி, மென்மை, பரிமளம், வெண்மை என்கிற ஐங்குணங்களின் அமைப்பு-சிறந்த சயநத்தின் இலக்கணமாதல் அறிக. இவ்வைங்குணங்களுள் மென்மையுஞ் சேர்ந்திருக்க, மெத்தன்ன என்று தனியே கூறியது மற்ற குணங்களிலும் மென்னை படுக்கைக்கு விசேஷ குணமாதாலும், அது இப்படுக்கை யில மிக்கியிருப்பதனாலுமென்க. இனி, “பஞ்சசயன” மென்பதற்கு, துளிர், மலர், பஞ்சு, மெல்லிய கம்பளம், பட்டு என்னும் இவ்வைந்து வஸ்துக்களினால் செய்யப்பட்ட சயனமென்றும் பொருள் கூறுவர் சிலர்.
கொத்தமலர்பூங்குழல் நப்பின்னை – இதனால் அவளுடைய குழலின் சீர்மை கூறிய வாறு’ மொக்குகளைப் பறித்துக் குழலிலே சூடினால் அவை தன்னிலத்திற்போலே அலரப்பெற்ற கூந்தலையுடைய நப்பின்னை என்றபடி “கொங்கைமேல் மார்பைவைத்துக் கிடக்கின்றவனே! என்றும், நப்பின்னையின் கொங்கையைத் தன் மார்பின்மீது வைத்துக் கொண்டு கிடப்பவனே! என்றும் இருவகையாகப் பொருள்தோன்றும். இவற்றுள் முந்தியபொருள் அவதாரிகைக்கு நன்கு பொருந்தும்; நப்பின்னையைக் கீழே தள்ளி, அவள்மேல் கண்ணபிரான் பள்ளிகொண்டவாறாகவன்றோ அவதாரிகை வைக்கப்பட்டது.
“மலர் மார்பா! எழுந்துவாராய்” என்னாது, “வாய்திறவாய்” என்றது-குணமும் குணியும் போலே ஒரு பொருள் என்னலாம்படி கிடக்கிறவர்களைப் பிரிக்கலாகாது என்னும் நினைவாலும். இவன் கிடந்தவிடத்திற்கிடந்தே முகிலினது முழக்கம் போன்ற மிடற்றோசை செவிப்படுமாறு ஒரு பேச்சுப் பேசுவது நமக்குப்போருமென்னும் நினைவாலுமென்க.
“மலர் மார்பா! வாய்திறவாய்” என்ற சொல்லமைதியால், நீ உன் மார்பை நப்பின்னைக்குத் தந்தாயேலும் வாயையாகிலும் எங்களுக்குத் தரலாகாதா? என் இரக்கின்றமை தோற்றுமென்ப. இப்படி இவர்கள், “வாய் திறவாய்” என்றதைக் கேட்டருளின, கண்ணபிரான், “இவ்வாய்ச்சிகள் மிகவும் நொந்தனர்போலும், இங்ஙனம் இவர்களை வருத்தமுறுத்துவது தருமமன்று’ ‘இதோ வந்து கதவைத் திறக்கின்றேன்’ என்று ஒரு வார்த்தை சொல்லுவோம்” என்று திருவுள்ளமிரங்கி வாயைத் திறக்கப் புக்கவாறே நப்பின்னை, “அவர்களுக்காகக் கதவைத் திறக்க எழுந்துசென்ற நம்முடைய முயற்சியைத் தடுத்த இவன்றனது முயற்சியை நாம் நிறைவேற வொட்டுவோமோ?” என்றெண்ணி கண்ணன் வாய்திறக்க வொண்ணாதபடி கழுத்தைக்கட்டி அமுக்கிக் கொண்டு கிடக்க, அதனைச் சாலகவாசலாலே கண்ட ஆய்ச்சிகள் நப்பின்னையை நோக்கி, “ஆச்ரிதர்காரியத்தைத் தலைக்கட்டுவிப்பதற் கென்றே கங்கணமிட்ட நீயும் இங்ஙன் செய்வது தகுதியன்றுகாண்” என்கிறார்கள், பின் நான்கடிகளால்.
தத்துவம் அன்று தகவு என்பதற்கு இருவகையாகப் பொருள் கூறுவர், எங்ஙனே யெனில்? தத்துவம்-நாங்கள் இவ்வளவாகச் சொன்ன வார்த்தை, ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலையிட்டுச் சொன்னதன்று’ உண்மையே சொன்னோ மத்தனை காண்’ அன்று தகவு – எங்கள் பக்கலிலும் நீ இங்ஙன் உபேக்ஷை தோற்றுவிருப்பது தருமமன்று, என்பது ஒருவகை யோஜனை. தகவு தத்துவம் அன்று என இயைத்து, உனக்கு நீர்மை உண்டென்பது உண்மையன்று, என்று மற்றோர் வகை யோஜனை.
English Translation
Speak, O Lord, sleeping in a room with a lamp of oil burning softly, on a soft cotton mattress over an ornate bed, resting the flower coiffured Nappinnai’s breasts on your flower chest! Look, O collyrium anointed wide eyed lady Nappinnai; you do not let your spouse rise even for a moment. You unwillingness to part with him even once, is neither fair nor just.