(46)
என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!
பதவுரை
| எம்தம் பிரானார் |
– |
எமக்கு ஸ்வாமியாய் |
| எழில் |
– |
அழகிய |
| திருமார்வார்க்கு |
– |
திருமார்பை யுடையாய் |
| சந்தம் அழகிய |
– |
நிறத்தாலழகிய |
| தாமரை தாளர்க்கு |
– |
தாமரைபோன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு |
| இந்திரன் தானும் |
– |
தேவேந்த்ரனானவன் |
| எழில் உடை |
– |
அழகையுடைய |
| கிண்கிணி |
– |
கிணிகிணியை |
| தந்து |
– |
கொணர்ந்து ஸமர்ப்பித்து |
| உவனாய் நின்றான் |
– |
அதோயிரா நின்றான் |
|
தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ. . . |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – இந்திரன் அரைச்சதங்கையைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்து அதோ நிற்கின்றான்காண் என்று சொல்லித் தாலாட்டுகிறாள். முன்னிரண்டடிகளும் படர்க்கையாயிருந்தாலும் முன்னிலைப் படர்க்கையெனக் கொள்க. எழில் திருமார்வனும் தாமரைத்தாளனுமான உனக்கு என்றபடி. ‘கிண்கிண்’ என்று ஒலிப்பதுபற்றிச் சதங்கைக்குக் கிண்கிணி என்று காரணப் பெயராயிற்று. உவன் – நடுவிலிருப்பதைக் காட்டுஞ் சுட்டெழுத்தான ‘உ’ என்பதனடியாய் பிறந்த ஆண்பாற் பெயர்; அதிக தூரத்திலும் அதிக ஸமீபத்திலுமில்லாமல் நடுத்தரமாய் இருப்பவனென்று பொருள்.
English Translation
For my master of radiant chest and beautiful lotus feet, Indra gave these ankle-bells, and stands betwixt, Talelo. O, Lotus-eyed Lord, Talelo.
