(3561)
உண்ணி லாவிய ஐவ ரால்குமை தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,
நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,
எண்ணி லாப்பெரு மாயனே இமையோர்கள் ஏத்து முலக மூன்றுடை,
அண்ண லேஅமு தேஅப்ப னேஎன்னை யாள்வானே!
பதவுரை
|
எண்இலாபெரு மாயனே |
– |
அளவிடமுடியாத ப்ரக்ருதி தத்வத்தை உபகரணமாக வுடையவனே! |
|
இமையோர்கள் ஏத்தும் |
– |
தேவர்களாலே துதிக்கப்படுபவனும் |
|
உலகம் மூன்று உடை |
– |
மூவுலகங்களையும் சேஷமாசவுடையனுமான |
|
அண்ணலே |
– |
ஸ்வாமியே! |
|
அமுதே |
– |
பரம போக்யனே |
|
அப்பனே |
– |
மஹோபகாரங்கள் செய்பவனே! |
|
என்னை ஆள் வானே |
– |
என்னை நிர்வஹித்துக் கொண்டு போருமவனே!, |
|
என்னை |
– |
அடியனே |
|
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி |
– |
உள்ளே நிரந்தரவ லீஸம் பண்ணுகின்றபஞ்சேந்திரியங்களாலும் நலிவுறும்படி பண்ணி |
|
உன் பாதபங்கயம் |
– |
உனது திருவடித்தாமரைகளை |
|
நண்ணிலா வகையே |
– |
கிட்டாதபடியாகவே |
|
இன்னும் நலிவான் |
– |
இன்னமும் ஹிம்ஸிப்பதாக |
|
எண்ணுகின்றாய் |
– |
எண்ணியிருக்கிறாய் போலும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (உண்ணிலாவிய.) பிரானே! உன் திருவடிகளையே சரணமாகப்பற்றின வென்னை இந்திரியங்களை யிட்டு நலியப் பார்க்கிறாயே! இது தகுதியோ? என்கிறார். பகைவர் பாஹ்ய சத்ருக்களென்றும் ஆந்தரசத்ருக்களென்றும் இருவகைப்படுவர்; ஆயுதங்களாலே நமது உடலுக்கு நலிவை விளைக்கும் பகைவர் பாஹய சத்ருக்களாவர். அப்படியன்றிக்கே கண்ணுக்குத் தெரியாதபடி உள்ளேயிருந்துகொண்டே நலிகின்ற பஞ்சேந்திரியங்கள் ஆந்தர சத்துக்களெனப்படும்: இத்தன்மையை ‘உண்ணிலாவிய வைவரால்’ என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார். அசேதநவ்களான இந்த்ரியங்களை ‘ஐந்தால்’ என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார். அசேதநங்களான இந்திரியங்களானவை அசேதனங்களைப் போலன்றிக்கே சேதநர்கள் போலவே நின்று நலியுந் தன்மையைப் பற்ற. திருமங்கையாழ்வரும் “உடனின்று ஐவரென்னுள் புகுந்து” என்றருளிச் செய்தது காண்க.
குமைதீற்றி-குமைக்கும் படி பண்ணி; குமைத்தலாவது ஸஹிக்க வொண்ணாதபடி ஹிம்ஸித்தல். இந்திரியங்கள் ஹிம்ஸித்தால் அதற்காக எம்பெருமானை நொந்து பேசலாமோவென்னில்; எம்பெருமானுக்கு ஹ்ருக்ஷுகேசனென்று ஒரு திருநாமமுண்டு; ஹருக்ஷுகமென்று இந்திரியங்களுக்குப் பெயர்; அவை தானிட்ட வழக்காம்படியிருப்பவன் என்பது பற்றியே ஹ்ருக்ஷுகேசனென்று திருநாமமாயிற்றென்பதை ஆழ்வார் தாம் அறிந்தவராதலால் இங்ஙனே சொல்லுகிறார் போலும். பிரானே! உனக்கு விதேயமல்லவோ அவை; நீ நியமித்தால் கேளாவோ அவை; நீ யேயன்றோ அவற்றை ஏவி நலிகின்றாய் என்கிறார்.
தமக்கு நலிவாவது இன்னதென்பதைக் காட்டுகிறார் “உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே” என்று திருவடிகளைக் கிட்டாதொழிகையே இவ்வாத்மாவுக்கு நலிவு என்றிருக்கிறார். நலிவான் இன்னமெண்ணுகின்றாய் அகலகில்லேனிறையுமென்று அவர்மேல் மங்கையுறை மார்பா! உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே என்றபின்பும் என்னை இங்ஙனம் நலியப் பார்க்கிறாயே. இது தருமமோ? என்கிறார்.
ஆழ்வார் இங்ஙனே யருளிச் செய்வதைப்பற்றி ஸ்ரீவசநபூஷணத்தில் சில ஆராய்ச்சிகள் தோன்றியுள்ளன; அதில் குணாநுஸந்தாநம் அபயஹேது; பயாபயங்களிரண்டும் மாறாடில் அஜ்ஞதையே ஸித்திக்கும்” என்று முந்துற அருளிச்செய்தார். சேதநன் தன்னுடைய தோஷங்களைப் பார்த்தவாறே பயப்படவும், எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுஸத்திதவாறே அந்த பயம் தீரவும் நேரும்; இப்படியன்றிக்கே ‘அநுரதிகாலம் தனக்குப் பரதந்த்ரமான ஆத்மவஸதுவை கர்மவ்யாஜத்தாலே ஸம்ஸாஜீக்கச் செய்து போந்தவனன்றோ, கேட்பாரற்ற ஸ்வாந்திரனான ஜத்தாலே ஸம்ஸாஜீப்பிக்கில் செய்வதென்?’ என்று அவன்படியை நினைத்து பயப்படுகையும், ‘முன் போலன்றிக்கே நமக்கிப்போது ஆத்ம குணங்களுண்டாகையால் பேற்றில் கண்ணழிவு இல்லை’ என்று தன்படியை நினைத்து பயம் கெடுமையும் ஆகமானால் அவிவேகமே ஸித்தித்து விடும்; தான் தனக்கு நாசகனென்று பயப்படுகையும் ஈச்வரனே ரக்ஷ்கனென்று பயம் கெடுமையுமாகிற விவேக வேஷம் இல்லாமையாலே அவிவேகமெ ஸித்தித்துவிடும் – என்பதாக அருளிச் செய்தார். இதற்குமேலே தோன்றக்கூடிய சங்கையை அநுவதித்துப் பரிஹாரமும் காட்டியருளினார் (பிள்ளை லோகாசார்யர்);
“ஆனால் நலிவானின்ன மெண்ணுகின்றாய் ஆற்றங்கரை வாழ்மரம் போலஞ்சுகின்றேன் என்கிற பாசுரங்களுக்கு அடியென்னென்னில்; பந்தா நுஸந்தாநம். ப்ரஜை தெருவிலே யிடறித் தாய் முதுகிலே குத்துமா போலே நிருபாதிக பந்துவாய் சக்தனாயிருக்கிறவன் விலக்கா தொழிந்தால் அப்படிச் சொல்லுலாமிறே. ப்ரஜையைக் கிணற்றின் கரையில் நின்றும் வாங்கள் தொழிந்தால் தாயே தள்ளினா ளென்னக் கடவதிறே.”
என்கிற சூர்ணிகைகள் அருமந்தானவை. இவற்றின் கருத்தாவது-எம்பெருமான் படியை நினைத்து தீரவேணும் யல்லது பயப்படுகை கூடாதென்பது சாஸ்த்ரார்த்தமானால் தத்வ வித்துக்களில் தலைவரான ஆழ்வார்கள் உண்ணிலாவிய ரார்த்தமானால் தத்வ யென்னையுன்பாதபங்கயம் நண்ணிலாவகையே நலிவார்னின்ன மெண்ணுகின்றாய் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொலென்று இன்னமாற்றங்கரை வாழ்மரம் போலஞ்சுகின்றேன் என்று அருளிச்செய்த பாசுரங்களுக்குத் கதியென்ன? என்று சங்கை அதற்குப் பரிஹரமாவது பேறும் இழவுகளுக்குண்டான ஸம்பந்தத்தினுடைய உறைப்பு அப்படி அருளிச்செய்கைக்குக் காரணம். ஸம்பந்தாநுஸந்தானத்தாலே இப்படி அவன் குறையாகச் சொல்லலாமோ வென்னில், விளையாட்டுக்காகத் தெருவிலே யோடித்திரிகிற ப்ரஜை அங்கே இடறிக் கால் நொந்தவாறே அழுதுகொண்டு அகத்திலே வந்து தனக்கு இந்த வேதனை வந்தது தாயாலேயாக நினைத்து அவள் முதுகிலே குத்துமாபோலே ஒழிக்க வொழியாத உறவுடையனாய் நலிவைத் தவிர்க்கைக்கு சக்தனுமாயிருக்கிறவன் நலிவுபடவிட்டு விலக்காதொழிந்தால் ‘அவன் இவற்றையிட்டு நலிவிக்கிறான் என்னலாமன்றோ. விலக்காத மாத்திரமே கொண்டு அவன் செய்தானென்னலாமோ வென்னில், கிணற்றின் கரையில் நின்றும் வாங்காவிட்டால் கிணற்றிலே ப்ரஜை விழுந்தவளவில் ‘தாய் அப்போதே சென்று எடுத்தாளாகில் இந்த ஆபத்து நேருமோ? கிணற்றின் கரையிருப்பை இவள் இசைந்திருக்கையாலன்றோ குழந்தை விழுந்தது; ஆனபின்பு இவளனறோ தள்ளினாள்’ என்று லோகம் சொல்லக்கடவதன்றோ இதற்கு மேலும் அறிந்துகொள்ள வேண்டிய அர்த்த விசேஷங்களை ஸ்ரீவசநபூசண தத்வ்யாக்யானங்களில் அறிந்துகொள்வது.
இத் திருவாய்மொழியில் முன்னகளெல்லாம் அஞ்சிக் கதறுகிறபடியாயும் பின்னடிகளெல்லாம் அச்சந்தீர எம்பெருமான் படிகளைப் பேசுகிறபடியாயும் செல்லாநின்றது. பிள்ளை திருநறையூரையர் “இப்பாட்டுக்களில் முன்னடிகளெல்லாம் புலியின் வாயிலே அகப்பட்ட ப்ரஜை தாய்முகத்திலே விழித்துக்கொண்டு புலியின்வாயிலே கிடந்து நோவு படுமாபோலேயா யிருக்கிறது” என்று பணிப்பராம்.
எண்ணிலாப் பெருமாயனே! எண்ணிறந்த மிகவும் ஆச்சரியமான குணங்களை யுடையவனே! என்பது ஒரு நிர்வாஹம்;. எண்ணிறந்த செயல்களைச் செய்ய வல்லதான் ப்ரக்ருதியை பரிகரமாக வுடையவனே! என்பது மற்றொரு நிர்வாஹம்.
English Translation
O Lord of countless good, Lord of the three worlds, worshipped by the celestials! You heap miseries on me, through the five senses borne on this body. You are still intent on torturing me, separating me from your lotus feet. O My sweet ambrosia, My father, My Master!
