(3539)
நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,
சீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய்,
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
பதவுரை
|
நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் கெடு வான் ஆய் |
– |
பஞ்ச பூதஸ்வரூபியும் |
|
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய் |
– |
சந்திரஸூர்யர்களாகிற சிறந்த தேஜ பதார்த்தஸ்வரூபியும் |
|
சிவன் ஆய் |
– |
சிவனுக்கு அந்தர்யாமியும் |
|
அயன் ஆனாய் |
– |
பிரமனுக்கு அந்தர்யாமியுமாயிருக்கும் எம்பெருமான்! |
|
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி |
– |
கூர்மைபொருந்திய திருவாழியையும் வெள்ளிய திருச்சங்கையும் திருக்கையில் தரித்துக்கொண்டு |
|
மண்ணும் விண்ணும் மகிழ |
– |
உபய விபூதியும் களிக்கும்படி |
|
ஒருநாள் |
– |
ஒருநாளாகிலும் |
|
வாராய் |
– |
வந்தருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நீருர்யு நிலனாய்) ப்ரஹ்லாதாழ்வானுக்கு எப்பொருளும் எம்பெருமானுருவமாகவே தோன்றியவாறு போல, சிறந்த மா ஞானிகட்கு எதைக்கண்டாலும் பகவானாகவே தோற்றக்குறையில்லை, ஆழ்வார்க்கும் அப்படியே தோற்றக் குறையில்லை, ஆகவே தூதுவிட்டழைக்க வேண்டிய ஆயாஸம் எதற்காக? என்று சிலர் நினைக்கக்கூடும். எம்பெருமானும் இப்படியே நினைத்திருந்தானாகக் கொண்டு ஆழ்வார் இப்பாட்டில் தம் ருசியை விளங்க வெளியிடுகிறார், பிரானே! நிலம் நீர் தீ கால் முதலான எப்பொருளுமாய் நீ நிற்கும்படியை நான் அறியாமையிலே, “சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களும்“ என்றாற்போலே அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ வேஷத்தைக் கண்டு களிக்க ஆவல்கொண்டிருக்கு மடியேனுக்கு ஜகத்ஸ்வரூபனாயிருக்குமிருப்பு என்ன பயனளிக்கும்? நீர் நிலம் முதலானவையெல்லாம் உன் வடிவேயென்று அநுஸந்தித்துக்கொள்வதில் யாதொரு தடையுமில்லை, அப்படி அநுஸந்திப்பதனால் அவற்றில் உனது அஸாதாரணத்திருமேனியைக்காண முடியுமோ? முடியாது, ஆகவே அஸாதாரண லக்ஷணங்களோடே வந்து ஒருநாளிலும் காட்சி தந்தருளவேணும் இதற்காக காண் நான் கதறுவது என்கிறார்.
* மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கங் கூறவவதரித்த மங்கையர்கோன் பெரிய திருமொழியில் (4-9-5). * தீயெம்பெருமான் நீரெம்பெருமான் திசையுமிருநிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் அடியோங் காணோமால் தாயெம்பெருமான் தந்தை தந்தையாவீர், அடியோமுக்கே யெம்பெருமானல்லீரோ நீர்? * என்றருளிச் செய்த பரசுரமும் இக்கருத்தினாலே அமைந்ததென்க.
நீராய் என்று தொடங்கி முதலடியினால் பஞ்சபூதங்களுக்கும் எம்பெருமான் அந்தர்யாமியாயிருக்கிறபடி சொல்லிற்று. சீரார் சுடர்களிரண்டாய் என்று சந்திரஸூர்யர்களுக்கு அந்தர்யாமியாயிருக்கிறபடி சொல்லிற்று. சிவன் அயன் என்று இரண்டு தெய்வங்களைச் சொன்னது மற்றுமுள்ள தெய்வங்களுக்கும் உபலக்ஷணமாகக்கடவது. ஸகல தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிராநின்றாய் என்றபடி. இவையெல்லாம் எனக்குத் தெரியாமையில்லை, இந்த அந்தராத்மதையிலே நான் த்ருப்தி பெறுவேனல்லேன், அஸாதாரண லக்ஷணத்தோடு காணக்கருதுகின்றேனென்கிறார் மேல். விச்வரூபங்கண்ட அர்ஜுநன் “இந்த ரூபத்தை எனக்குக் காட்டினது போதும், அஸாதாரணத் திருவுருவத்தையே காட்டியருளவேணும்“ என்று அபேக்ஷித்தமை இங்கு ஒப்பிடத்தக்கது.
English Translation
O Lord, you became the radiant orbs, Siva and Brahma, Earth, Water, Fire, Wind and sky, Will you not come to this wicked self one day, with your conch and discus in hand, and let Heaven and Earth rejoice?
