(3499)
குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட் பிரானி ருந்தமை காட்டினீர்,
மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும்மை யாந்து,இவள்
நுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும் அத்தி சையுற்று நோக்கியே.
பதவுரை
| அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
| குழையும் |
– |
பகவத்குணங்களிலே உருக்கமுடையவளாயும் |
| வாள் முகத்து |
– |
ஒளிமிக்க முகத்தையுடையவளாயிருக்கிற |
| துலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு |
– |
துலைவில்லித்திருப்பதிக்கு அழைத்துக் கொண்டு போய் |
| இழை கொள் சோதி திருவாபரணங்களினாலான சோதியை யுடையனும் | ||
| செம் தாமரை கண்ணபிரான் |
– |
செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எம்பெருமான் |
| இருந்தமை |
– |
வீற்றிருக்கும்படியை |
| காட்டினீர் |
– |
நீங்களேகாட்டிக்கொடுத்தீர்கள், |
| இவள் |
– |
அதுகாணப்பெற்றவிவள் |
| அன்று தொட்டும் |
– |
அந்நாள் தொடங்கி |
| மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு |
– |
மழைபெய்தாற்போன்ற கண்ணீரோடேகூடி |
| மையாந்து |
– |
வியாமோஹித்து |
| நுழையும் சிந்தையன் |
– |
அவனழகிலேஉள்புகுழைந்தநெஞ்சையுடையளாய் |
| அத் திசை உற்று நோக்கி தொழும் |
– |
அத்திருப்பதியுள்ள பக்கமே உற்றுநோக்கித் தொழுகின்றாள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (குழையும் வாண்முகத்து) ஏற்கனவே இவளுடைய ப்ரக்ருதி உங்களுக்குத் தெரிந்திருந்தும் இவளைத் துலைவில்லிமங்கலத்தேறக் கொண்டு சென்று தேவபிரானுடைய வடிவழகைக்காட்டிக்கொடுத்தீர்கள் நீங்களே யென்கிறாள் தோழி. குழையும் என்பதம் வாண்முகத்து என்பதும் தலைவிக்குத் தனித்தின விசேஷணங்கள். பகவத்விஷயமென்றால் ஊன்றின்கண்நுண்மணல்போல் உருகாநிற்பவளாயும், •••• என்கிறாப்போலே அகத்திலுள்ள வைலக்ஷண்யமெல்லாம் முகத்திலே தெரியும்படி யிருப்பவவாயுமுள்ள இவ்வேழையை என்றபடி. ஏழையை என்பதற்கு “கிடையாதென்றாலும் மீளமாட்டாத சாபலத்தையுடையவளை“ என்பது ஈடு. ஏழை யென்பதற்கு அறிவில்லாதவளென்று பொருளாய் அதிலிருந்து கிடைத்த தாற்பரியாத்தாம் இது. “நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை, பண்ணப்பணைத்த பெருஞ்செல்வம்“ என்பவாதலால் ஏழையென்ற சொல் அறிவிலியென்று பொருள்படக் குறையில்லை.
(இழைகொள்சோதியித்யாதி) “ஆபரணத்துக்கு அழகுகொடுக்கும் பெருமான்!“ என்னும்படி ஆபரணும் வேண்டாதே இயற்கையான அழகையும் செந்தாமரைபோன்ற திருக்கண்களையுமுடையனாய் வீற்றிருக்கும்படியைப் பெண்ணே! பார் பார் என்று நீங்களே காட்டிக்கொடுத்ததனால் வந்த அநர்த்தமன்றோ இத்தனையும் என்கிறாள். அதனால் இப்போது வந்த்து என்னென்ன, அது சொல்லுகிறது பின்னடிகளால். பிரானிருந்தமையைக் கண்டவுடனே கண்ணீரானது மழைபெய்தாற்போல் தாரைதாரையாகப் பெருகத் தொடங்கிற்று, அதுக்குமேலே மயக்கமும் வந்து குடிபுகுந்தது, மயக்கம் சிறிது தெறிந்தவாரே அவனது திருக்குணங்களிலே நெஞ்சு உட்புகாநின்ற, அத் திருப்பதியிலுள்ள திக்கையே உற்றுப்பார்த்து ஓயாதே அஞ்ஜலிசெய்யா நின்றாள், இதுவாயிற்று இவளுடைய நிலைமை. இனி இவளை இதில் நின்றும் மீட்கப்பார்க்கை யென்பதொன்றுண்டோ? என்றவாறு.
English Translation
O Ladies, you took this soft radiant girl to Tulaivilli-Mangalam and showed her the Lord of lotus eyes and jewel-stealing radiance. From then on, she is in this mood, lost in thought. She looks in that direction and bows, with tears falling like rain.
