(3498)
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலங் கண்டபின்,
அற்க மொன்றும் அறிவு றாள்மலிந் தாள்கண் டீரிவள் அன்னைமீர்,
கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல் வண்ணன் கண்ணபி ரானென்றே,
ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையுமே.
பதவுரை
| அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
| இவள் |
– |
இப்பெண்பிள்ளையானவள் |
| நிற்கும் நால்மறை வாணர் வாழ் |
– |
ஸ்திரமான நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்கள் வாழுமிடமான |
| துலைவில்லிமங்கலம் கண்ட பின் |
– |
துலைவில்லித்திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற பின்பு |
| அற்கம் ஒன்றும் அற உறாள் |
– |
அடக்கம் சிறிதுமுடையளல்லளாய் |
| மலிந்தாள் கண்டீர் |
– |
கைகழிந்துவிட்டாள் காண்மின், |
| (அது எங்ஙனம் தெரிகிறதென்றால்) | ||
| கற்கும் கல்வி எல்லாம் |
– |
இவள் பழகுகிற பேச்சுக்களெல்லாம் |
| கரு கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே |
– |
நீலக்கடல்வண்ணானான கண்பிரானைப் பற்றியதேயாம். |
| ஒற்கம் ஒன்றும் இலள் |
– |
ஒடுக்கம் சிறிதுமில்லாதவளாய் |
| உகந்து உகந்து உள் மகிழ்ந்து |
– |
தன்னுடைய ஆனந்தமிகுதியை நன்றாகக் காட்டிக்கொண்டு |
| குழையும் |
– |
உள்குழையாநின்றாள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நிற்கும் நான்மறை) துலைவில்லித் திருப்பதிக்கு இவளை அழைத்துச் சென்றவர்கள் அங்கே வேதபாராயண வைபவங்களையும் கேட்பிக்கவேணுமோ? நான்கு வேதங்களிலும் பாரங்கதரானவர்கள் அங்கே வேதாத்யயனங்கள் செய்யுமழகைக்கண்டாள், இந்த வேதங்கலையெல்லாம் ஆதியிலே நான்முகனுக்கு உபதேசித்தவனன்றோ நம்பெருமான் என்று அவ்வழியாலே அவனிடத்துக் காதல் மிகப்பெற்றாள், அவனது கட்டளையான நான்மறைகளையும் ஓதுகின்ற பரமபாகவதர்களன்றோ இவர்களென்று ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் பக்திப்பெருங்காதல் கொள்ளப்பெற்றாள், இப்படி பகவத்பாகவத பக்தியே வடிவெடுத்தவளான இவளை ஸம்ஸாரிகளான நீங்கள் இனி உறவுகொண்டாடி விரும்பத் தகுதியுண்டோ வென்கிறாள் தோழி.
அற்கமொன்றும் அறவுறாள் – ஸ்த்ரீகளுக்கு முக்கிய லக்ஷணமான அடக்கம் அடியோடேபோயிற்று. மலிந்தாள்கண்டீர் – இருக்கவேண்டிய மரியாதையை மீறிநின்றாள். திருமங்கையாழ்வார் * என்சிறகின்கீழடங்காப் பெண்ணைப்பெற்றேன் * என்று தாய்சொல்லாலே பேசின அர்த்தம் இங்குத் தோழி பேச்சாலே வெளிவந்த்தாயிற்று.
“கற்குங்கல்வியெல்லாம்“ என்பது தோழியின் பேச்சேயாகவுமாம், தலைவி பேச்சோடே சேர்ந்து அந்வயிக்கவுமாம். தோழியின் பேச்சாகக் கொண்டால், இப்பராங்குசநாயகி பேசுகிற பேச்செல்லாம் எம்பெருமானது திருநாம்மேயாயிருக்கும் என்று பொருள்படும். தலைவி பேச்சோடே சேர்ந்து அந்வயிக்குமிடத்தில், “உலகில் யார் எந்தக்கல்வி கற்றாலும் அக்கல்வியெல்லாம் எம்பெருமான் பரமேயொழிய, அவனளவிலே சென்று நில்லாத கல்வியொன்றுமில்லை“ என்று பராங்குசநாயகி பகர்வதாகப் பொருள்படும்.
ஒற்கம் ஒன்றுமிலள் – எவ்வளவு நாழிகை பகவத்திருநாமங்களைப் பேசினாலும் இளைப்பென்பது சிறிதுமுடையளல்லள். லஜ்ஜையுடையளல்லள் என்னவுமாம். உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையும் – திருநாமம் வழியாக அவனது ஸௌந்தரயம்சீலம் முதலியவற்றைச் சிந்தித்து மேன்மேலும் விளைகிற பாஹ்ய ஆப்யந்தர ஹர்ஷத்தாலே சிதிலையாகாநின்றாள்.
English Translation
See, after going to Tulaivilli-Mangalam, -where Vedic seers throng, -she has lost her self-control and become possessed, “Dark hued Lord”, she keeps on calling, -with rising joy, -then pleased beyond measure, she falls into a swoon.
