(3282)

(3282)

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்

தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை

சுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா

றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே?

 

பதவுரை

நமக்கும்

நித்ய ஸம்ஸாரிகளான நமக்கும்

பூவின் மிசை நங்கைக்கும்

தாமரை மலரில் வசிக்கும் பெரிய பிராட்டியாருக்கும்

இன்பனை

இன்பமளிப்பவனும்

ஞாலத்தார் தமக்கும்

லீலாவிபூதியிலுள்ளார்க்கும்

வானத்தவர்க்கும்

பரமபத வாசிகளுக்கும்

பெருமானை

தலைவனும்

தண் தாமரை சுமக்கும்

குளிர்ந்த தாமரை மலர்சுமக்கும்படியான

பாதம் பெருமானை

திருவடிகளை யுடையனுமான ஸர்வேச்வரன் விஷயத்தில்

சொல்மாலைகள்

திருவாய்மொழியை

சொல்லும் ஆறு

சொல்லும்படியாக

அமைக்க வல்லேற்கு

அமைதியைப்பெற்ற எனக்கு

அகல்வானத்து

அகன்ற நித்ய விபூதியிலும்

யாவர் இனிநிகர்

யார்தான் இனி ஒப்பாவார்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் தம்பக்கலிலே எம்பெருமானுக்குண்டான அபிநிவேஸத்தைக் கண்டு, இப்படிப்பட்ட எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் என்கிறார்.

பெரிய பிராட்டியாரிடத்திலும், அவளுடைய பரிகரமான நம்மிடத்திலும் ஸ்நேஹித்திருப்பவன் எம்பெருமான் என்று இந்தமுறையிலே யிட்டுப் பாசுரமருளிச்செய்ய வேண்டியிருக்க, “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்” என்று தம்மை முந்துறச் சொல்லிப் பிறகு பிராட்டியைச்; சொல்லியிருப்பது கொண்டு ஒரு விசேஷார்த்தம் சிக்ஷ்க்கப்படும். (ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகரணத்தில்-“இன்பு மன்பும் முற்படுவது கொழுந்துவிடுதாகிறது.” இத்யாதி சூர்ணிகை இங்கே அநுஸந்தேயம்.) எம்பெருமான் ப்ரீதிபண்ணுமிடத்தில் நித்யாநபாயிநியான பிராட்டியிற்காட்டிலும் அதிகமாகவே நம்மிடத்தில்  பண்ணுவனென்னுமிடம் இதனால் அறியத்தக்கது.  இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்திகாண்மின்;-“இனபனா மிடத்தில்; முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளுக்கு ஸ்நேஹித்திருப்பது” என்று.

இவ்வர்த்தம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு ஸந்தர்ப்ப விசேஷத்தில் பெருமாளாலேயே வெளிடப்பட்டது; எங்ஙனே யென்னில், பெருமாள் எழுந்தருளி நிற்கச்செய்தே இராவணன் கோபுர சிகரத்திலேவந்து தோன்றினவாறே ‘ராஜ த்ரோஹியான பயல் இங்ஙனம் கூச்சமன்றித் திருமுன்பே நிற்பதும் நீதியோ’ என்று சீற்ற முற்ற ஸூக்ரிவமஹாராஜர்.  அவன் மேலே எழப்பாய்ந்து மீண்டு வந்தபோது பெருமாள் *** த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம?” என்றார்; ‘உனக்கு ஓர் அனர்த்தம் விளையுமாகில் பின்னை ஸீதாபிராட்டிதான் எனக்குக்கிடைத்தன? என்பது இதன் பொருள். இதனால்இ பிராட்டி பக்கலிற்காட்டிலும் அடியவர் திறத்தில் எம்பெருமானுக்குள்ள அன்பின் கனம் அறியவெளிதாம்.

ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை ஸ்ரீ இங்கும் வானத்தவர்க்கு முன்னே ஞாலத்தார் முற்படுகிறார்கள்.  இங்கே ஈடு: -“மாதாபிதாக்கள் ப்ரஜைகளில் குறைவாளர் பக்கலிலேயிறே; அத்தாலே ஸம்ஸாரிகள் முற்படவேண்டுகிறது” என்று. நித்ய விபூதியிலுள்ளார்க்கு இரங்குவது மீனுக்குத் தண்ணீர்வார்ப்பது போலேயா மித்தனை. ஞாலத்தவர்க்கு இரங்குவதே பாலை நிலத்தில் தண்ணீர்ப்பந்தல் வைத்தாறாகும்.

தண்தாமரை சுமக்கும் பாதப்பெருமானை = குளிர்ந்த ஆஸநபத்மத்தாலே தரிக்கப்பட்ட திருவடிகளையுடையவ னென்கை.  எம்பெருமானுடைய திருவடிகளின் கீழ்; பத்மாஸந மிருப்பது அறியத்தக்கது.  “அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ” என்றதும் அநுஸந்தேயம்.  தண்டாமரையின் மீது விளங்குகின்ற பாதங்களையுடையவன் என்னவேண்டுமிடத்தில் “தண்டாமரை சுமக்கும் பாதன்” என்றது ஒரு உத்ப்ரேக்ஷையில் நோக்காக, அதாவது-குளிர்த்தியிலும் பரிமளத்திலும் செவ்வியிலும் தாமரைப்பூவானது திருவடிக்குத் தோற்றுப்போயிற்றாம்; தோற்றவர்கள் வென்றவர்களைச் சுமப்பது என்கிற ஒரு வியவஸ்தை உலகிற் காண்பதாதலால், தோல்வியடைந்த தாமரைப்பூ வெற்றிபெற்ற திருவடியைச் சுமக்கவேண்டியதாயிற்றுப்போலு மென்கை.

ஆழ்வான் ஸூந்தரபாஹூஸ்தவத்தில் இக்கருத்தை அமைத்து ஒரு ச்லோகமருளிச் செய்தார்;-  *** ஸ்ரீ ஸௌந்தர்ய மார்த்தவ ஸூகந்தரஸப்ரவாஹை: ஏதே ஹி ஸூந்தரபுஜஸ்ய பதாரவிந்தே, அம்போஜடம்பபரிரம்பணமப்யஜைடாம் தத் வை பராஜிதமிமே சிரஸா பிபர்த்தி.’ என்பதாமது. அழகு, ஸௌகுமார்யம், நறுமணம், மகரந்தரஸப்ரவாஹம் ஆகிய இவற்றாலே அழகருடைய இந்தத் திருவடிகளானவை தாமரையை வென்றிட்டபடியினால் தோல்வியடைந்த  அந்தத் தாமரைப்பூ இந்தத் திருவடிகளைச் சுமக்கின்றது என்றவாறு.  இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்தில் சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்கவல்ல எனக்குத் திருநாட்டிலும் இனி நிகரில்லை யென்கிறார்.

சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு என்ற விடத்தில் நிர்வாஹ பேதமுண்டு; பட்டருக்கு முன்புள்ள முதலிகள் எப்படி நிர்வஹித்தார்களென்றால்இ ஆழ்வாரை நோக்கி ஸர்வேச்வரன் ‘ஆழ்வீர்! நம்மைக்குறித்து ஒரு கவி சொல்லும்’ என்றால் சிறிதும் மயங்காமல்  அப்போதே சடக்கெனக் கவி சொல்லி முடிக்கும்படியான வல்லமை வாய்ந்த எனக்கு-என்று நிர்வஹித்துப் போந்தார்களாம்:  பட்டர் நிர்வஹிப்பதாவது-மேலே எழாம்பத்தில் * என்றைக்கு மென்னை என்கிற திருவாய்மொழியிற்படி ஸர்வேச்வரன் தானே கவிபாடினா னாகையாலே கவிபாடின ஸாமர்த்தியம் அவ்வளவாகப் பாராட்டத்தக்கதன்று; அந்த எம்பெருமான் திருக்கண்களாலே குளிரக் கடாக்ஷித்து ‘நீர் ஒரு கவிசொல்லும்’ என்றால் உள்ளெலா முரகிக்க குரல்தழுத் தொழிந்தேன் என்னுங் கணக்கிலே சிதிலராகாமே தரித்து நின்று சொல்மாலைகள் சொன்னதன்றோ பாராட்டத்தக்கது; அந்தத்தன்மையை ஆழ்வார் இங்கு அருளிச்செய்கிறார் என்றாம். அமைக்க என்ற சொல்லின் ஸ்வாரஸ்யத்திற்கு மிகவும் பொருந்திய நிர்வாஹம் இது.  அமைத்தல்-தரித்தல்.

 

English Translation

Lord of earthlings and celestials, he is sweet to the lotus-lady Lakshmi and to us alike.  His feet are borne on a lotus; I have sung his praise with poems,  now who in the wide world can equal me?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top