(3261)

(3261)

உரைக்க வல்லேன் அல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்

கரைக்கண் என்று செல்வன்நான்? காதல் மையல் ஏறினேன்,

புரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே,

இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

 

பதவுரை

புரைப்பு இலாத பரம்பரனே

புரையற்ற பரத்வம் பொருந்திய எம்பெருமானே!

பொய் இலாத

(என்னோடுண்டான கலவியில்) பொய்யில்லாத

பரம் சுடரே

பரஞ்சோதிப் பெருமானே!

உரைக்க வல்லேன் அல்லேன்

நான் ஒன்றும் சொல்ல சக்தியுடையேனல்லேன்;

உலப்பு இல்

முடிவில்லாத

உன் கீர்த்தி வெள்ளத்தின்

உனது ப்ரணயித்வ குணக் கடலினுடைய

கரைக் கண்

கரையிடத்து

நான் என்று செல்வன்

நான் என்றைக்கு அடியிடுவேன்? (ஒரு நாளும் அடியிடமாட்டேன்;)

காதல்

பிரேமத்தினால்

மையல் ஏறிறனேன்

பிச்சேறிக் கிடக்கிறேனத்தனை

நல்ல

விலக்ஷணர்களான

மேல் மக்கள்

நித்ய ஸூரிகள்

இரைத்து ஏத்த

பேராரவாரஞ்செய்து துதிக்க (அவ்வழியைப் பின்பற்றி)

யானும் ஏத்தினேன்

நானும் சிறிது துதித்தேனித்தனை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணம் தம்முடைய பேச்சுக்கு நிலமன்று என்பதை அழகுபட அருளிச்செய்கிறார்.  உரைக்கவல்லேனல்லேன்-உன்னுடைய பிரணயித்வ குணத்தை அநுபவித்தநுபவித்து உள்ள முருகுவே னத்தனையொழிய இன்னபடி யென்று பேசவல்லேனல்லேன் என்றபடி. முழுதும் பேச முடியாமற்போனாலும் பேசலாமளவு பேசினாலொவென்ன, உன் உலப்பில் கீர்த்திவெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன் நான் என்கிறார்; உன்னுடைய ப்ரணயித்வ குணஸமுத்ரத்தின் கரையிலேதான்; என்னால் அடியிடமுடியுமோ? என்கை.  கடலினுள்ளே இறங்கமுடியா முடியாதா என்கிற விசாரம் ஒருபுறமிருக்கட்டும்; கடற்கரைதன்னில் சென்று நிற்கவும் ப்ரஸக்தியில்லையே என்கிற இச்சொல்லழகு சாலவும் ரஸிக்கத்தக்கது.

இங்ஙனே கரையருகும் சொல்லப்போகாத விஷயத்தில் நீர் ஏதோபேசிக்கொண்டிருக்கிறீரே, இஃது என்ன? என்று எம்பெருமான் கேட்டனனாகக்கொண்டு காதல் மையலேறினேன் என்கிறார்.  ப்ரேமத்தாலே கலங்கினேன்; கலங்கினவர்களின் செயலுக்கு ஓர் அடைவுமுண்டோ என்றவாறு.

ஆழ்வீர்! உம்முடைய சொற்களை நோக்குமிடத்து, நீர் என்னுடைய குணக்கடலைக் கரைகண்டவராகத் தோற்றுகின்றீர்; இல்லையாகில் பெரிய பெரிய துதிமொழிகளைப் பேசப் புறப்பட்டிருக்கமாட்டீலே யென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினதாகக்கொண்டு, இரைத்து நல்ல மேன்மக்களேமத்த யானுமேத்தினேன் என்கிறார்.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை; அவை வருமாறு:-“இவ்விஷயத்தில் நீர் ப்ரமிப்பானேன்? ப்ரமிப்பாருக்கு ஓர் ஆலம்பநம் வேண்டாவோவென்ன, நிதய் ஸூரிகள் பித்தேறி ஏத்தக்கண்டேன். அத்தாலே செய்தேனென்கிறார்.  நித்ய ஸூரிகளோடு இவரோடு அவன்றன்னோடு வாசியற்றிறே இவ்விஷயமிருப்பது.  ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தியான தான் அறியப்புக்காலும் தனக்கும் தன் தன்மையறிவரியனாயிறேயிருப்பது; தன்னையறிப்புக்க வேதங்கள் எனப்பட்டது படுமத்தனை தானும். (புரைப்பில்லாத பரம்பானே பொய்யில்லாத பரஞ்சுடரே!) நீ ஸர்வஸ்மாத்பரனாயிருக்கிற இருப்பில் புரையில்லாதாப் போலே என்னோட்டைக் கலவியால் வடிவிற்பிறந்த புகரிலும் புரையின்றிக்கேயிருக்கிறவனே! அன்றிக்கே, நிரவதிகமான ப்ரணயித்வகுண ஸத்பாவத்தில் கண்ணழிவில்லாதாப் போலே என்னோட்டைக் கலவியிலும் பொய்யின்றிக்கே அத்தால் வந்தபுகர்  வடிவிலே தோற்ற விருக்கிறவனே யென்னுதல்……..பரமபக்தியுக்தராய்க்கொண்டு கடல்கிளர்ந்தாப் போலே இரைத்துக்கொண்டு நித்யஸூரிகள் ஏத்தக்காண்கையாலே நானும் ஏத்தினேனல்லது, நான் சக்தனாய் ஏத்தினேனோவென்கிறார்.”

 

English Translation

I am not fit to describe your infinite glory-flood.  When will I reach its banks? Alas, I swoon with love. O Lord of faultless effulgence, you are indifferent to me. Great and good celestials stand and sing your praise; I too sang

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top