(3242)

(3242)

பாலனா யேழுல குண்டு பரிவின்றி,

ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,

தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே

மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.

 

பதவுரை

பாலன் ஆய்

சிறு குழவியாகி

பரிவு இன்றி

அநாயாஸமாக

ஏழ் உலகு உண்டு

ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து

ஆல்இலை

ஆலந்தளிரிலே

அன்னவசம் செய்யும்

நித்திரை செய்தருளின

அண்ணலார்

ஸ்வாமியினுடைய

தாள் இணை மேல்

உபய பாதங்களின் மீது

அணி

சாத்தப்பெற்ற

தண் அம்

குளிர்ந்தழகிய

துழாய் என்றே

திருத்துழாய்மாலை யென்றே வாய் வெருவிக்கொண்டு

வல் வினையேன் மட வல்லி

வலிய பாபத்தைப் பண்ணின என்னுடைய இளங்கொடி போன்ற மகள்

மாலும்

வ்யாமோஹிக்கின்றாள்;

ஆல்

அந்தோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பண்டு ஆவிலையில் பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளிலே சாத்தின திருத்துழாயை இப்போது பெறவேணுமென்று என் மகள் (பாரங்குசநாயகி) ஆசைப்படுகின்றாளென்று திருத்தாயார் கூறுகின்றான். இவ்வுலகமெல்லாம் பிரளய வெள்ளத்தில் அழுந்தி அழியப்புகுங்கால் எம்பெருமான் இவற்றையெல்லாம்; தனது திருவயிற்றிலே வைத்து ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்ததாக நூற்கொள்கை. அது என்றைக்கோ நடந்த விஷயம். அப்போது அந்த வடதனசாயிப் பெருமானுடைய தாளிணை மேலணிந்த தண்ணந்துழாய்மாலையை இப்போது என் மகன் அபேகூஷிக்கின்றாளேயென்கிறாள்.

பாலனாய் என்ற சொல்லாற்றலால் நம்பிள்ளை அருளிச் செய்தாவது-‘பருவம்நிரம்பின பின்பு லோகத்தை யெடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில் என் மகள் இப்பாடுபடாள் கிடீர்” என்பதற்காக.  வயது சென்றவனாயிருந்து இவ்வருந்தொழில் செயதால் அவ்வளவாக ஈடுபடவேண்டியிராது; பச்சைப்பசுங் குழந்தையாயிருந்து கொண்டு செய்த செயலாகையாலே ஈடுபாடு மிக்கது போலும்.

“பாலனாயேழுலகுண்டு”  என்ற சொற் சேர்க்கையில் ஒரு பொருளின்பம் காட்டுகிறார் நம் பிள்ளை; அதாவது-சிறு குழந்தைகளின் கையிலே எது கிடைத்தாலும் சடக்கென எடுத்து வாயிலே போட்டுக் கொள்வது இயல்லாதலால் ஆலிலைப் பாலகனும் ஏழுலகுண்டது புத்திபூர்வகமாகவன்று; பிள்ளைத்தனத்திற்கு ஏற்ப ‘இது ஸாத்மிக்கும், இது ஸாத்மியாது’ என்று அறியாதே உலகங்களை வாயிலிட்டுக்கொள்ள, ரக்ஷகனுடைய வியாபாரமாகையாலே இது ரக்ஷணமாய் முடிந்ததாம்.

பரிவுஇன்றி ஸ்ர= பரிவாவது வருத்தம்; சிறிதும் ஆயாளமில்லாமையால் மிக எளிதாகச் செய்தமை சொன்னபடி.

அன்னவசம் செய்யும்=வயிற்றினுள் அன்னம் சென்றவாறே பரவசமாகக் கண்ணுறங்கிப்போவது உலகவியற்கையாதலால் நித்திரைக்கு அன்னவசம் என்று பெயரிடப்படுகின்றது போலும். எம்பெருமானும் ஏழுலங்களையுண்டதனால்  உடனே நித்திரையுண்டாகத் தட்டில்லையே.

இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“(அன்னவசம் செய்யும்) தன் வசமாகவன்றிக்கே அஹமந்தம் என்கிற அன்னத்துக்கு வசமாக.” என்பதாம். முக்தி தசையில் அஹமந்தம் என்று சொல்லுகிறவர்கள் சேதநர்கள்; அவர்களெல்லாரும் பிரளய காலத்தில் திருவயிற்றினுள்ளடங்கி மெய்யாகவே அன்னமாக ஆய்விட்டபடியை அழகாக அருளிச்செய்தபடி.

அண்ணலார் தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றேஸ்ர= “தோளிணை மேலும் நன்மார்பில் மேலும் சுடர்முடி மேலும் தாளிணை மேலும் புணைந்த தண்ணந்துழாயுடையம் துழாய்மாலை அணிவது உண்டாகிலும் அடியே பிடித்து அடியை விடாதவிவளுக்குத் தாளிணைமேலணி தண்ணந்துழாயலொழிய வேறொன்றிலும் நெஞ்சு செல்லாதாகையாலே அதனiயே வாய் வெருவுகிறபடி.

தண்ணந்துழாயென்றேஸ்ர= ‘பாலனாய் ஏழுலகுண்டதும் ஆலிலை யன்னவசஞ் செய்ததும் எப்போதோ கழிந்ததாயிற்றே! அப்போதணிந்த திருத்துழாய்மாலை இப்போது கிடைக்க வழி யில்லையே!’ என்று எவ்வளவு சொன்னாலும் கேளாமல் மீண்டும் மீண்டும் அதனையே வாய்வெருவுகின்றாளென்றபடி.

என்றேமாலுமால்= திருத்துழாய் திருத்துழாயென்று வாய் வெருவுவதோடு நிற்கவில்லையே! உள்ளமும் குலையாநின்றாளே! என்;கிறாள். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்!-“மணிப்ரபையிலே அக்நிபுத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேணுமோ?” என்பதாம். உலகத்தில் மணி யொளியிலே சிலர்க்கு நெருப்பு என்கிற ப்ரமம்  உண்டாகலாம்; இங்ஙனமே ப்ரமம் உண்டானதற்காக அவ்வஸ்துவானது அக்நியின் கார்யமான சுடுகையைப் பண்ணமாட்டாது; சுடுமாகில் ஆச்சரியப்படவேண்டியதேயாகும். அதுபோல இங்குங் காண்க: ஆலிலையன்ன வசஞ்செய்யு மண்ணலாருடைய தாளிணை மேலணிதண்ணந்துழாய்மாலை யென்பது இப்போது இல்லாத வஸ்துவே: அதனை வாயாற் சொல்வது ப்ரமத்தின் காரியமாக இருக்கட்டும்; ‘மாலுமால்’ என்னும்படி வியாமோஹமும் உண்டாகிறதே! என்ன ஆச்சரியமிது; என்றபடி.

 

English Translation

Alas, My frail daughter swoons, asking for the cool Tulasi from the feet of the Lord, -who swallowed the seven worlds with ease, and slept as a child on a fig leaf.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top