(3222)

(3222)

முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,

கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,

மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்

பட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.

 

பதவுரை

முட்டு இல்

இடையூறொன்றுமில்லாத

பல் போகத்து

பலவகையான போகங்களையுடையவனும்

ஒரு தனி நாயகன்

ஒப்பற்ற தலைவனும்

மூ உலகுக்கு உரிய

மூவுலகத்தவர்கட்கும் பொதுவிலே போக்யமான

கட்டியை

கருப்பங்கட்டி போன்றவனும்

தேனை

தேன் போன்றவனும்

அமுதை

அமிருதம் போன்றவனும்

நல் பாலை

நல்ல பால்போன்றவனும்

கனியை

கனி போன்றவனும்

கரும்பு தன்னை

கரும்பு போன்றவனுமாய்

மட்டு அவிழ்

மது பெருகப்பெற்ற

தண் அம் துழாய் முடியானை

குளிந்தழகிய திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்த வனுமான எம்பெருமானை

வணங்கி

நமஸ்கரித்து

அவன் திறத்து

அவன் விஷயத்திலே

பட்ட பின்னை

ஆட்பட்டோனாதாலால்

யான்

இப்படிப்பட்ட அடியேன்

இறை ஆகிலும்

சிறிதளவும்

என் மனத்து

என் மனத்தில்

பரிவு இலன்

பீடையையுடையே னல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானுடைய போக்யதையை அநுஸந்தித்து அவனுக்கு அடிமை செய்வதிலேயே ஊன்றியிருக்குமெனக்கு ஒரு அச்சமுமில்லையென்கிறார்.

நாமும், நம்மில்மேற்பட்டவர்களான தேவர்களும், அவர்கட்கும் தலைவரான இந்திரன்,  பிரமனீசன் முதலியாயினோரும் பலவகைப்பட்ட போகங்களை அனுபவிப்பது உண்டாயினும் ஒவ்வொருவருடைய போகமும் அளவுபட்டதாயும், ஒரு காலத்திலே அழியக் கூடியதாயுமிருக்கு மத்தனையல்லது ஸ்திரமாய் அளவு கடந்ததாயிருக்கும். போகம் எம்பெருமானொருவனுக்கே யாகுமென்பது விளங்க “முட்டில் பல் போகத்து” என்றார். “யாங்கடவுளென்றிக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ என்றால் அஃதுனக்கு வியப்பாமோ?” (திருவரங்கக் கலம்பகம்-1.) என்றபடி ஈச்வராபிமானிகளெல்லார்க்குள்ளும் தனி நாயகன் ஸ்ரீமந்நாராயணனேயாவன் என்பதுபோன்ற “ஒரு தனி நாயகன்” என்றார். ‘மூவுலகுக்குரிய’ என்பது தனி நாயகளுக்கு அடைமொழியாகும். ‘மூவுலகுக்குரிய கட்டியை’ என்று மேலோடே அந்வயித்தலுமுண்டு. ஒவ்வொரு உலகத்தவர் ஒவ்வொன்றை போக்யவஸ்துவாகக் கொண்டவராயினும் ஸர்வஸாதாரண போக்யதை எம்பெருமானொருவனுக்கேயாகும். இரண்டாமடி முழுவதாலும் எம்பெருமானுடைய ஸ்வரூபத்திலுளள் போக்யதை பேசப்பட்டது. மூன்றாமடியில் “மட்டவிழ் தண்ணந்துழாய் முடியானை” என்பதனால் திவ்யமங்கள விக்ரஹத்தின் போக்யதை அநுபவிக்கப்பட்டது. கட்டியை என்று தொடங்கி (கட்டி, தேன், அமுது, பால், கனி, கரும்பு என்று) ஆறு சுவைப் பொருள்களைக் கூறியது ஆழ்வார் தமக்கு எம்பெருமானே அறுசுவை யடிசில் என்று காட்டினபடியாம்.

ஒரு தேசவிசேஷத்திலே சென்று பெறவேண்டிய அனுபவம் எனக்கு இந்நிலத்திலேயே கிடைத்து விட்டதனால் ஒரு குறையுமுடையேனல்லேன் என்றாராயிற்று.

 

English Translation

The Lord of the three worlds is sweet as a sugarcube, milk, fruit, honey, sugarcane, and ambrosia.  He enjoys his creation endlessly at all times. Becoming his devotee, I have not a care left. ‘

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top