(3206)
கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓராயிரம் தோள்துணித்த
புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே?
பதவுரை
|
மாவலி |
– |
‘மஹாபலியே! |
|
நான் |
– |
நான் |
|
மூ அடி |
– |
மூன்றடி நிலத்தை |
|
கொள்வன் |
– |
ஏற்றுக் கொள்வேன், |
|
தா |
– |
கொடுப்பாயாக’ |
|
என்ற |
– |
என்ற சொன்ன |
|
கள்வனே |
– |
வஞ்சகனே! |
|
கஞ்சனை |
– |
கம்ஸனை |
|
வஞ்சித்து |
– |
தொலைத்து |
|
வாணனை |
– |
பாணாசுரனை |
|
உள் வன்மைதீர |
– |
மன உறுதியானது அழியும்படி |
|
ஓர் ஆயிரம் தோள் துணித்த |
– |
ஆயிரம் புயங்களையும் அறுத்த |
|
புள் வல்லாய் |
– |
கருடவாஹனனே! |
|
உன்னை |
– |
உன்னை |
|
எஞ்ஞான்று |
– |
எக்காலம் |
|
பொருந்துவன் |
– |
அடையப்பெறுவேன்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியவர்களைக் காத்தருளு முபாயத்தை நன்குணர்ந்தவனும் ப்ரதிகூல நிரஸகத்தில் வல்லவனுமான உன்னை நான் சேருவது என்றைக்கு? என்கிறார்.
கொள்வன் நான் மாவலி மூவடிதாவென்ற கள்வனே! – குறியமாணுருவாகி மாவலி பக்கல் யாசகனாய் சென்றகாலத்து முந்துறமுன்னம் ‘கொள்வன் நான்’ என்றானாம; யாசகன் உதாரனைப் பலபடியாகப் புகழ்ந்து பேசிவிட்டு ‘இன்ன பொருள் எனக்கு நீ தரவேணும்’ என்று யாசிக்க வேண்டுவது முறைமையாயிக்க, வாமனன் அங்ஙனம் ஒன்றும் புகழ்ந்து பேசாதே வாய்திறந்து பேசும்போதே ‘கொள்வன் நான்’ என்றானாம்; என்றைக்கு யாசித்தறியாதவனாதலால் இன்னபடி சொல்ல வேணுமென்று அறிந்திலேன் போலும்.
வாமன மூர்த்தியின் மிக அழகிய வடிவத்தைக் கண்டு இவனுக்கு ஏதாவது தானம் பண்ணியே யாகவேணுமென்று குதூஹலங்கொண்ட மாவலி ‘இவன் நம் புக்கலில் தானம் பெறுவனோ மாட்டானோ’ என்று ஸந்தேஹித்திருக்க, அந்த நிலைமையைக் கண்ட வாமனன் அவனுடைய சங்கைதீரக் “கொள்வன் நான்” என்றானாகவுமாம்.
மாவலி = அண்மைவிளி. பெரியோனைப் பெயர்சுட்டிச் சொல்லாகாது என்பது வாமன மூர்த்திக்குத் தெரியாதோ? ‘மஹாப்ரபோ!’ என்று சிறப்பாகவன்றோ சொல்லவேணும்; ‘மாவலி!’ என்று பெயரையிட்டுச் சொன்னது ஏன்? என்று சங்கித்துக்கொண்டு நம்பிள்ளை யருளிச்செய்வன காண்மின்; “பிறந்தவன்றே பிக்ஷையிலே அதிகரிக்கையாலே பிரபுக்களை உபசரித்து வார்த்தை சொல்லியறியானே; முன்பு சிலபாடே தாழ்வு சொல்லியறியான்; பிறந்த பின்பு வாஸநை பண்ணுகைக்கு நாளில்லை; அத்தாலே மாவலி யென்கிறான். எல்லாரும் கன்னை உயரச்சொல்லுமதொழிய இப்படி சொல்லக்கேட்டறியாமலே ‘இவனொரு பாலன் நம் முன்பேநின்று சிறுபேரைச் சொல்லி யழைத்தானே’ என்று இனியனாய் முகத்தைப் பார்த்து ‘உனக்கு வேண்டுவதென்?’ என்றான்; ‘மூவடி’ என்று விடை கூறினான் வாமனன். (அது கேட்ட மாவலி) தன் பக்கல யாசிக்க வருமவர்களில் இப்படி சிறுக அர்த்திப்பாரில்லாமையாலே அநாதரித்திருந்தான்; அந்யபரதை பண்ணாதே தா என்கிறான்.”
என்றகள்வனே! = ‘இந்திரனோ சரணம்புக்கு நின்றான்; உதாரணனாயிருப்பானொருவன் அவனுடைய ராஜ்யத்தைப் பறித்துக்கொண்டான்; இவன்றான் ஔதார்யமென்றொரு தர்மபாஸத்தை ஏறிட்டுக் கொண்டிருக்கையாலே ராவணாதிகளைப் போலே இவனை யழிக்கும் வழியில்லை; என்ன செய்வது?” என்று பார்த்து, தன்னை யாசகனாக்கி, ‘இவன் தேவகாரியம் செய்ய வந்தான்’ என்று சுக்கிரன் முதலானோர் சொல்லி மறுக்க செய்தேயும் அவன் நெஞ்சில் படாதபடி அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய்மாளப் பண்ணின வஞ்சனங்களெல்லாவற்றையும் நினைத்துக் கள்வனே! என்கிறார்.
கஞ்சனை வஞ்சித்து = வஞ்சனை செய்வதென்பது தோஷமேயல்லது குணமன்றே; குணக்கடலான எம்பெருமான் வஞ்சித்தானென்றால் அழகாகுமோ? என்கிற சங்கையிலே நம்பிள்ளையருளிச் செய்கிறார்- “கம்ஸன் கோலின் வஞ்சனத்தை அவன்றன்னோடே போக்கினவனே!” என்று கம்ஸன் கண்ணபிரானுக்கு மாதுலனாகையாலே நேர்கொடுநேரே வந்து தீங்கு செய்யமாட்டாமல் பல ச்ருத்ரிம வழிகளிலும் சென்று பார்த்தான்; ‘ஐயோ என்னுடைய மருமகன் இறந்துவிட்டானே’ என்று கண்ணீர்விட்டு அழவேணாமென்று ஸமயம் பார்த்திருந்தான்; அவன் இங்ஙனே கோலியிருந்த வஞ்சனத்தை அவனோடே போம்படி பண்ணினானாயிற்று கண்ணபிரான்.
English Translation
O Wicked Lord who begged three steps and took the Earth! O Lord who destroyed Kamsa, and rides the Garuda bird! O Lord who cut as under the thousand arms of Bana! When, O when, will I join you?
