(3187)
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே.
பதவுரை
|
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை |
– |
செறிந்த சுடர்ச் சோதி யுருவனாய் |
|
பங்கயம் கண்ணனை |
– |
தாமரை போன்ற திருக்கண்களையுடையனாய் |
|
பயில இனிய |
– |
பழகப் பழகப் பரம போக்யனாய் |
|
நம் பால் கடல் சேர்ந்த பரமனை |
– |
நமக்காகத் திருப்பாற் கடலில் துயில் கொண்டிருளும் பரம புருஷனான எம்பெருமானை |
|
பயிலும் திரு உடையார் |
– |
நிரந்தராநுபவம் பண்ணுகையாகிற செல்வமுடையவர்கள் |
|
யவர் ஏனும் |
– |
எது பிறப்பு ஏதியல்வாக நின்றவரானாலும் |
|
அவர் |
– |
அவர்களே |
|
பயிலும் பிறப்பிடை தோறும் |
– |
மேன்மேலும் நேர்கின்ற பிறவிகள் தோறும் |
|
எம்மை |
– |
நம்மை |
|
ஆளும் |
– |
அடிமைகொள்ளவில்லை |
|
பரமர் கண்டீர் |
– |
மஹான்களாவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரேனுமாகிலும் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார். *இச்சாக்ருஹீதாபிமதோரு தேஹ: * என்கிறபடியே அடியவர்களுக்காக ஸ்வஸங்கல்பத்தாலே பரிக்ரஹித்தருளும் திருமேனி தேஜோராசி மயமாயிருக்கும்படியைச்சொல்லகிறார். பயிஞ்சுடரொளி மூர்த்தியை என்பதனால். சுத்தஸத்வமயமாய் ஸ்வரூபப்ரகாசகமான திவ்ய விக்ரஹத்திலீடுபட்டவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்கை.
பங்கயக்கண்ணை = கீழ்ச்சொன்ன வடிவழகிலும்கூட அகப்படாதாரையும் அகப்படுத்திக் கொள்ளவல்ல திருக்கண்ணழகிலே யீடுபட்டு “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே” என்றாற்போலே பேசுமவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்கை. “க: புண்டரீ கநயந: புருஷோத்தம: க” என்கிறபடியே திருக்கண்ணழகே பரத்வ ஸூசகமாகையாலே அந்தப் பரத்வத்திலே யீடுபட்டவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றவாறு.
பயிலவினிய = ‘பயிலப்பயில வினிய’ என்றபடி. பகவத் விஷயத்தில் இடைவிடாத பரிசயம் பண்ணினாலும் இனிமை (-போக்யதை) ப்ரதிபத்தி விஷயமாகுமேயல்லது வைரஸ்யம் ஒருபோதும் தோற்றாதென்று கருத்து. இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “இப்படி வடிவழகும் கண்ணழகும் கண்ணழிவற்றிருக்கையாலே இனியதாயிருக்குமிறே. இதர விஷயங்கள் கிட்டுத்தனையும் ஒன்றுபோலேயாய், கிட்டினவாறே அகல வழிதேடும்படியாயிருக்கும்” என்று- எப்பொழும் நாள் திங்களளரண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுத மென்னும்படியான நித்யாபூர்வமான விஷயமாகையாலே எனை யூழிகாலம் இடையறாத பரிசயம் பண்ணினாலும் ஸாரஸ்யமே அதிகரித்துச் செல்லும் விஷயமென்றபடி.
நாற்பாற்கடற்சேர்ந்த பரமனை=நம்போன்ற அடியவர்களின் ஆர்த்தத்வநி செவிப்படுகைக்காகவும், செவிப்பட்டவுடனே பதறி யெழுந்துவந்து பரித்ராணம் செய்தருள்வதற்காகவும் திருப்பாற்கடலில் சாய்ந்தருளும்படியை வாயாரப்பேசி அந்தக் கிடையழகிலே யீடுபட்டிருக்குமவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றபடி. பரமன் என்பதற்கு – தன்னிற்காட்டில் மேம்பட்டாரில்லாதவன் என்று பொருள். இங்கு நம்பிள்ளையருளிச் செய்கிறார் காண்மின்:- ‘(பரமனை) வடிவழகாலும் குணங்களாலும் அல்லாதாரைக்கழித்து இங்கே ஓர் ஏற்றம் சொன்னீர்; மேன்மைக்கு இவனுக்கு அவ்வருகே தான் ஒரு விஷயமுண்டோ வென்னில்; மேன்மைக்கும் இவனுக்குவ்வருகு ஒரு விஷயமில்லை.” என்று.
பரமனைப்பயிலுந் திருவுடையார்=எம்பெருமானோடு இடைவிடாது பழகுவதையே பெருஞ் செல்வமாக வுடையவர்கள். அற்ப பலன்களுக்காக எம்பெருமானை அtகபவர்களாயிருந்தத் அப்பலன் கைபுகுந்தவாறே விலக நினைப்பர்கள்; அங்ஙனல்லாமல் அவன்தன்னையே ப்ரயோஜனமாகக்கொண்டு நெருங்கினவர்கள் விலகவழியில்லையே; ஆகவே “பரமனைப் பயினுந் திருவுடையார்” என்றது எம்பெருமானையே ஸ்வயம் ப்ரயோஜநமாகப் பற்றின சீமான்கள் என்றபடி. திருவுடையார் என்றதனால், பரமனிடத்து நெஞ்சு குடிகொண்டிருத்தலே சிறந்த செல்வமென்று தெரிவித்தவாறாம். இளையபெருமாள் “கதித்ரபிடகாதர:” என்கிறவடியே மண்வெட்டியும் புட்டுக்கூடையுமாயக் காட்டுக்குப் புறப்படுகையில் அவரிடத்து என்ன செல்வமிருந்தது; அப்போது * லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:* என்று பேசப்பட்டிருக்கின்றார்; பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியிலே ஒழிவில்கால மெல்லாமுடனாய் மன்னிவிழுவிலா வடிமை செய்யப்பெற வேணுமென்று பாரிப்புக்கொண்டிருந்தாரே, அதையிட்டுத்தான் அப்போது லக்ஷ்மிஸம்பந்த ரென்று பேசப்பட்டார். விபீஷணாழ்வான் ராவண கோஷியில் நின்றும் துரத்தப்பட்டு ஸ்ரீராமகோஷ்டிக்கும் ஆளாகப் பெறாமல் த்ரிசங்க ஸ்வர்க்கமாக ஆகாசத்தில் நின்றிருந்த காலத்து “அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்” என்பப்பட்டான்; அப்போது அவனிடத்திருந்த ஸ்ரீயாவது என்ன? ‘நாம் ஸ்ரீராம கோஷ்டியில் அந்வயிக்கப் பெறாதொழியினும் இனி அரக்கர் திரளிலே புகுவதென்பது கிடையாது’ என்று கொண்டிருந்த அத்யவஸாயமே அவற்குச் சிறந்த செல்வமாயிற்று. கஜேந்திராழ்வான் முதலை தன்னாலடர்ப்புண்டு துடித்துக் கிடந்த காலத்து *ஸ து நாகவர: ஸ்ரீமாந் * எனப்பட்டான்; அப்போது அவற்கு இருந்த ஸ்ரீ யாதுகொல்? உயிர்போகுந்தருணத்தில் கையிற் பூ செவ்வியழியாமே எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட வேணுமென்று கொண்டிருந்த குதூகலமேயாயிற்று ஸ்ரீ எனப்பட்டது; ஆக இவ்வகையிலே பக்தகோஷ்டிகளில் ப்ரஸித்தமான செல்வமே இங்குத் திரு என்பதனால் விவக்ஷிக்கப்படுகின்றதென்க.
யவரேலும் = பரமனைப் பயிலுந் திருவுடையவர்கள் பிறந்த வருணம் எதவாகவுமாம், அவர்களுடைய அறிவு, தொழில் முதலியவை எப்படிப்பட்டதாகவுமாம், அவற்றைக் கணிசிக்கத் தேவையில்லை; அவர்களிடத்துப் பரமனைப்பயிலுந் திரு உள்ளதா என்பதொன்றே பார்க்கத்தக்கது என்றபடி.
அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடைதோறு எம்மையாளும்பரமர் = பகவானுக்கு நாங்கள் ஆட்பட்டவர்களல்லோம்; அத்தகைய பாகவதர்கேட்கே ஆட்பட்டவர்கள் என்கிறார். மேன்மேலும் பிறப்பது எமக்கு ஹேயமேயாயினம் பாகதவதர்கட்கு ஆட்பட்டிருந்த்தலாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெறவதாமாகில் எத்தனை பிறப்புகள் நேர்ந்தாலும் உத்தேச்யமே என்கிற கருத்து. “பயிலும் பிறப்பிடை தோறு” என்பதில் உய்த்துணரத்தக்கது. இங்க இருபத்துநாலாயிரப்படியில் பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்மின்:- “*நின்பன்மா மாயப் பல்பிறவியென்று நிந்தித்த ஜன்மத்தையும் அநுமதி பண்ணுகிறார் ததீய சேஷத்வ ரஸத்தாலே” என்று.
English Translation
The Lord of lotus eyes and effulgent form, who is sweet to the heart, reclines in the ocean of milk. Those who worship him, -who ever they may be, -are my masters, through seven lives, just see!
