(3161)
ஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ,
அளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற,
களிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே.
பதவுரை
|
அளி மகிழ்ந்து |
– |
உயிர்களைப் பாதுகாத்தலை விரும்பி |
|
உலகம் எல்லாம் |
– |
எல்லா உலகங்களையும் |
|
படைத்து |
– |
ஸ்ருஷ்டித்து |
|
அவை |
– |
அவ்வுலகங்களெல்லாம் |
|
ஏத்த நின்ற |
– |
(தன்னைத்) துதிக்கும்படி நிற்கின்றவனும் |
|
களி மலர் துன்வன் |
– |
தேனையும் பூவையுமுடைய திருத்துழாய் மாலையை யணிந்தவனும் |
|
எம்மான் |
– |
எமக்குத் தலைவனும் |
|
மாயனை |
– |
மாயங்களையுடையவனுமாகிய |
|
கண்ணனை |
– |
கண்ணபிரானை |
|
ஒளி மணிவண்ணன் என்கோ |
– |
ப்ரகாசமுள்ள மாணிக்கம்போன்ற வடிவையுடையவனென்பேனோ? |
|
ஒருவன் என்று |
– |
ஒப்பற்ற கடவுள் என்று |
|
ஏத்த நின்ற |
– |
(தன்னுடைய அடியவர் யாவரும்) துதிக்கும்படி நின்ற |
|
நளிர்மதி சடையன் என்கோ |
– |
குளிர்ந்த பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியிலேயுடைய ருத்திரன் என்பேனோ? |
|
நான்முகன் கடவுள் என்கோ |
– |
பிரமதேவனெப்பேனோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இந்தவுலகில் பிரதானரான சிவனையும் பிரமனையும் எம்பெருமான் தான் உடைமையாகப் பற்றிருத்தலை ஆழ்வார் இந்தப்பாசுரத்தில் அருளிச் செய்கிறார். வடிவழகில் மிக்க ஈடுபாட்டினால் “ஒளிமணிவண்ணனென்கோ என்று பின்னும் கூறினார். “ஒருவனென்றேதத் நின்ற நளிர்மதிச்சடையனென்கோ” என்ற விடத்திற்கு நம்பிள்ளையீடு;- “இவன் ஜகத்துக்கு ப்ரதாநனென்று அவிவேகிகள் ஏத்தும்படியாய்க் குளிர்ந்த மதியையும் சடையையுமுடைய ருத்ரனென்பேனோ” ஏத்தும்படியாய்க் குளிர்ந்த மதியையும் சடையையுமுடைய ருத்ரனென்பேனோ” என்று.
மஹாப்ரளயத்தில் ஆத்மவர்க்கங்கள் யாவும் உருமாய்ந்து மூலப்ரக்ருதியிலே லயித்துக் கிடக்க, எம்பெருமான் ‘இவ்வுயிர்கள் நம்மையறிந்து ஈடேறவேணும்’ என்று தனது திருவுள்ளத்திலெழுந்த பெருங்கருணையால் தன்னையடைவதற்குத் தகுதியாகக் கைகால் முதலிய உறுப்புக்களோடு அவ்வுயிர்களைப் படைப்பதானென்பது நூல் துணியாதலால் “அளிமகிழ்ந்து உலகமெல்லாம் படைத்து” என்றார். ஏத்த என்று மேல்வருவதனால், ‘உலகமெல்லாம்’ என்பது உலகத்து உயிர்வர்க்கங்களையே காட்டும். எம்மான் என்பதற்கு- என்னைத் தேவதாந்தரங்களுக்கு ஆட்படவொட்டாது தன்னிடத்தே அடியவனாம்படி செய்தவன் என்று கருத்துக் கொள்ளலாம். மாயன்- வெண்ணெய் களவாடுதல் முதலிய ஆச்சரியமான தொழில்களையுடையவன் என்று உரைப்பர்.
‘எத்தநின்ற சடையன்’ என்றும், ‘படைத்து ஏத்த நின்ற துளவன்’ என்றும் அந்வயிக்கும்.
English Translation
Shall I call my Krishna a rare gem of radiance?, or crescent bearing Siva?, or four-faced creator Brahma?, or the Lord worshipped by them?, or the Lord who made them? My Lord of gladness and grace wears the nectared Tulasi garland.
