(3155)

(3155)

கூவுமா றறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ,

மேவுசீர் மாரி என்கோ விளங்குதா ரகைகள் என்கோ,

நாவியல் கலைகள் என்கோ ஞானநல் லாவி என்கோ,

பாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.

 

பதவுரை

பாவுசீர் கண்ணன்

பாம்பின திருக்கல்யாண குணங்களையுடைய க்ருஷ்ணனென்ற திருநாமமுடையவனும்

பங்கயம் கண்ணன்

செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனும்

எம்மானை

எமது தலைவனுமாகிய எம்பெருமானை

குன்றங்கள் அனைத்தும் என்கோ

எல்லாமும் என்று சொல்வேனோ?

மெவு சீர் மாரி என்கோ

(கண்டார்) விரும்பும்படியான சிறப்பையுடைய மழையென்பேனோ?

விளங்கு தாரகைகள் என்கோ

பிரகாசிக்கின்ற நக்ஷத்திரங்களென்பேனோ?

நா இயல் கலைகள் என்கோ

நாவினால் முயற்சியோடு உச்சரிக்கப்படுகின்ற கல்விகளென்பேனோ?

ஞானம் நல் ஆவி என்கோ

அர்த்த  ஞானத்திற்காரணமான நல்ல சப்தங்கள் என்பேனோ?

கூவும் ஆறு

(எம்பெருமானைச்) சொல்லும் விதத்தை

அறியமாட்டேன் அறிகின்றேனில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கீழ்ப்பரசுரத்திற் கூறிய பஞ்சபூதங்களின் காரியப் பொருளாக எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் அநுபவிக்கிறார். குன்றங்கள் முதலியவை எம்பெருமான் வடிவமாகவே ஆழ்வார்க்குத் தோற்றுதலால் “பங்கயக் கண்ணன்” என்றதனோடு “குன்றங்களனைத்தும்” என்பன முதலியவற்றோடு வாசியில்லாமல் இவர் ஈடுபடுகின்றனரென்க. குன்றம் – பூமிதத்துவத்தின் காரியம் “பூமியினுடைய காடிந்யம் ஓரிடத்திலே திரண்டாற்போலேயாய்ப் பூமிக்கு ஆதாரமாயிருக்கிற பர்வதங்களென்பேனோ?” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. மாரி- ஜலதத்துவத்தின் காரியம். உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏவாகிய சிறப்பையும், வடிவழகினாலும் குளிர்ச்சியினாலும் கண்டாரெல்லாராலும் விரும்பப்படுந் தன்மையையும், எம்பெருமானது திருமேனிக்குப் போலியாகும் மேம்பாட்டையும் பெற்றிருத்தலால் “மேவுசீர் மாரி” என்றார். தாரகைகள் – அக்நிதத்துவத்தின் காரியம். ஒளியுள்ள பொருள்களெல்லாம் அக்நிதத்துவத்தின் காரியமென்பது நூல் தணிபு; கலைகள் – வாய் தத்வத்தின் காரியம். சப்தங்கள் அகசாத்தின் குணமெனப் படுமாயின் அவை செவிப்புலனாருந்தன்மை வாயுவின் உதவியினாலேயே ஆகவேண்டியிருத்தலால் கலைகள் வாயுவின் காரியமாகும். உயிரின் முயற்சியினால் தோன்றும் வாயுவே முயற்சியின் வேறுபாட்டால் வெவ்வேறெழுத்துக்களாக நாபினால் உச்சரிக்கப்பட, அவ்வெழுத்துக்கள் பதங்களாகவும் அந்தப் பதங்கள் வாக்கியங்களாகவும் அவ்வாக்கியங்கள் சாஸ்த்ரங்களாகின்றனவாதலால் ‘நாவியல் கலைகள்’ எனப்பட்டது. ஞானநல்லாவி – ஆகாசதத்துவத்தின் காரியம். ஞானமாவது பொருள்களை உள்ளபடி அறிதல்; ஆவி என்னம் உயிரின் பெயர் ஆகுபெயராய் உடலைக்குறித்து நிற்கும். ஆகவே ‘ஞான நல்லாவி’ என்பதற்கு: அறிவுக்கு உடலான ஓசை விசேஷங்கள்’ என்று பொருள் கொள்ள வேண்டியதாயிற்று. உடலுக்குள் உயிர் தங்கி நிற்றல் போலச் சப்தங்களில் அர்த்த ஞானம் தங்கி நிற்றலால் ஞானத்துக்குச் சப்தங்கள் உடலாகும். “பல்வகைத் தாதுவினுயிர்க்கு உடல்போல், பல சொல்லால் பொருட்கு இடனாக… செய்வன செய்யுள்” என்றது இங்குக் காணத்தக்கது.

“ஆவியென்று லக்ஷணையாலே சரீரத்தைச் சொல்லுகிறது. ஞனாத்தக்கு சரீரமென்று ஜ்ஞாநஸாதனமான சப்தத்தைச் சொல்லுகிறது” என்ற பன்னிராயிரப்படி காண்க.

ஆழ்வார் மயர்வற மதிநலமருளப்பெற்று எல்லாப் பொருள்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல நன்றாக உணர்ந்திருந்தும் “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” என்றபடி தாம் பக்தியினால் பரவசப்பட்டிருத்தலால் எம்பெருமானது தன்மையைப் பேச இயலாமல் “கூவுமாற அறியமாட்டேன்” என்கிறார். இனி, எம்பெருமானது விபூதிகள் இவ்வளவென்று ஓரளவு பட்டிராமையால் அவற்றை முற்றவும் சொல்ல மாட்டாது இங்ஙனம் கூறுகின்றாரெனினும் அமையும்.

 

English Translation

O, How shall I address my Krishna?  I do not know; as the many mountains, or as the good rains, as the bright stars, or as the an of poetry? As the sentiest soul, or as the Lord of lotus eyes?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top