(3153)

(3153)

தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,

நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,

கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,

வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.

 

பதவுரை

தாள் பரப்பி

திருவடியை விரித்து

மண் தாவிய

பூமியெல்லாம் அளந்து கொண்ட

ஈசனை

எம்பெருமானைக் குறித்து

நீள் பொழில்

உயர்ந்த சோலைகளையுடைய

குருகூர் சடகோபன்

ஆழ்வார்

சொல்

அருளிச்செய்த

கேழ் இல்

ஒப்பற்றதான

ஆயிரத்து

ஆயிரத்தில்

இப் பத்தும்

இத்திருவாய்மொழியை

வல்லவர்

ஓதவல்லவர்கள்

ஞாலம் புகழ

உலகம் யாவும் கொண்டாடும் படி

வாழ்வு எய்தி

வாழ்ச்சிபெற்று

(அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே)

வாழ்வர்

விளங்குவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத் திருவாய் மொழியை ஓதவல்லவர்கள் உலகமெல்லாங் கொண்டாடும் படியான வாழ்ச்சியைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.

இப்பதிகம் திருவேங்கடமுடையானைக் கவிபாடினதாயிருக்க “தாள்பரப்பி மண்தாவிய வீசனை” என்றது என்னென்னில்; எல்லாரையும் திருவடிகளின் கீழேயிட்டுக்கொள்ளுகைக்காக நிற்கிறநிலையாலும், * கானமும் வானரமுமானவற்றுக்கம் முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிறபடியாலும் திருவேங்கடமுடையானை உலகளந்த பெருமானாகச் சொல்லப் பொருத்தமுண்டென்பர் ஆசிரியர்கள்.

(வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.) ‘ஞானம்புகழ் வாழ்வர்’ என்றாவது, ‘ஞாலம்புகழ வாழ்வெய்துவர்’ என்றாவது அருளிச்செய்தால் போதுமே; ‘வாழ்வெய்தி வாழ்வர்’ என்றவிது புநருக்தியாவுள்ளதேயென்று சிலர் சங்கிக்ககூடும்: பெறுகிற வாழ்வு இவ்வாத்மாயுள்ளதனைவுமாகும் என்று காட்டுகிறதாகையாலே புநருக்தியில்லை: கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற வாழ்வைப்பெற்று எந்நாளும் அந்த வாழ்வுடனே யிருக்கப் பெறுவர்கள் என்றவாறு. “ஞாலம் வாழ்வெய்திப் புகழ வாழ்வர்” என்று அந்வயித்துப் பொருள்கொள்வதுமுண்டு; அப்போது சங்கைக்கு உதயமேயில்லை.

 

English Translation

Singing this decad of the thousand songs by peerless kurugur Satakpan on the Lord who strode the Earth, wins a life of praise from all.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top