(3141)
தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,
அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,
கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,
நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே.
.
பதவுரை
|
நமன் தமர் |
– |
யமபடர்கள் |
|
தலைப்பெய் காலம் |
– |
வந்து கிட்டுங்காலம் |
|
பாசம் விட்டால் |
– |
காலபாசத்தை வீசினால் |
|
அலைப்பூண் உண்ணும் |
– |
(அப்போது) அலைச்சல் படுகையாகிற |
|
அ அல்லல் எல்லாம் அகல |
– |
அந்தத் துயரமெல்லாம் நீங்க, |
|
பல் கலை ஞானத்து என் கண்ணனை |
– |
பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களாலே அறியத்தக்க எனது கண்ணபிரானை |
|
கண்டுகொண்டு |
– |
காணப்பெற்று |
|
என் நெஞ்சம் |
– |
எனது மனமானது |
|
நிலை பெற்று |
– |
நிலைநிற்கப்பெற்று |
|
உயிர் |
– |
ஆத்மாவும் |
|
நீடு பெற்று |
– |
நித்யத்வத்தைப் பெற்றதாயிற்று. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- – கீழ்ப்பாட்டில் ஆழ்வார்க்கு ஓடின நிலைமையைக்கண்ட எம்பெருமான் ‘இவரை நாம் ஒருவாறு ஸமாதானப்படுத்தாவிடில் இவர் முடிந்தேவிடுவர்போலும்’ என்றெண்ணித் தான் வடக்குத் திருமலையில் நிற்கும்படியைக் காட்டியருள, ஆழ்வாரும் கண்டு தரித்து, அந்தத் தரிப்பை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார். இப்பாட்டில் முன்னடிகட்கு இரண்டுவகையான நிர்வாஹம் :- இவ்வுயிர்விட்டு நீங்குங்காலத்தில் யமபடர்கள் வந்து கிட்டிப் பாசத்தை வீசினால் அப்போது உண்டாகும் தயரம் பொறுக்கவொண்ணாததாயிருக்கும்; அந்தத்துயரம் நமக்கு நேரவொண்ணாதபடி எம்பெருமான் தன் காட்சியைத் தந்தருளின படியாலே தரிப்புப்பெறலாயிற்று- என்பது ஒரு நிர்வாஹம். மற்றொரு நிர்வாஹமாவது – இங்கு யமதூதர்களால் நேரும் நலிவைச்சொன்னது. அந்தத் துயரத்தோடு ஒத்ததான பகவத் விச்லேஷ வ்யஸநத்தைச் சொன்னவாறு; அது தொலையும்படி எம்பெருமானை ஸேவிக்கப்பெற்றே னென்கிறார் என்பதாம்.
ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின் :- “அத்தோடு ஸஜாதீயமான அல்லல் என்று எம்பார் அருளிச்செய்வது. (அதாவது) அவ்வோபாதி க்லேசம் போருமாயிற்று பகவத் விச்லேஷத்தால் வருமது இவர்க்கு. அன்றிக்கே, பகவத் அலாபமேயானபின்பு யமசந்யதையும் வந்ததே யன்றோவென்று அந்த யமவச்யதை போம்படியாக என்று ஆண்டான் நிர்வஹிக்கும்படி.”
அலைப்பு ஊண் -துக்காநுபவம். “அவ்வல்லவெல்லாம்” என்றவிடத்து எல்லாமென்பதானால் விவக்ஷிதத்தை ஆறாயிரப்படியில் பிள்ளான் காட்டியருளுகிறார்- “அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு வைகல்யம் வருகிறது என்றுள்ள மஹாபயமும்” என்று, * கிம் து த்வதக்ரே சரணாகதாநாம் பராபவோ நாத ந தேநுரூப:* என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தி இங்கு நினைக்கத்தகும்.
கலைப்பல் ஞானத்து – பல கலைகளாலும் அறியப்படுபவன் என்றபடி. ஈற்றடியை, “என்நெஞ்சம் நிலைபெற்று உயிர் நீடுபெற்றது” என்று அந்வயித்துக் கொள்க. பெற்று என்றது எச்சத்திரிபு; நிலைபெற என்றபடி.
English Translation
The pall of affliction so strong over me, as if the god of death had come throwing his snare, is over now, for I have my Krishna in my heart, He is the Lord of knowledge and eternal life.
