(3103)

(3103)

சிறப்பில்வீடு சுவர்க்கம் நரகம்,

இறப்பிலெய்துக வெய்தற்க, யானும்

பிறப்பில் பல்பிறவிப் பெருமானை,

மறப்பொன்றின்றி யென்றும் மகிழ்வேனே.

 

பதவுரை

இறப்பில்

மரணமான பிறகு

சிறப்பில் வீடு

சிறப்புடன் கூடிய மோக்ஷத்தையோ

சுவர்க்கம்

ஸ்வர்க்கத்தையோ

நரகம்

நரகத்தையோ

எய்துக

அடைவேனாக

எய்தற்க

அடையாதொழிவேனாக

பிறப்பு இல்

(நம்மைப்போலே கருமமடியாகப் பிறவாதவனும்)

பல் பிறவி

அநுக்ரஹ மடியாகப்) பல பிறவி பிறக்கின்றவனுமான ஸ்வாமியை

மறப்பு ஒன்று இன்றி

சிறிதும் மறவாமல்

என்றும்

எக்காலத்திலும் (சிந்தித்து)

யானும் மகிழ்வேன்

(நீசனான) நானும் களிப்புறுவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேஹமே ஆத்மாவாக இருக்கட்டும் அன்றி தேஹத்திற்காட்டில் வேறுபட்டிருப்பானொருவன் ஆத்மாவாக இருக்கட்டும் ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; பின்னை எதில் நிர்ப்பந்த மென்னில் தேவரீர் கரமங்காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்து வைத்து ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிராநின்றீரே; அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாகவேணும் ஈதொன்றிலேயே எனக்கு நிர்ப்பந்தம் என்கிறார்.

சிறப்பில் வீடு- ‘சிறப்பு இல்லாத வீடு’ என்று பொருளன்று; “ஆன்ந்தமாகிற நன்மையிலேயான மோக்ஷம்” என்பது பன்னீராயிரம். எய்தற்க-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று.

‘மகிழ்வேனே’ என்றது அநுபவிப்பேனென்றபடி; “மகிழ்ச்சி யென்றும் அநுபவமென்றும் பர்யாயம்” என்பர் நம்பிள்ளை.

 

English Translation

Whether or not I find liberation, whether I go to heaven or to hell on dying, I will joyously remember my birthless.  Lord who came in his many forms on Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top