(3032)
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,
ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,
அத்தா, நீ செய்தன அடியேனறியேனே.
பதவுரை
|
ஒத்தார்மிக்காரை |
– |
ஸமான மானவர்களையும் மேற்பட்டவர்களையும் |
|
இலை ஆய |
– |
உடையனல்லாத |
|
மா மாயா |
– |
பெரிய ஆச்சரீரய குணங்களை யுடைவனே! |
|
எப்பொருட்கும் |
– |
எல்லாப்பொருள்களுக்கும் |
|
ஒத்தாய் |
– |
ஒப்பாக அவதாரித்தவனே! |
|
(எப்பொருட்கட்கும்) உயிர்ஆய் |
– |
எல்லார்க்கும் பிராணபூதனாய் |
|
என்னைப் பெற்ற |
– |
என்னையுண்டாக்கின |
|
அ தாய் ஆய் |
– |
அந்தத் தாயாகியும் |
|
தந்தை ஆய் |
– |
பிதாவாகியும் |
|
அறியாதன அறிவத்த அத்தா |
– |
ஆசார்யனாகியும் உபகார கனானவனே! |
|
நீ செய்தன |
– |
நீ செய்த உபகாரங்களை |
|
அடியேன் அறியேன் |
– |
அடியேன் அளவிட்டறியகில்லேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் நெஞ்சைக் கொண்டாடினார் சிறிது ஆராய்ந்து பார்த்தவாறே அந்த நெஞ்சை இசைவித்ததும் ஸர்வேச்வரனே யாதலால் அந்த எம்பெருமானையன்றோ கொண்டாடவேணுமென்று அது செய்கிறாரிப்பாட்டில். எம்பெருமானுடைய காலக்ஷேப கோஷ்டியிலே இப்பாசுரம் வந்தவளவிலே ‘இவ்வாத்மாவுக்கு முதல் குரு யார்? என்று விசாரமுண்டாக ‘ஆசார்யன்’ என்று சிலர் சொன்னார்கள். மற்றுஞ்சிலர் ‘ஆசார்யனுடைய ஸ்ரீபாதத்திலே கொண்டு சேர்த்த ஸ்ரீவைஷ்ணவன் முதல் குரு’ என்கிறார்கள். முடிவாக எம்பார்அருளிச் செய்ததாவது-‘இசைவித்தென்னையுன் தாளிணைக்கிழ் இருத்துமம்மானே என்றருளிச் செய்கையாலே அகவாயிலே இருந்து இசைவித்த ஸர்வேச்வரனே முதல் குரு ஆசார்யன் அழைத்தாலும் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் அழைத்தாலும் இவன் மாட்டேனென்று சொல்லிவிட்டால் செய்யலாவதில்லை அப்படிச் சொல்லாமல் இசைவித்தது ஸர்வேச்வரனுடைய க்ருத்யமிறே என்பது திருவுள்ளம்.
எம்பெருமானுக்குத் தன்னோடொத்தவர்களுமில்லை, மேற்பட்டாருமில்லை-என்பது முதலடி. அப்படி யிருந்துவைத்தும் இதர ஸஜாதீயனாய் வந்து அவதாரித்தபடியால் எம்பொருட்கும் ஒத்தாய் என்கிறார். ப்ரஹ்மருத்ரர்களிடையே விஷ்ணுவாய்த் தோன்றினது இந்திரனுக்குத் தம்பியாய்ப் பிறந்தது, ராமகிருஷ்ணாத்யவதாரங்கள் பண்ணினது, திர்யக்ஜாதிகளோடொக்க மீனுமாமையு மேனமுமானது ஆக இவற்றை யெல்லாங்கொண்டு “எப்பொருட்கு மொத்தாய்” எனப்பட்டது.
‘எப்பொருட்கும்’ என்றது நடுநிலை தீபகமாய் முன்னும்பின்னும் அந்வயிக்கும் ‘எப்பொருட்கும் உயிராய்’ என்க. நாம் நமக்குப் பார்க்கும் ஹிதத்தையும் அவனே பார்க்குமவன் என்பதுபற்றி உயிராய் என்றது.
மாத்ருதேவோ பவ இத்யாதி உபநிஷத்து ஓதிய கட்டளையிலே மாதாவும் பிதாவும் ஆசார்யனுமெல்லாம் அவனே யென்கிறது மூன்றாமடி. எம்பெருமானைத் தாயும் தந்தையுமாகச் சொல்லுகிற வாசகங்கள் பெரும்பாலும எங்குமுண்டானாலும் “அறியாதனவறிவித்த அத்தா” என்று ஆசார்யத்வஞ் சொல்லுகிறது இப்பாசுரத்திற்கு விசேஷம். எம்பெருமானே! நீ செய்தவுபகாரம் ஒன்றிரண்டாகில் நானறியலாம் அவை அளவற்றவாதலால் நீயே அறிந்தாலறியுமித்தனை, என்னாலறியப் போகாது என்றாராயிற்று.
English Translation
O Great wonder-Lord without a peer or superior! Close to all things and all beings, you are my life, you are my mother, my father, my friend, teaching me all that I do not know. I will never know how much you have done for me.
