(2997)

(2997)

உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,

இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,

இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,

நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபெருமே.

 

பதவுரை

உச்சி உள்ளே நிற்கும்

(கீழ்ப்பாட்டிற் கூறியபடி) என் தலைமீதிருப்பவனும்

தேவதேவற்கு

தேவாதிதேவனும்

கண்ணபிரார்க்கு

கண்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானுக்கு

இச்சை உள் செல்ல உணர்த்தி

(தன் பக்கலிலே அவன் பண்ணின) ஆதரத்தைத் தாம் அறிந்தபடியைத் திருவுள்ளத்திலே பட அறிவித்து

வண் குருகூர் சடகோபன் சொன்ன இ ஆயிரத்துள்

சடகோபன் சொன்ன இத்திவ்யப்ரபந்தத்தினுள்

இவையும் ஓர் பத்து

இந்த அத்விதீயமான பத்துப்பாசுரங்களையும்

என் பிராற்கு

எம்பெருமானுக்கு

விண்ணப்பம் செய்ய

(ஒருகால்) விண்ணபஞ் செய்யுமளவில்

நீள் கழல்

(உலகமளக்க) நீண்ட (அவனது) திருவடிகளானவை

நிச்சலும்

எப்போதும்

சென்னி

தலையில்

பொரும்

வந்து சேரும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்வார் தலையிலே அப்பெருமானது திருவடிகள் நாடோறும் வந்து சேருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். கீழே தம்முடைய ஒவ்வொரு அவயவத்திலும் முறையே வந்து சேர்ந்து முடிவாக முடிமீது வந்து சேர்ந்த பெருமானுக்கு இனி எங்கும் போக்கிடமில்லையென்பது தோன்ற “உச்சியுள்ளே நிற்கும்” என்கிறார். அமரர் சென்னிப்பூவான எம்பெருமான் என் சென்னிக்கு அப்பால் போக்கிடமில்லையென்று துணிந்து இங்கே படுகாடுகிடக்கின்றானென்கை. என்னுச்சியுள்ளே நிற்கையாலே தான் தேவதேவனாயினானென்பதும் ஆழ்வார்க்கு விவக்ஷிதமென்ப; தேவதேவனாயிருக்கின்றதான் என்னுச்சியுள்ளே நிற்பதை ஒருபேறாகக் கருதுகின்றானே! இது என்ன சீலம் என வியந்தவாறுமாம்.

இத்திருவாய்மொழியில் ஒவ்வொரு பாசுரத்தாலும் எம்பெருமான் தமது ஒவ்வொரு அவயவத்திலே வந்து சேர்ந்தவனனாகப் பேசியவிது. எம்பெருமானுக்குத் தம்மிடத்தில் அவ்வளவு ஆவல் இருக்கின்றமையை யறிந்து கூறியபடி என்பதையுணர்த்துகின்றார் இச்சையுட் செல்லவுணர்த்தி என்பதனால்.

“இவையுமோர்பத்து எம்பிராற்கு விண்ணப்பஞ்செய்ய, நீள்கழல் நிச்சலும்  சென்னிபொரும்” என்று அந்வயிப்பது. இது கற்பார், தமக்குப் பாங்கான ஸமயத்திலே ஒருகால் விண்ணப்பஞ்செய்யப்பெறில், ஆசாலலேசமுடையாரிருந்தவிடத்திலே செல்லவளருந் திருவடிகள் எப்போதும் அவர்களது சென்னிக்கு அணியாமென்றவாறு.

ஆழ்வார்க்குக் கிடைத்த பேறே அவரடியார்க்கும் பேறாகு மென்க.

 

English Translation

This decad of the thousand songs by Kurugur Satakopan addressing Krishna, Lord of gods, with love will abidingly secure his holy lotus feet to those who sing it to the Lord, with feeling.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top