(2990)

(2990)

உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்

மடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,

உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்,

கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே.

 

பதவுரை

உடன் அமர் காதல்

கூடவே அமர்ந்திருக்கைக்கு விருப்பமுள்ள

மகளிர்

பிராட்டிமார் (யாவரென்னில்)

திருமகள்

ஸ்ரீமஹாலக்ஷ்மி

மண் மகள்

பூமிப்பிராட்டி

ஆயர்ம மகள்

இடைக்குலத்துப்பெண்ணாகிய நப்பின்னைப்பிராட்டி

என்ற  இவர் மூவர்

என்று சொல்லப்பட்ட இம் மூவராவர்;

ஆளும் உலகமும் மூன்றே

தன்னலாளப்படுகின்ற உலகங்களும் மூன்றேயாயிருக்கும்; ஆக இங்ஙனம் வாய்த்தவனும்)

அவை

அவ்வுலகங்களை

உடன்

விடாமலே

ஒக்க விழுங்க

ஏககாலத்திலே உண்டு

ஆல் இலை

ஆலிலையில்

சேர்ந்தவன்

கண்வளர்ந்தவனும்

எம்மான்

எனக்கு ஸ்வாமியும்

கடல் மலி மாயம் பெருமான்

கடலிற்காட்டிலும் மிகப் பெரிய மாயச்செயல்களால் பெருமைபெற்றவனுமான

கண்ணன்

கண்ணபிரான்

என் ஒக்கலையான்

என் இடுப்பிலே வந்தமர்ந்தான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒன்றாலொன்று குறைவில்லாதவனாய் ஸர்வரக்ஷகனான எம்பெருமான் யசோதைப் பிராட்டியின் இடுப்பிலிருக்குமாபோலே என்னிடுப்பிலே வந்திருத்தல் தனக்குப் பெறாப்பேறு என நினைத்திராநின்றனென்கிறார். எப்போதும் கூடியேயிருந்தாலொழியத் தரிக்கமாட்டாத பெரிய பிராட்டியாரையும் பூமிப்பிராட்டியாரையும் நப்பின்னைப்பிராட்டியையும் தனக்கு திவ்ய மஹிஷிகளாகவுடையனாய், பூமி முதலிய ஸகல லோகங்களையும் தனக்கு லீலோபகரணமாகவுடையனாய்-, ஆபத்து நேருங்காலங்களிலே அவ்வுலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கி ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்துயின்றருள்பவனாய், கடலிற் காட்டிலும் மிகப்பெரியன என்னலாம்படியான ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையனான எம்பெருமான் என்னிடுப்பிலே வந்து சேர்ந்தருளினான்.

உலகமும் மூன்றே என்றதில் அழியா வுலகமாகிய பரமபதத்தையுஞ் சேர்த்துப் பொருள்கொள்ளும் பக்ஷத்தில், மேலே “உடனவையொக்கவிழுங்கி” என்றதில் அர்த்தஸ்பாவத்தாலே பரமபதம் மாத்திரம் கழியுண்ணக்கடவது. ப்ரமபதத்தைச் சேராமலே பாதாளவுலகம் நிலவுலகம் சுர்க்கவுலகம் என மூவுலகங்களென்னவுமாம்.

கடல் மலி- திருப்பாற்கடலில் சயனித்தருள்கிற என்றுமாம்.

 

English Translation

Three queens Bhu, Sri and Nila love to be seated with him.  The worlds that he rules are also three. Lord more wondrous than the ocean, he swallowed them all and slept as a child floating on a fig leaf. He has risen to my lap now.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top