(2932)

(2932)

அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய் நீயும்நின்

அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி

வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்

வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?

 

பதவுரை

அம் சிறைய

அழகிய சிறகுகளையுடைய

மடம்

இளமைதங்கிய (அல்லது, விதேயமான)

நாராயர்

நாரைப் பறவையே!

அளியத்தாய்

தயை பண்ணுதற்கு உரியாய்!

நீயும்

நீயும்

நின்

உன்னுடைய

அம்  சிறைய சேவலும் ஆய்

அழகிய சிறகுகளையுடைய ஆணுமாய் (இருவருங்கூடி)

அவன்

அந்த எம்பெருமான்

வன் சிறையில் வைக்கில்

கடினமான சிறையிலே வைத்திட்டால்

ஆஆ என்று எனக்கு அருளி

ஐயோவென்று என் விஷயத்தில் கருணை கூர்ந்து

வெம்சிறை புள் உயர்ந்தார்க்கு

விரோதி பயங்கரமான சிறகுகளையுடைய பெரிய திருவடியைக் கொடியாக வெடுத்த பெருமானுக்கு

என் விடு தூது ஆய்

என்னால் விடப்பட்ட தூதாய்

சென்றக்கால்

போனால்,

வைப்புண்டால்

அதை நீ அநுபவித்திருப்பாயானால்

என் செய்யும்

என்ன கெடுதலுண்டாகும்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரிவாற்றாமையோடு கூடியிருக்கின்ற பராங்குசநாயகி “பிரிந்தாரிரங்குவது நெய்தல் நிலத்திலே” என்ற தமிழர்களது கொள்கையின்படி இப்போது நெய்தல் நிலத்திலே யிருக்கின்றாளென்று கொள்ள வேணும். (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என நிலத்தை நால்வகையாகப் பிரித்தனர் தமிழர். காடும் காடு சார்ந்த இடமும் முல்லையாம்; மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியாம்; நாடும் நாடு சார்ந்த இடமும் மருதமாம்; கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தலாம்; இவை தவிர, பாலை நிலமென்று தனியே நிலமுண்டென்பது சிலரது கொள்கை; அது, நீரும் நிழலுமில்லாத கொடுநிலம். கீழ்ச்சொன்ன நால்வகை நிலங்களும் தம்தம் தன்மை கெட்டவிடத்தே பாலையாமென்கிற கொள்கை உணரத்தக்கது) நீர் நிலத்தருகேயிராநின்ற பராங்குநாயகி, தன் ஸமீபத்திலிருப்பதொரு நாரையைப் பார்த்து ‘நாராய்! நீ என் நிலைமையைக் களக்கொடியொன்றுடையானுக்கு அறிவித்து என்னையும் அவனையுஞ் சேர்க்க வேணும்’ என்று இரக்கின்றாள். எம்பெருமானைப் பிரார்த்திக்கும்போது புருஷகார பூதையான பிராட்டியை முன்னிட்டே பிரார்த்திக்கும் நம் இயற்கையினாலே இங்கும் பேடையை முன்னிட்டுச் சேவலைப்பற்றுகின்றாளென்ப.

அஞ்சிறைய மடநாராய்! = குழந்தை தாயினுடைய எல்லா அவயவ்களுங்கிடக்க முலையிலே வாய்வைப்பதுபோல, இங்கு நாரையினுடைய மற்ற அவயங்களை விட்டு சிறிகிலே கண் வைப்பது- விரைந்து செல்லுதற்கு அதுவே ஸாதனமென்பதுபற்றி. நாரையே! நீ அழகிய சிறகுகள் படைத்திருப்பது எனக்காக விரைந்து தூது செல்லுவதற்கன்றோ என்றவாறு. சொன்ன சொல் மறுக்காமல் உடனே புறப்பட ஸித்தமாயிருப்பதுபோலக் கண்டதனால் ‘மட’ என்று விசேஷிக்கப்பட்டது. ஏவிக் காரியங்கொள்ளலாம்படி பவ்யமாயிருக்கின்ற நாரையே! என்றபடி. நாரை என்பதன் ஈறு திரிந்தவிலிநாராய் என்பது; நங்காய், காளாய் என்பனபோல.

அளியத்தாய் = என் மீது கணை புரிவதற்கு உரியாய் என்றபடி. அவன் உபேக்ஷித்துவிட்டுப் போயிருக்கும் ஸமயத்திலே என் வருத்தங்களை முறையிட்டுக்கொள்ளலாம்படி வந்து முகங்காட்டின உன் கருணையே கருணை என்று கொண்டாடுகின்றமை தோற்றும். பம்பா ஸரஸ்ஸின் கரையிலே அனுமன் வந்து காட்சிதந்தபோது இராமபிரானுக்கு உண்டான மகிழ்ச்சி இங்கு ஒப்பு நோக்கத்தகும்.

நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் = பெடையும் ஆணும் விட்டுப்பிரியாமல் தூதுபோகவேணுமென்கிறது. “ஆசாரியன் பக்கலிற்போலவே ஆசாரியனது தேவிகளின் பக்கலிலும் பக்திபூண்டிருத்தல் வேண்டும்” என்கிற சாஸ்த்ரார்த்தம் இங்கு ஸூசிதமாகலாம்.

ஆ! ஆ! என்று எனக்கருளி = ஐயோ ஐயோ! என்னும் பொருளதான ஹாஹா என்கிற வடசொல் ஆவா வெனத்திரியும். அவனோடே கலந்து பிரிந்து அவனை மீண்டுங் கண்ணாலே காண்பதெப்போதொவென்று விடாய்த்துக் கிடக்கிற என் விஷயத்தில் கருணைகூர்ந்து, விரஹம் தின்ற என் வடிவைக் கண்டு ‘இப்படியும் ஒரு ஆபத்து விளைவதுண்டோ’ என்று இரங்கவேணுமென்கிறது.

நாங்கள் இரங்கிச் செய்ய வேண்டிய காரியம் என்னவென்று நாரைகேட்க, தூது சொல்ல வேணுமென்று ஆழ்வார் சொல்ல, யாரிடத்தில் தூதுசெல்ல வேணுமென்று கேட்க, எம்பெருமானிடத்தில் என்று சொல்ல, ‘உம்மையே உயேக்ஷித்திருக்கின்ற அவர் எங்களுடைய வார்த்தைக்கோ இரங்கப் போகிறார்? என்று சொல்ல, “அப்படி நினைக்க வேண்டா; அடியார்களை நோக்குவதற்கென்றே அவர் கொடிகட்டிக் கொண்டு இருக்கின்றாராதலால் சிறிது ஞாபகப் படுத்தவே அரை குலையத் தலைகுலைய ஓடிவருர்” என்று விடையளிப்பதான கருதப்பட வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என்கிறார். கூடியிருந்த காலத்தில் திடீரென்று பிரித்துக்கொண்டு போனான் கருடன் என்றிட்டு அவன் மீது மாச்சரியம் தோற்ற வெஞ்சிறைப்புள் என்றது.

என்விடுதூதாய்ச் சென்றக்கால் = எம்பெருமான் நாயகி பக்கலில் தூதுவிடுவது ஸ்ரீராமாயணாதிகளிலே கண்டோம்; நாயகன் விடுகிற தூதைக்காட்டிலும் நாயகி விடுகிற தூதுக்கு ஏற்றமுண்டு. எங்ஙனே யென்னில், இராமபிரான் “முன்னோர் தூதுவானரத்தின் வாயில் மொழிந்து” என்கிறபடியே மாருதியை இலங்கைக்குத் தூதுவிட்டான்; அங்கே அக் குரங்கரசனுக்குச் சிறை கட்டுதல் சிங்கவிளக்கெரித்தல் முதலிய பரிபவங்கள் நேர்ந்தன; அந்த மாருதி தானே பிராட்டியின் தூதாக ஸ்ரீராமனிடம் மீண்டு வந்தபோது “ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத: மயர் காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந:” என்கிறபடியே திருமார்போடே அணைக்கப்பெற்றான். ஆதலால் அவன் விடுதூதாய்ச் செல்வதன்றியே என்விடு தூதாய்ச் சொல்வது உங்களுடைய பாக்கியமேயாகும் என்ற குறிப்பு.

வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ? = இங்கே சிறை வைப்பதாகச் சொல்வது- எம்பெருமான் முகங்கொடாமல் உதாஸீநனாயிருக்கையையென்க. இங்கு நின்றும் தூது செல்கின்ற பறவைகளைப் பிடித்து அவன் சிறைவைப்பதென்பது ஸம்பாவிதமன்றே; முகங்கொடாமல் அந்யபரனாயிருக்குந் தன்மையே சிறைவைப்பதாகச் சொல்லப்பட்டது. இங்கே நம்பிள்ளை யீடு:- “இவள்பாடு நின்றுஞ் சென்றவற்றைச் சிறையிட்டு வைக்கிறானன்றே; இவற்றுக்கு முகங்கொடாதே அந்யபரனாகையிறே சிறையிட்டு வைக்கையாவது: ராஜபுத்ரர்களுக்கு ப்ராப்தகாலங்களிலே வெள்ளையிலாதபோது மாந்துவர்களிறே.

வைப்புண்டால் என் செய்யுமோ?  அப்படி அவன் உபேக்ஷித்துவிட்டாலும் பாதகமில்லையென்றபடி “செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலு மொருநான்று, மெய்ம்மைசொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே” என்றும் “பாவிநீயென்று ஒன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே” என்றும் எம்பெருமானுடைய அநுக்ரஹத்தோடு நித்யஹத்தோடு வாசியற இரண்டும். போக்யமேயென்று கொள்ளுகிற நிலைமையும் ஒன்று உண்டாதலால் இங்ஙனே சொல்லிற்றென்க. அவனுடைய அநுக்ரஹத்தையே எதிர்நோக்குகின்ற இவர்கள் நிக்ரஹத்தையும்போக்யமாகக் கொள்ளும்படி எங்ஙனே? என்னில்; நெஞ்சு முரிந்து சொல்லுகிற வார்த்தையிது; ‘எம்பெருமானுடையதாகக் கிடைப்பது ஏதாகிலுமாம்’ என்ற கருத்து சில ஸமங்களில் தோன்றிவிடும்.

இப்பாட்டில் நாரையை விளித்துக் கூறினதற்கு ஸ்வாபதேசம் ஆசார்யஹ்ருதயத்தில் கூறப்படுகின்றது;-

“ஆசறுதூவியென்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியோடே திரையுகளும் வ்யஸநவ்யதையற்றுத் தாய் வாயிலுண்ணும் பிள்ளைக்கு இரைதேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணி, கொடுத்தவைகொண்டு நல்ல பதத்தையும் வேண்டேனென்னும் தனிப் பெரும்பித்தர் நம்முதலிகள் போல்வாரை நாரை கொக்கு; குருகென்னும்” என்று.

 

English Translation

O Frail crane, compassionate, with beautiful wings and a handsome matel would the two of you not pity my plight and take a message from me, to my Lord who rides the fierce Garuda bird? why, were he to cage you both, indeed, would that hurt you?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top