(2902)

(2902)

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்

தாமவரிவருவர், அதுவிது வுதுவெது

வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை

ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

 

பதவுரை

நாம்

நாம் முதலான தன்மைப் பொருள்களும்

அவன் இவன் உவன்

அவன் இவன் உவன் என்கிற ஆண்பால்  சுட்டுப்பொருள்களும்

அவள் இவள் உவள்

அவள் இவள் உவள் என்னும் பெண்பால் சுட்டுப் பொருள்களும்

எவள்

எவள் என்கிற பெண்பால் வினாப்பொருளும்

தாம்

தாம் என்னும் பன்மைப் பொதுப்பொருளும்

அவர் இவர் உவர்

அவர் இவர் உவர் என்னும் பலர்பால் சுட்டுப்பொருள்களும்

அது இது உது

அது இது உது என்னும் ஒன்றன்பால் சுட்டுப் பொருள்களும்

எது

எது என்னும் ஒன்றன்பால் வினாப்பொருளும்

வீம் அவை

நசிக்குந்தன்மையுள்ள பொருள்களும்

இவை உவை அவை

இவை உவை அவை என்னும் பலவின்பால் சுட்டுப் பொருள்களும்

நலம் அவை

நல்ல வஸ்துக்களும்

தீங்கு அவை

கெட்ட வஸ்துக்களும்

ஆம் அவை

எதிர்காலப் பொருள்களும்

ஆய அவை

இறந்தகாலப் பொருள்களும்

ஆய் நின்ற

ஆகிநின்ற எல்லாப் பொருள்களும்

அவரே

அந்த ஊர்வேச்வரனேயாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டுமுதல் மேற்பாட்டுக்களெல்லாம் கீழ்ப்பாட்டிற் சொன்ன லீலாவிபூதிச் செல்வத்தைப் பள்ளிப்பன்னி யுரைக்கின்றன. பரம போக்யமான நலமந்தமில்லாதோர் நாடாகிய நித்யவிபூதியை (பரமபதத்தை) விட்டு இருள் தருமா ஞானமாகிய இந்நிலத்தை விசேஷமாக வருணிப்பதேன்! என்னில்; அந்தத் திருநாட்டிலுள்ளவர்கள் அஜ்ஞாநம் அந்யதாஜ்ஞாநம் விபரீதஜ்ஞாநம் அந்யசேஷத்வம் உபாயந்தரபரதவம் உபேயாந்தரபரத்வம் முதலிய குற்றங்குறைகளில் ஒன்றுமின்றியே எம்பெருமான் திருவுள்ளமுகக்குமாறு இருப்பவர்களாகையால் அந்த நாடு திருந்துவதற்காகச் சொல்லவேண்டிய பாசுரம் என்ன இருக்கிறது? ஸர்வாத்மா பரதந்திரமாயிருக்கிற அந்தத் திருநாட்டைப் பற்றிப்பேச வேண்டியதொன்றில்லை. இந்த நாடு அதற்கு எதிர்த்தட்டாயிருக்கையாலே இதைப் பற்றியே பன்னியுரைக்க ப்ரஸக்தியுள்ளது. ஆகவே மேற்கரங்களாலே லீலா விபூதிச் செல்வத்தைப் பரக்க அருளிச் செய்வது பொருத்துமென்க.

எம்பெருமானார் கத்யத்தில் *ஸ்வாதீ தரிவிதசேததாசேதந ஸ்வரூப ஸ்திதிப்ரே வ்ருத்தி பேதம் *என்று அருளிச்செய்வது- இப்பாட்டு முதல்முறையேயுள்ள மூன்று பாசுரங்களிலும் சொல்லுகிற பொருளையே ஸங்க்ரஹித்தபடியாம் ஸகல சேதநாசேதநங்களின் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீதமாயிருக்குமென்பது இப்பாட்டிற் சொல்லுகிறது; அப்படியே அவற்றின் ஸ்திதியும் (ரக்ஷணமும்) அவனதீநமாயிருக்கு மென்பது மேற்பாட்டிற் சொல்லுகிறது. அவற்றின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனதீதங்களாயிருக்குமென்பது அதற்கு மேற்பாட்டில் சொல்லுகிறது.

இந்நாட்டிலுள்ள ஸகல பதார்த்தங்களிலுடையவும் ஸ்வரூபம் எம்பெருமானுக்கு அதீநமென்னுமிடம் இப்பாட்டிற் சொல்லுகிறது. இவற்றின் ஸ்வரூபம் அவனதீதமாயிருக்கையாவது என்னென்னில், ஸ்ருஷ்டிகாலத்திலே எம்பெருமான்தானே இவற்றையுண்டாக்கி ஜீவத்வாரா உட்புகுந்து வஸ்துவாகவும் ஒரு பெயருடையதாகவுமாக்கியும், பிறகு பிரளயகாலத்திலே இவற்றையெல்லாம் தன் பக்கலிலே ஸூக்ஷ்ம ரூபமாகக் கிடக்கும் ஏறிட்டுக்கொண்டு தரித்தும் பொருகையாகிற இதுதான் இவற்றின் ஸ்வரூபம் அவநதீநமாயிருத்தலாம்.

உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனி யெடுத்துக்கொண்டு இதன் ஸ்வரூபம் அவனதீதம். இதன் ஸ்வரூபம் அவனதீதம். இதன் ஸ்வரூபம் அனைதீநம் என்றிப்படி சொல்லுவதென்றால் இஃது ஒருநாளும் ஓயாத கதையாகும். இங்ஙன்றியே, ஸகல பதார்த்தங்களும் அவனதீதம் என்று ஒரே வார்த்தையாகச் சொல்லி முடித்துவிடலாமே யென்றால் இதில் ஸ்வாரஸ்யமில்லை கேட்போர்க்கு ரஸிக்காது; ஆழ்வார்க்கும் திருப்திபிறவாது. ஆகவே பெருக்கமும் சுருக்கமுமின்றியே பேசியருளுகிறார்.

நாம் என்று தன்மையாக (உத்தமபுருஷனாக)ச் சொல்லிக்கொள்ளப்படுகிற வ்யக்திகளும், அவன் என்று தூரத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸாமாந்ய புருஷவ்யக்திகளும், இவன் என்று ஸமீபத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸாமாந்திய புருஷவ்யக்திகளும், உவன் என்று- மிக்க தூரத்திலுமல்லாமல் மிக்க ஸமீபத்திலுமல்லாமல் நடுவணுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸாமாந்ய புருஷவ்யுக்திகளும், அவள்  என்று தூரத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸ்த்ரீ வ்யக்திகளும், இவன் என்று ஸமீபத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸ்த்ரீ வ்யக்திகளும், உவள் என்று நடுவணுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸ்தரீவ்யக்திகளும், எவள் என்று வினவப்படுகிற வ்யக்திகளும், அது, இது உது, எது என்னப்படுகிற அஃறிணைப் பொருள்களும் (அதாவது- அசேதநவஸ்துக்களும்). அழியக்கூடிய பொருள்களும், நல்ல பொருள்களும் கெட்ட பொருள்களும், இனி உண்டாகப் போகிற பொருள்களும் கீழ் உண்டாகிக் கழிந்த பொருள்களுமாகிய அனைத்தின் ஸ்வரூபமும் எம்பெருமானுக்கு அதீதம் என்றதாயிற்று.

‘எம்பெருமானுக்கு அதீதம்’ என்று மூலத்தில் இல்லாதிருக்க எவ்விதம் அந்த அர்த்தம் செய்கிறது’ மூலத்தில் அவரே என்றிருப்பதால் ஸகலவஸ்துக்களுக்கும் எம்பெருமானுக்கும் அபேதமேயன்றோ சொல்லப்படுகிறது. ஆகவே அத்வைதாமகச் சொல்லியிருக்க வேறுவகையாகப் பொருள் பணிப்பது; எங்ஙனே! எனில்; கேண்மின்;- மேல் ஏழாம்பாட்டில் “உடன் மிசையுயிரெனக் கருந்தெங்கும் பரந்துளன்’ என்று ஸர்வவஸ்துக்களிலும் எம்பெருமான் அந்தர்யாமியாக இருக்கிறானென்பதை வ்யந்தாமகப் பேசியிருக்கிற படியைக்கொண்டு ஸமத்வயம் காண்க.

இப்பாட்டில் முதலிடியிலுள்ள அவள் இத்யாதிகள் ஜாத்யேகவசனமாகக் கொள்ளத்தக்கன. இரண்டாமடியில் அவர் இத்யாதிகள் பன்மையாக இருக்கும்போது, அவள் இத்யாதியை ஜாத்யேகசவநமாகக் கொள்ளவேண்டிய அவசியமில்லையேயென்னில்; இரண்டாமடியில் அவர் இத்யாதியாகவுள்ள பன்மை வ்யயக்திபஹுத்வத்தைச் சொல்லவந்ததன்று; ‘பூஜாயாம் பஹுவரநம்’ என்பதுண்டாகையால் பூஜ்யத்வத்தை மாத்திரம் காட்ட வந்த பன்மையாகக் கொள்ளத்தக்கது. பூருவர்களின் வியாக்கியானங்களிலும் இங்ஙனமேயுள்ளது. இதைநோக்கி, முதலடியிலுள்ளவை ஸாமாந்ய புருஷ வாசகங்களென்று கொள்ளப்பட்டது. எவள் என்றது பும்லிங்க நிர்த்தேசத்திற்கும் உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கது. இங்ஙனமே, வீமவை என்று அழியக்கூடிய பொருள்களைச் சொன்னது அழியாப்பொருள்களுக்கும் உபலக்ஷணமாகும்.  அழியாப்பொருள்களின் ஸ்வரூபமும் எம்பொருமானுடைய அதீநமோ என்கிற சங்கையை ஆழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் *இச்சாத ஏவ* என்கிற ச்லோகத்தால் தீர்த்தருளினர்.

நலம் தீங்கவை – நன்மை தீமை என்று, பண்மை (தர்மத்தை)ச் சொல்லுகிறதாகவுங்கொள்ளலாம். நல்லபொருள் தீயபொருள் என்று பண்பியை (தர்மியை)ச் சொல்லுகிறதாகவும் கொள்ளலாம். ஜாதியோடும் வ்யாக்தியோடும் வாசியறவும், குணத்தோடும் த்ரவியத்தோடும் வாசியறவும், க்ரியையோடும் க்ரியாவத்தோடும் வாசியறவும் எல்லாவற்றின் ஸ்வரூபமும் எம்பெருமானதீதம் என்றதாயிற்று.

ஆமவை என்று எதிர்காலப் பொருள்களையும் ஆயவை என்று இறந்தகாலப் பொருள்களையும் சொன்னதுபோல நிகழ்காலப் பொருள்களையும் சொல்லவேண்டியிருக்கச்சொல்லாது விட்டதேன்? எனில்; நிகழ்காலமென்பது ஒரு நொடிப்பொழுதேயாகும்; இது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் அடங்கிப் போகக்கடவதாதலால் தனிப்பட்டச் சொல்ல வேண்டிய அவசியமில்லையென்பர்.

ஆக இப்பாட்டால், ஆண், பெண், அலி, சிறந்த பொருள்கள், அழியும் பொருள்கள், விவக்ஷணப் பொருள்கள், அவிலக்ஷணப்பொருள்கள், இறந்த காலப்பொருள்கள், எதிர்காலப் பொருள்கள் என்று சில வகைகளாலே இந்த லீலா விபூதியிலுள்ள ஸகல பதார்த்தங்களையும் நிர்த்தேசித்து, இவற்றின் ஸ்வரூபம் எம்பெருமானந்தீநமென்று அருளிச்செய்தாராயிற்று.

 

English Translation

He stands as the “he” there’ here and in between the ‘she’ there, here in between and wherever the things that are –here, there, in between and wherever –he is their good, bad, indifferent, their past and their future.

 

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top