(2901)
இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.
பதவுரை
|
அது இலன் (என) |
– |
அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும் |
|
இது உடையன் என |
– |
இந்தப் பொருளையுடையவன் என்றும் |
|
நினைவு அரியவன் |
– |
நினைப்பதற்கு அருமைப்பட்டவனாகியும் |
|
நிலன் இடை |
– |
பூமி முதலான (கீழ்) உலகங்களிலும் |
|
விசும்ப |
||
|
இடை |
– |
ஆகாசம் முதலான (மேல்) உலகங்களிலும் (உள்ள) |
|
உருவினன் |
– |
ரூபியான அசேநப் பொருள்களையுடையவனாகியும் |
|
அருவினன் |
– |
ரூபியல்லாத சேதனர்களையுடையவனாகியும் |
|
புலனொடு |
– |
விஷயமாகிற பொருள்களோடு (கலந்து நின்றாலும்) |
|
புலன் அலன் |
– |
(தான்) புலன்களுக்கு விஷயமாகாதவனாகியும் |
|
ஒழிவு இலன் பரந்த |
– |
எபபொழுதும் எங்கம் வியாபித்திருக்கிற |
|
அ நலன் உடை ஒருவனை |
– |
முன் சொன்ன கல்யாண குணங்களையுடைய ஒப்பற்ற எம்பெருமானை நாம் கிட்டப்பெற்றோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கல்யாணகுணமுடைமையையும் நித்யவிபூதியாட்சியையும் திவ்யமங்கள் விக்7ஹ முடைமையையும் முதற்பாட்டிலே அநுஸந்தித்து, அவற்றிக்கு ஆச்ரயமான திவ்யாத்மஸ்வரூபத்தின் வைலக்ஷண்யத்தை இரண்டாம் பாட்டிலே அருளிச்செய்து, அவற்றோடே சேர்த்து ஒரு கோர்வையாக அநுபவிக்கத்தக்கதான லீலா விபூதியுடைமையை இப்பாட்டிலே அருளிச் செய்கிறார்.
பரமபோக்யமான கல்யாணகுணம் முதலிவற்றை ஒரு பெரிய திருநாள் போலே அநுபவியாநின்ற இவர்க்கு அத்யந்த ஹேயமாய் இருள்தருமாஞாலமென்று பெயர்பெற்றதான இந்த லீலாவிபூதியின் ஆட்சியை அனுபவித்தல் ப்ராப்தமாகுமோ? ஞானிகள் அருவருக்கும் படியாயன்றோ இப்பிபூதியிருப்பது; இதனை அநுஸந்திக்க இவர் எங்ஙனேயிழந்தார்? என்று சங்கை பிறக்கக்கூடும்; இவ்விபூதி இருள் தருமாஞாலமாயிருந்தாலும் ஆழ்வார் மயர்வற மதிநலமருளப் பெற்ற வராகையாலே அந்த ஞானவிளக்கத்தினார் இவ்வபூதியின் இழிவை நோக்காது இதெல்லாம் எம்பெருமானுடைய ஆட்சியின்கீழ் அமைந்தது’ என்று கொண்டு ததீயத் வாகாரத்தைவிட்டுப் பார்க்குமவரான பின்பு அவனுடைய ஐச்வரியங்களையெல்லாம் ஒன்று விடாமல் அநுபவிக்கிற அடைவிலே இதனையும் அநுபவிக்கிறார் என்று கொள்க.
இங்கே ஈடு முப்பதாறாயிரப்படி யருளிச்செயல்:- “ராஜாக்களுக்கு நாடெங்கம் செல்லா நிற்கச்செய்தே மஹிஷிகளும் தாங்களுமாகச் சில பூந்தோட்டங்களைக் கடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் லீலாரஸ மநுபவிபக்குமாபோலே ‘திருவிண்ணகர்ச் சேர்ந்தபிராண் பெய்தகாவுகண்டீர் பெருந்தேவுடை மூவுலகு’ என்கிறபடியே ஸர்வேச்வரனும் பெரிய பிராட்டி யாருமாகக் கடாக்ஷித்தபோது உண்டாய் இல்லையாகில் அவர்களுக்கு லீலாரஸ விஷயாமயிருக்கிற லீலாவிபூதியை அனுபவிக்கிறார்” என்று.
இலன் அது, உடையன் இது – என நினைவு அரியவன்- ‘இவனுக்கு இது இல்லை என்றம் நினைக்கமுடியாது; ‘இவனுக்கு அது உண்டு’ என்றும் நினைக்கமுடியாது- ‘இவனுக்கு அது இல்லை’ என்று நினைக்குமிடத்துக் குறைவுபாடு ஏற்படுமாகையாலே அப்படி நினைக்கக் கூடாதாயினும் ‘இவனுக்கு அது உண்டு’ என்று நினைப்பதற்குத் தடை என்ன! என்னில், ‘இராமனுக்கு வியாகரணம் தெரியும்’ என்றால் அவனுக்கு மீமாம்ஸை தெரியாது தர்க்கம் தெரியாது, வியாகரணமொன்றுதான் தெரியும், என்று நினைக்க இடமுண்டாவதுபோல, ஒரு பொருளைச் சுட்டி ‘எம்பெருமான் அதனையுடையன்’ என்றால் ‘அது தவிர மற்ற பொருள்களை அவனுக்கு இல்லை’ என்று தோற்ற இடமுண்டாகிக் குறையாய்த் தலைகட்டுமாதலால் ‘இவனுக்கு அது இல்லை’ என்று சொல்வதோடு ‘இவனுக்கு அது உண்டு’ என்று சொல்வதோடு வாசியற இரண்டும் ஒண்ணாதவையே என்றுணர்க.
ஆனால் எம்பெருமானுடைய ஐச்வரியத்தை எப்படி தான் பேசக்கடவதென்றால் நிலனிடை விசும்பிடை யுருவினனருவினன் என்று பேசவேணுமென்கிறார். வேதபுருஷன் *பதிம்விசய்வஸ்ய* என்று பேசினாப்போலே ஸர்வஸ்வாமி யென்னவேணுமென்க. பூமி முதற்கொண்டு பாதாளம் வரையிலுள்ள கீழுலகங்களிலும், பரமபதந் தவிர பொருள்களும் எத்தனையுண்டோ அவற்றை யெல்லா முடையவன் என்னவேணும். இதில் ‘பரமபதந்தவிர’ என்றதனால் , பரமபதம் எம்பெருமானுடைய ஆட்சிக்கு உட்பட்டதன்றோவென்று சங்கிக்க வேண்டா; லீலாவிபூதிச் செல்வத்தை மாத்திரமே இப்பாட்டில் அருளிசெய்கிறாராகையாலும் நித்ய விபூதிச்செல்வத்தை முதற்பாட்டில் அருளிச்செய்தாராகையாலும்.
உருவினன் அருவினன் – ‘ரூபி’ என்னும் வடசொல் உரு என்றும், ‘அரூபி’ என்னும் வடசொல் அரு என்றும் சிதைந்துகிடக்கிறது.
ஜடப்பொருள்களெல்லாம் ஓரொருவகையான ரூபத்தையுடையனவாகக் காணப்படுதலால் அவை ரூபி யெனப்படும். (ரூபி-ரூபமுடையது.) ஜீவாத்மா உருவமற்றவனாதலால் அரூபி யெனப்படுவான் நிலனிடை விசும்பிடை யுருவினன், நிலனிடை விசும்பிடை யருவினன் என்க. நிலன்- நிலம்; மகரனகரப்போலி.
இப்படி ஸர்வஸ்வாமியான ஸர்வேச்வரன் இந்த லீலாவிபூதியின் ரக்ஷணத்திலே உதாஸீநனாய்க்கொண்டு பரமபதத்திலே போகப்ரவணனாயிருப்பவனல்லன்; இவற்றினுடைய லாபநஷ்டங்களையே தன்னுடைய லாப நஷ்டங்களாகக்கொண்டு, புலப்படும் பதார்த்தங்களெல்லாவற்றிலும் அந்தர்யாமியா யிருப்பவன் என்கிறார் புலனொடு என்று, புலன் என்பது இங்குப் புலன்களாலறியப்படும் பொருள்களுக்காயிற்று. லக்ஷணையென்க. புலப்படுகின்ற ஸகல பதார்த்தங்களோடும் அந்தராத்மாவாயக் கலந்து நின்றானேயாகிலும் என்றபடி. அழுக்கு வஸ்துவோடே உறைகின்ற அரும்பொருளும் அந்த ஸம்பந்தத்தாலே தானும் அழுக்கேறப்பெறுவதுபோல தோஷமே வடிவான பதார்த்ங்களிலே உறைகின்ற எம்பெருமானும் அவற்றின் தோஷங்கள் தன்னிடத்திலே தட்டப்பெற்று ஜடப்பொருள்களைப்போலே பரிணாம சாலியாயும் சேதநரைப்போலே ஸுகதுக்கங்கள் கலசியிருப்பவனாயும் ஆய்விடக்கூடுமோவென்று சங்கைபிறக்கக்கூடுமாதலால் அந்த சங்கையை ஒழித்தருளுகிறார் புலனலன் என்று. புலன்களினுடைய படியையுடையவனல்லன். ஜடப்பொருள் போலே விகாராஸ்பதமல்லன்;: ஒட்டற்று விளங்காநிற்குமவன் என்க.
ஒழிவு இலன் பரந்த- ஒழிவு இல்லதவனாய் வியாபித்த என்கை ஒரு வஸ்துவு மொழியாமல் ஸகல வஸ்துக்களிலும் வியாபித்து என்றாவது ஒருகாலமுமொழியாமலர் ஸர்வகாலங்களிலும் வியாபித்து என்றாவது பொருள் காண்க.
கீழரண்டு பாட்டிலும் சொன்ன குணங்களோடு கூடியிருக்குந்தன்மையை அநுவாதஞ் செய்கிறார். அந்நலனுடையொருவனை என்று. இப்படி பரமவிலக்ஷணனான எம்பெருமானை நாம் கிட்டப்பெற்றோமேயென்ற ஆனந்தம் தோற்ற முடிக்கிறார். நெடுங்காலம் பிறவிக்கடலிலே அழுந்தி எம்பெருமானுடைய கதையின் லாலஸநையையும் அறியாதிருந்த நாம் இப்படி உபயவிபூதியுக்தனாயிருந்துள்ள அவனைப் பூர்ணமாக அநுபவிக்கப்பெற்றோம் என்னும் மகிழ்ச்சி சொல் தொடையிலே விளங்கும்.
அன்றியே, நணுகினம்நாமே! என்று காகுஸ்வரமாகக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!; நணுகுவதற்கு நமக்கு யோக்யதையில்லா திருக்க நணுகினதுபோல் தோற்றுகிறவிக்கிறது ஒருகால் சித்தப்ரமமாக விருக்குமோ? என்பதாகவும் உரைப்பர்.
English Translation
He cannot be thought of as “this” and “not that”. He is the sentient and insentient, in high and in low. He is in the senses, but not of them and endless. Let us seek the good one, he is everywhere.
