(29)
இருங்கை மதகளிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடுபர மன்தன்
நெருங் குபவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுத லீர்வந்து காணீரே.
பதவுரை
| இரு கை மத களிறு |
– |
பெரிய துதிக்கையையுடைய மத்தகஜமான குவலயாபீடத்தை |
| ஈர்க்கின்றவனை |
– |
தன்வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை |
| பருங்கி |
– |
கொன்று |
| பறித்துக்கொண்டு |
– |
(யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு |
| ஓடு |
– |
(கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின |
| பரமன் தன் |
– |
பரமபுருஷனான கண்ணனுடைய |
| நெருங்கு |
– |
செறியக்கோத்த |
| பவளமும் |
– |
பவள வடமும் |
| நேர் நாணும் |
– |
அழகிய அரைநாணும் |
| முத்தும் |
– |
முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த) |
| மருங்கும் இருந்த ஆ |
– |
திருவரையும் இருந்தபடியை |
|
காணீர்! |
||
| வாள் நுதலீர் |
– |
ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்காள்! |
|
வந்து காணீர்!! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – இடையினழகையும் அதிலுள்ள ஆபரணங்களினழகையும் காட்டும் பாசுரம் இது. ஸ்ரீக்ருஷ்ணனைக் கொல்லக் கருதிய கம்ஸன் வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கண்ணனை அழைக்க, அப்பிரானும் பலராமனுடனே புறப்பட்டு வந்து கம்ஸன் அரண்மனையினுட் புகும்போது, இவர்களைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயா பீடமென்னும் மதயானை சீறிவர, ஸ்ரீக்ருஷ்ண பலராமர்கள் அவ்யானையை எதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியைப் பறித்தெடுப்பதுபோல எளிதிற் பிடுங்கியெடுத்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அவற்றால் பாகனையும் அவ்யானையையும் கொன்றனரென்ற வரலாறு முன்னடிகளில் அடங்கியுள்ளது.
அன்றியே, ஊரில் இடைப்பிள்ளைகள் தெருவிலே விளையாடும்போது ஒருவனை யானையாகவைத்து அவனை யொருவன் இழுத்துக் கொண்டு திரிய, அவனைக் கண்ணபிரான்தான் மோதியடித்துத் தானிழுத்துக் கொண்டு ஓடுகின்ற லீலாவிசேஷத்தை முன்னடிகளிற் கூறினதாகவும் உரைப்பர்.
English Translation
Bright forehead Ladies, come here and see the waist-lace of this child, threaded with corals and pearls, as he runs dragging a killed rut-elephant by its trunk.
