(2786)-(2790)

……        ……   ……தான்முனநாள்

மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்,

துன்னு படல்திறந்து புக்கு, – தயிர்வெண்ணெய்            (2786)

 

தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண்

மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றல்

பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,

 

பதவுரை

முனம் நாள்

முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்)

மின் இடை ஆச்சியர் தம் சேரி

மின்போல் நுண்ணியஇடையையுடைய இடைச்சிகளின் சேரியிலே

தன்னு படல் திறந்து

நெருக்கமாகக் கட்டிவைத்த படலைத்திறந்து

களவின்கண் புக்கு

திருட்டுத்தனமாகப் புகுந்து

தயிர் வெண்ணெய்

தயிரையும் வெண்ணெயையும்

தன் வயிறு ஆர தான் விழுங்க

தனது வயிறு நிறையும்படி வாரியமுதுசெய்த வளவில்

கொழு கயல் கண்மன்னு மடவோர்கள்

நல்ல கயல்மீன் போன்ற கண்களையுடைய அவ்வாயர் மாதர்

பற்றி

பிடித்துக்கொண்டு

ஓர் வான் கயிற்றால்

ஒரு குறுங்கயிற்றால்

உரலோடு

உரலோடே பிணைத்து (க்கட்டிவிட)

கட்டுண்ட பெற்றிமையும்

(கட்டையவிழ்த்துக் கொள்ளமாட்டாமல்) கட்டுண்டு கிடந்தன்மை யென்ன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னினைவைத் தலைக்கட்டாவிடில் அவனுடைய ஸமாசாரங்களையெல்லாம் தெருவிலே எடுத்து விடுகிறேனென்று கீழ்ப் பிரதிஜ்ஞை பண்ணினபடியே சில ஸமாசாரங்களை யெடுத்துவிடத் தொடங்குகிறாள் பரகாலநாயகி – “கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப்பெற்றான், பற்றியுரலிடையாப்புமுண்டான் பாவிகாளுங்களுக்கு எச்சுக்கொலோ? நற்றெனபேசி வசவுணாதே“ என்று – எம்பெருமானுடைய சரிதைகளை இழிவாகக் கூறி ஏசுமவர்களை வாய்புடைக்கவேண்டிய இவ்வாழ்வார் தாமே ஏசத்தொடங்குவது ப்ரணயரோஷத்தின் பரம காஷ்டையாகும். “ஏசியே யாயினும் ஈனதுழாய் மாயனையெ பேசியே போக்காய் பிழை“ என்பாருமுண்டே. குணகீர்த்தனங்களில் இதுவும் ஒரு ப்ரகாரமேயாகும். இவ்வாழ்வார்தாமே பெரிய திருமொழியில் பதினோராம்பத்தில் மானமருமென்னோக்கி என்னுந் திருமொழியில், இரண்டு பிராட்டிகளின் தன்மையை எக்காலத்தில் அடைந்து முன்னடிகளால் இகழ்ந்துரைப்பதும் பின்னடிகளால் புகழ்ந்துரைப்பதுமாக அநுபவித்த்தும் அறியத்தக்கது.

(தான்முனநாள் இத்யாதி) இடைச்சிகளின் சேரியில் பிரவேசித்து, படல்மூடியிருந்த மனைகளிலே திருட்டுத்தனமாகப் படலைத் திறந்துகொண்டு புகுந்து தயிரையும் வெண்ணெயையும் வயிறு நிறைய விழிக்கினவளவிலே அவ்வாயர் மாதர்கண்டு பிடித்துக்கொண்டு உரலோடே இணைத்துக் கயிற்றாலே கட்டிப்போட்டு வைக்க ஒன்றுஞ் செய்யமாட்டாமல் அழுது ஏங்கிக் கிடந்தானே, இது என்றைக்கோ நடந்த காரியமென்று நான் விட்டுவிடுவேனோ? இவ்வழிதொழிலை இன்று எல்லாருமறிந்து “கள்ளப்பையலோ இவன்“ என்று அவமதிக்கும்படி செய்து விடுகிறேன் பாருங்கள் – என்கிறாள்.

பெற்றிமையும், தெற்றெனவும் சென்றதுவும் என்கிற இவையெல்லாம் மேலே “மற்றிவை தான் உன்னி யுலவா“ என்றவிடத்தில் அந்வயித்து முடிவுபெறும். இப்படிப்பட்ட இவனுடைய இழிதொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை என்றவாறு.

“தன் வயிறார“ என்றவிடத்து “திருமங்கையாழ்வாரைப் போலே பரார்த்தமாகக் கனவு காண்கிறதன்று“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி காண்க.

வான்கயிறு என்றது எதிர்மறையில் கனையினால் குறுங்கயிறு என்று பொருள்படும்.  கண்ணி நுண் சிறுத்தாம்பினாவிறே கட்டுண்டது.

 

 

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்

துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,

 

முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்..

 

பதவுரை

ஆயர் விழவின் கண்

இடையர்கள் (இந்திரனுக்குச் செய்த) ஆராதனையில்

துன்னு சகடத்தால் புக்க பெரு சோற்றை

பலபல வண்டிகளால் கொண்டுசேர்த்த பெருஞ்சோற்றை

அன்னது ஓர் பூதம் ஆய்

வருணிக்க முடியாத வொருபெரும் பூகவடிவு கொண்டு

முன் இருந்து

கண் முன்னேயிருந்து கொண்டு

முற்ற

துளிகூட மிச்சமாகாதபடி

தான்

தானொருவனாகவே

தூற்றிய

உட்கொண்ட

தெற்றௌவும்

வெட்கக்கேடென்ன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இன்னு சகடத்தால்புக்க – சிலர் தலை மேலே சுமந்துகொண்டு போய்க்கொட்டின சோறன்று பல்லாயிரம் வண்டிகளில் ஏற்றிக் கொண்டுபோய்ப் பெரிய மலைபோலே கொட்டிவைத்த பெருஞ்சோறு, இவற்றையெல்லாம் ஒரு திரை வளைத்துக்கொண்டாவது உண்டானோ? இல்லை, முன்னிருந்து உண்டான அதிலே சிறிது சோறு மிச்சமாமபடி உண்டானோ? இல்லை, முற்றத்துற்றினால், உற்றாருறவினர்க்கும் சிறிது கொடுத்து உண்டானோ? அதுவுமில்லை, முற்றவும் தானே துற்றினான், இப்படி வயிறுதாரித்தனம் விளங்கச் செய்த செயலுக்குச் சிரிது வெட்கமாவது பட்டானோ? அதுவுமல்லை. இப்படிப்பட்ட வெட்கக்கேடான செய்தியைத் தெருவேறச் சொல்லிக்கொண்டுபோய் “வயிறுதாரிப் பையலோ இவன்“ என்று எல்லாரும் அமைதிக்கும்படி செய்துவிடுகிறேன். பாருங்கள் என்கிறாள்.

 

 

மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,

தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,

 

பதவுரை

முனம் நாள்

முன்னொரு காலத்தில்

வாழ்வேந்தர் தூதன் ஆய்

பாண்டவர்களுக்குத் தூதனாய்

தன்னை இகழ்ந்து உரைப்ப

(கண்டாரங்கலும்) இழிவாகச் சொல்லும்படியாக

மன்னர் பெருசவையுள் சென்றதும்

(துரியோதனாதி) அரசர்களுடைய பெரிய சபையிலே சென்றதென்ன

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான், பாண்டவர்களையும் துர்யோதநாதிகளையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதனாதியரிடம் தூது சென்ற வரலாறு ப்ரஸித்தமேயாம் “கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலங் கூறிடுவான், தூதனாய் மன்னவனாய் சொல்லுண்டான்“ என்கிற இவ்விழிதொழிலை நாடறியச் சொல்லி “ஒரு வேலைக்காரப் பையவோ இவன்“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்கிறாள்.

 

மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப,

 

கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,

என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்……..

 

பதவுரை

மங்கையர் தம் கண் களிப்ப

(இடைப்) பெண்களின் கண்களிக்கும்படி

மன்னு பறை கறங்க

(அரையிலே) கட்டிக்கொண்ட பறை ஒலிக்க

கொல்சவிலும் கூத்தன் ஆய்

(பெண்களைக்) கொலை செய்கின்ற கூத்தையாடுபவனாய்

போத்தும்

மேன்மேலும்

குடம் ஆடி

குடங்களை யெடுத்து ஆடி

என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்

“இப்படியும் கூத்தாடுவானொருவனுண்டோ!“ என்னும்படி பெற்ற சீர்கேடென்ன

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் அரையிலே பறையைக் கட்டிக்கொண்டு குடக்கூத்தாடுவது சாதி வழக்கத்தை அநுஸரித்த ஒரு காரியம். அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகம் செய்வதுபோல இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடுவார்கள். கண்ணபிரானும் சாதிமெய்ப்பாட்டுக்காக “குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே“ என்றபடி அடிக்கடி குடக்கூத்தாடுவது வழக்கம். தலையிலே அடுக்குக்குடமிருக்க. இரு தோள்களிலும் இரு குடங்களிருக்க, இருக்கையிலுங் குடங்களை ஏந்தி ஆகாயத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது என்பர். இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திவொன்றென்றும் கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலதனுக் கடைக்குப வைந்துறுப் பாய்ந்து“ என்று மேற்கோளுங் காட்டினர் சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்.

இவன் சில பெண்களைப் பிச்சேற்றுவதற்காகக் கூத்தாடினபடியைப் பலருமறியப்பேசி, “கூத்தாடிப் பையலோ இவன்!“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்றானாயிற்று.

ஈடறவு – சீர்கேடு, ஈடு- பெருமை, அஃது இல்லாமை – அற்பத்தனம் வீடறவும் என்று பிரித்து கூத்தனின்றும் மீளாமை என்று சிலர் சொல்வது எலாது.

 

 

தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,

மன்னன் இராவணன்றன் நல்தங்கை, – வாளெயிற்றுத்  (2787)

 

துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,

பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,

தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,

மன்னிய திண்ணெனவும்………..  ……………  …………….

 

பதவுரை

தென் இலங்கை யாட்டி

தென்னிலங்கைக்கு அரசியும்

அரக்கர் குலம் பாவை

ராக்ஷஸ குலத்தில் தோன்றிய புதுமை போன்றவளும்

மன்ன்ன் இராவணன் தன் நல் தங்கை

பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்

வாள் எயிறு

வாள் போன்றபற்களையுடையளும்

துன்னு சுடு சினத்து

எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான

சூர்ப்பணகா

சூர்பணகை யென்பவள்

புலர்ந்து எழுந்த காமத்தால்

அதிகமாக வுண்டான காம நோயினால்

பொன் நிறம் கொண்டு

வைவர்ணிய மடைந்து

சோர்வு எய்தி

பரவசப்பட்டு (தளர்ந்து)

தன்னை நயந்தானை

தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை

தான் முனிந்து

தான் சீறி

மூக்கு அரிந்து

மூக்கையறுத்து

மன்னிய திண்ணெனவும்

இதையே ஒரு ப்ரதிஷ்டையாகநினைத்துக கொண்டிருப்பதென்ன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “ஆலிறையும்“ என்ற நன்னூல் விதிப்படி சூர்ப்பணகை எனத் திரியவேண்டியிருக்க அங்ஙனத்திரியாது சூர்ப்பணகா என்று ஆலீறாகவே நின்றது – புதியனபுகுதல் என்னலாம். பழையன கழிதமு புதியன புகுதலும்வழுவல காலவகையினானே“ என்றார் நண்ணூலார்.

தன்னை ஆசைப்பட்டு வந்தவனை ஏதோ நல்வார்த்தை சொல்லிப் போகவிடாமல் ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனாய் அங்கபங்கஞ் செய்துவைத்து அனுப்பினவன் காண்மின் என்று தெருவேறச்சொல்லி “ஸ்த்ரிகளை அநியாயம் பண்ணுகிறவனோ இவன்“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் – என்றாளாயிற்று.

பொன்னிறங்கொண்டு – காமநோயுடையர்க்கு உடல் விவர்ணப்படுங்காலத்து அந்த நிறம் பொன்னிறமெனப்படும். அபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பையுடையளாய்“ என்பது வியாக்கியானம். புலர்ந்தெழுந்த காமத்தால் புலர்தல் என்பதற்கு காய்தல் வாடல் விடிதல் என்று பல பொருள்களுண்டு இங்கு விடிதல் என்று பொருளாய் உதயமாகி வளர்ந்த காமத்தினால் என்றதாம். மன்னிய திண்ணெனவும் – “ஸ்த்ரிவதம் பண்ணினால் அநுதாபமுமின்றிக்கே பெரிய ஆண்பிள்ளைத்தனம் செய்ததாக நினைத்திருக்கிற நிலைநின்ற த்ருடதவமும்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

 

……….        …………    ……. வாய்த்த மலைபோலும்,

தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்   (2788)

 

தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும் –மற்றிவைதான்     (2789)

 

உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,

முன்னி முளைத்தெழுந்தோங்கி யொளிபரந்த,

மன்னியம்பூம் பெண்ணை மடல்.                           (2790)

 

பதவுரை

வாய்த்த மலை போலும்

பெரியமலை போன்ற உருவமுடையளும்

தன் நிகர் ஒன்று இல்லாத

(கொடுமையில்) ஒப்பற்றவளுமான

தாடகையை

தாடகை யென்பவளை

மா முனிக்கா

விச்வாமித்ர் முனிவர்க்காக

தென் உலகம் எற்றுவித்த

யமலோக மடைவித்த

திண் திறலும்

மிக்க பராக்ரமமென்ன

மற்று இவை தான்

இப்படியாகவுள்ள மற்றும் பல செய்கைகளும்

உன்னி உலவா

நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்)

உலகு அறிய

அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு

நான்

பரகால நாயகியாகிய நான்

முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னிய பூபெண்ணை மடல் ஊர்வன்

முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக்கொண்டு மடலூரக்கடவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சூர்ப்பணகையை அங்கபங்கஞ் செய்து உயிரோடாவது விட்டிட்டான், இப்படி ஸ்த்ரீஹக்தி பண்ணுவதே இவனுடைய பராக்ரமத்துக்குப் போக்குவீடு, பெண்களை கொலைசெய்து தன்னை  மஹாபலசாலியாக நினைத்துச் செருக்குற்றிருக்குமின்னுடைய இந்த அழகால பராக்ரமத்தை நாடறிச்சொல்லி “இதுவோ இவனுடைய ஸமாசாரம்!“ என்று எல்லாரும் இழவாக நினைக்கும்படி பண்ணிவிடுகிறேன் பாருங்கள் – என்றாளாயிற்று.

திண் திறலும் – ஒரு பெண்பெண்டாட்டியைக் கொலைசெய்து விடுவது ஒரு பராக்ரம்மோ!  என்று ஏசுகின்றவாறு.

மற்றவைதான் உன்னி உலவா – ஸ்ரீராமாயணம், ஸ்ரீபாகவதம், மஹாபாரதம் முதலியவற்றில் இப்படிப்பட்ட இழிதொழில்கள் எவ்வளவோ சொல்லப்பட்டுள்ளன, அவற்றுக்குக் கங்குகரையில்லை அவை என்னால் சொல்லிமுடிக்கப்போகாதவை. முடிந்தவரையில் சிலவற்றையெடுத்துச் சொல்லிக் கொண்டு தெருவேற மடலூர்ந்து செல்வேன் என்று தலைக்கட்டினாளாயிற்று.

பெண்ணை என்று பனைமரத்துக்குப் பெயர், “முன்னிமுளைத் தெழுந்தோங்கி யொளிபரந்த மன்னியபூம் பெண்ணைமடல்“ என்று பனைமடலைச் சிறப்பித்துச் சொன்னது – என் கையிலே சிறந்த ப்ரஹ்மாஸ்க்ர மிருக்கிறபடி பாருங்கள், இனி எனக்கு என்ன குறை? என் காரியம் கைபுகுந்ததேயாம் என்று தான் பரிக்ரஹித்த ஸாதநத்தின் உறைப்பைக் காட்டினபடி.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top