காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
திவ்யப் ப்ரபந்தத்தின் முன்னுரை
[ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர்]
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் முந்துற முன்னம் அவதரித்த பொய்கையார் முதலான ஆழ்வார்கள் செய்தருளின மஹோபகாரங்களைப் பற்றி நாம் நிச்சலும் சிந்தனை செய்யவேண்டும். அவரவர்கள் ஜீவித்திருக்கும் நாளில் தம்மையடிபணிந்தவர்களுக்கு உஜ்ஜீவநோபாயமாக உபதேசங்களைச் செய்வது உபகாரமெனப்படும்; பிற்காலத்தவர்களும் நெடுநாள் வாழும்படி நூல்களை இயற்றி வைப்பது மஹோபகார மெனப்படும். இந்த உலகிலிருள் நீங்க அந்தமிழால் நற்கலைகளாய்ந்துரைத்த ஆழ்வார்களின் மஹோபகாரம் உலகமறிந்ததேயாயினும் அறியாதார் சிலரு மறிந்துகொள்ள இங்குத் தெரிவிக்கிறோம்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னுமிவ்வாழ்வார்கள் மூவரும் முதலாழ்வார்களென வழங்கப்படுவர்கள். இம்மூவரும் நூறு நூறு பாசுரங்கள் பணித்தார்கள். அம்மூன்று திவ்யப்ரபந்தங்களும் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந் திருவந்தாதி, மூன்றாந் திருவந்தாதி எனப் பிரசித்தி பெற்றவை. இவை மூன்றாவதாயிரமான இயற்பாவில் 1,2,3ஆம் பிரபந்தங்களாகப் பரிகணிக்கப் பட்டவை. நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் இவையே முதன் முதலவதரித்த நற்றமிழ் நூல்களாம். உபதேசரத்தினமாலையில்’ *மற்றுள்ள வாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து, நற்றமிழால் நூல் செய்து நாட்டை யுய்த்த – பெற்றிமையோர், என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு, நின்ற துலகத்தே நிகழ்ந்து* என்று மணவாள மாமுனிகளருளிச் செய்த பாசுரம் இங்கே அநுஸந்திக்கத் தக்கது.
மேலே சொன்ன முதலாழ்வார்களுக்கு அடுத்தவரும், பேயாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவருமான திருமழிசையாழ்வார் (96 பாசுரங்கள் கொண்ட) நான்முகன் திருவந்தாதியும், (120 பாசுரங்கள் கொண்ட) திருச்சந்த விருத்தமும் ஆகிய இரண்டு திவ்யப் பிரபந்தங்களை யருளிச் செய்தார். இவற்றுள் முதற் பிரபந்தமானது “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்று தொடங்குவதனால் நான்முகன் திருவந்தாதி யெனப் பெயர் பெற்றது. இது முன் சொன்ன இயற்பா ஆயிரத்தில் நான்காவது பிரபந்தமாகவுள்ளது. திருச்சந்த விருத்தமெனும் மற்றொரு திவ்வியப் பிரபந்தம் முதலாயிரத்தில் ஆறாவது திவ்யப்ரபந்தமாக வுள்ளது. இவ்வாழ்வாரைத் திருமழிசைப் பிரானென்றும் வழங்குவர்; ஆசார்ய ஹ்ருதய திவ்ய சாஸ்த்ரத்தில் இவ்வாழ்வாருக்கு உறையிலிடாதவர்’ என்கிற விருது அளிக்கப்பட்டுள்ளது. கண்டனம் செய்பவர்கள் கத்தியை உறையிலிடாமல் கண்டனமே தொழிலா யிருப்பது போல இவ்வாழ்வார் இதர தெய்வங்களுக்குப் பிறர் சொல்லும் பரத்வத்தைக் கண்டிப்பதிலேயே நோக்குடையவர் என்பது கருத்து. எம்பெருமானுடைய பரத்வத்தைத் தம்முடைய திவ்யப்பிரபந்தங்களில் ஆதிநடுவந்திகளில் நன்றாக ஸ்தாபித்தவரென்றபடி. திருமழிசையாழ்வார்க்கு அடுத்தவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார்களுள் தலைமை ஸ்தானம் பெற்றிருப்பவர். ப்ரபந்நஜநகூடஸ்தரென்று சிறப்பித்துக் கூறப்படுபவர். இவர் நான்கு வேதங்களின் ஸாரமாக நான்கு திவ்யப்ரபந்தங்களை யருளிச்செய்தவர். அவை முறையே (100 பாசுரங்கொண்ட) திருவிருத்தமென்றும், (7 பாசுரங்கொண்ட) திருவாசிரிய மென்றும், (87 பாசுரங்கொண்ட) பெரிய திருவந்தாதி யென்றும், (1102 பாசுரங்கொண்ட திருவாய்மொழி யென்றும் வழங்கப்பெறும். *மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன் ஆறங்கங்கூற வவதரித்த* என்ற உபதேசரத்தின மாலைப் பாசுரப்படியே ஆறங்கமாகத் திருமங்கையாழ்வாரருளிச்செய்த ஆறு திவ்யப் பிரபந்தங்களுக்கு நம்மாழ்வாருடைய இந்நான்கு திவ்யப்ரபந்தங்களும் அங்கிகளாம். இவற்றுள் முந்தின மூன்று பிரபந்தங்களும் இயற்பா ஆயிரத்தில் 5,6,7 ஆம் பிரபந்தங்களாம். திருவாய்மொழியானது தனிப்பட்ட நான்காவதாயிரமாம்.
நம்மாழ்வார் திருவடிகளில் ‘தேவுமற்றறியேன்” என்று ஆச்ரயித்திருந்த ப்ராம்மணோத்தமரான மதுரகவிகளும் ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவராயினர். இவர் தம்முடைய திடமான அத்யவஸாயத்தின்படி எம்பெருமானைப் பாடாது நம்மாழ்வாரொருவரையே நோக்கிப் பதிகம் பாடினர். அப்பிரபந்தம் கண்ணி நுண் சிறுத்தாம்பு என்பதாம். அது பகவத் விஷயமல்லாவிடினும் பகவத் விஷயங்களான நாலாயிர திவ்யப்ரபந்தங்களினிடையே பரிகணிக்கப்பட்டதாயிற்று. *வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல், சீர்த்த மதுரகவி செய்கலையை – ஆர்த்தபுகழாரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே, சேர்வித்தார் தாற்பரியந் தேர்ந்து* என்ற உபதேச ரத்தினமாலைப் பாசுரம் இங்கு நோக்கத்தக்கது. இது முதலாயிரத்தில் சரமப் பிரபந்தமாகவுள்ளது.
நம்மாழ்வார்க்கு அடுத்தவர் குலசேகராழ்வார். இவர் (105 பாசுரங்கொண்ட) பெருமாள் திருமொழியையருளிச்செய்தார். அது முதலாயிரத்தில் ஐந்தாவது பிரபந்தமாகவுள்ளது. இவ்வாழ்வார்க்குக் குலசேகரப் பெருமாளென்றும் திருநாமமுண்டாதலால் அதை மூலமாகக் கொண்டே இவருடைய பிரபந்தம் பெருமாள் திருமொழியென வழங்கப் பெற்றது. இவ்வாழ்வார் வடமொழியில் முகுந்தமாலை யென்று ப்ரஸித்தமாய்ப் பரமமதுரமான ஸ்துதியை யருளிச் செய்தாரென்றுஞ் சொல்லுவர்கள். அஃது இவரருளிச் செய்ததன்று; இவரது மரபில் தோன்றியவரும் இவருடைய திருநாமத்தையே கொண்டவருமான மற்றொரு பரமபக்தர். பணித்ததென்றும் சொல்லுவர்கள்.
குலசேகராழ்வார்க்கு அடுத்தவர் பெரியாழ்வார். இவர்க்குப் பட்டர்பிரானென்றும் பட்டநாதரென்றும், விஷ்ணுசித்தரென்றும் புதுவையர்கோனென்றும் மறு பெயர்களு முண்டு. இவரே பாண்டிய ராஜஸதஸ்ஸில் பாதத்வநிர்ணயம் பண்ணிக் கிழியறுத்துப் பெற்ற பேராசிரியர். (12 பாசுரங்கள் கொண்ட) திருப்பல்லாண்டும், (473 பாசுரங்கள் கொண்ட) பெரியாழ்வார் திருமொழியும் இவரருளிச் செய்தவை. இவை முதலாயிரத்தின் 1, 2 பிரபந்தங்களாம். “கோதிலவாமாழ்வார்கள் கூறுகலைக் கெல்லாம், ஆதி திருப் பல்லாண்டானதுவும், வேதத்துக்கு-ஒமென்னுமதுபோல் உள்ளதுக் கெல்லாஞ் சுருக்காய்த் தான் மங்கலமாதலால்” என்ற உபதேசரத்தினமாலைப் பாசுரம் இங்கே அநுஸந்தேயம்.
“பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே” என்கிறபடியே பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள் (30 பாசுரங்கள் கொண்ட) திருப்பாவையும், (143 பாசுரங்கள் கொண்ட) நாச்சியார் திருமொழியும் அருளிச் செய்தாள். அவை முதலாயிரத்தில் 3, 4 ஆம் பிரபந்தங்களாக வுள்ளன. ஆண்டாள் பிராட்டிமார் கோஷ்டியைச் சேர்ந்தவளேயாயினும், திவ்யப்பிரபந்தங்களருளிச் செய்த காரணத்தினால் ஆழ்வார்கள் கோஷ்டியிலும் அந்வயம் பெற்றவளாவள்; ஸ்ரீ பெரும்பூதூரில் நடைபெறும் அத்தியயநோத்ஸவத்தில் ஆழ்வார்கள் கோஷ்டியில் ஆண்டாளும் திகழ்வது பிரசித்தம். இங்ஙனே மற்றுஞ் சில திவ்யதேசங்களிலுமுண்டென்பர். ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்தநாச்சியார், கோதை என்னும் திரு நாமங்களுமுண்டு.
பெரியாழ்வார்க்கு அடுத்தவரான தொண்டரடிப்பொடியாழ்வார் (45 பாசுரங் கொண்ட) திருமாலையும் (10 பாசுரம் கொண்ட) திருப்பள்ளியெழுச்சியும் அருளிச் செய்தார். திருமாலை யறியாதவன் திருமாலையறியான்” (அல்லது) பெருமாளை யறியான்’ என வழங்கும் பழமொழியினால் திருமாலையின் ஏற்றம் அறியத்தக்கது. இவ்விரண்டு பிரபந்தங்களும் முதலாயிரத்தில் 7, 8-ஆம் பிரபந்தங்களாகவுள்ளன.
தொண்டரடிப்பொடியாழ்வார்க்கு அடுத்தவரான திருப்பாணாழ்வார் (10 பாசுரங் கொண்ட) அமலனாதிபிரானென்னும் திவ்ய ப்ரபந்த மருளிச் செய்தார். ஆழ்வார்களுள் இவரே மிகக் குறைந்த பாசுரமருளிச் செய்தவர்; ஆயினும் இவரது திவ்வியப் பிரபந்தத்திற் குள்ள ஏற்றம் மற்றெந்த பிரபந்தத்திற்கு மில்லை. *காண்பனவு முரைப்பனவும் மற்றொன் றின்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடியகாதல், பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள் * என்ற (முநிவாஹந போகத்திலுள்ள) தூப்புற்பிள்ளை பாசுரத்தினாலும் அவ்வேற்றம் அறியத்தக்கது.
திருப்பாணாழ்வார்க்கு அடுத்தவரான திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரருளிய நால் வேதஸாரமான நான்கு திவ்யப்ரபந்தங்களுக்கும் ஆறங்கம் போன்ற ஆறு திவ்யப்ரபந்தங்களை யருளிச்செய்தார். அவையாவன: (1084 பாசுரங்கொண்ட) பெரிய திருமொழி, (20 பாசுரங்கொண்ட) திருக்குறுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், (30 பாசுரங்கொண்ட) திருநெடுந்தாண்டகம் – என்பனவாம். இவற் றுள், 1, 2, 6-ஆம் பிரபந்தங்கள் இரண்டாவதாயிரமாக வகுக்கப்பட்டவை. 3, 4, 5 ஆம் பிரபந்தங்கள் இயற்பா ஆயிரத்தில் 8, 9, 10 பிரபந்தங்களாக அமைந்தவை. இவ்வாழ்வார்க்கு , கலியன், கலிகன்றி, பாகாலன், திருமங்கை மன்னன், குறையல் பிரான் என்பவை முதலான திருநாமங்களுமுள்ளன.
ஆழ்வார்களினுடைய திவ்வியப்பிரபந்தங்கள் இவ்வளவே. மதுரகவியாழ்வாரையும் ஆண்டாளையும் சேர்த்துக் கணக்கிட்டால் ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களை விட்டுக் கணக்கிட்டால் ஆழ்வார்கள் பதின்மர். பிறகு ஆசார்ய ஸார்வபௌமரான எம்பெருமானாருடைய காலத்தில் தோன்றியிருந்த திருவரங்கத்தமுதனாரென்னும் பரமபக்தர் ஸ்வாசார்யரான கூரத்தாழ்வானுடைய முகோல்லாஸத்தின் பொருட்டு எம்பெருமானார் துதியாக (108 பாசுரங்கொண்ட) இராமாநுச நூற்றந்தாதியை யருளிச்செய்தார். இதற்குப் ப்ரபன்ன காயத்திரி யென்பது ஸம்ப்ரதாய வருத்தர்களின் வ்யவஹாரம். நம்மாழ்வார் விஷயமாக மதுரகவிகள் அருளிச் செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு போலவே இப்பிரபந்தமும் பூருவர்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தமாலையில் கோக்கப்பட்டதாயிற்று. திருக்கார்த்திகைக்குப் பின்பு திவ்யப்பிரபந்தங்களுக்குக் கொள்ளும் அநத்யயநக்ரமம் இவ்விரண்டு பிரபந்தங்களுக்கு மொக்கும். இதனால் இவற்றுக்கு ஆழ்வாரருளிச் செயல்களோடு ஸர்வாத்மநாஸாம்யம் பூர்வாசார்யஸம்மதமென்று தேறிநிற்கும்.
மணவாளமாமுனிகளின் காலம் வரையில் அநத்யய நகாலத்தில் திவ்யப்ரபந்தத் தனியன்களே ஸேவிக்கப்பட்டு வந்தன. சிஷ்யப்ரார்த்தநையாலும் பகவந்நியமநத்தாலும் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையும் திருவாய்மொழி நூற்றந்தாதியும் அருளிச்செய்ய அவை அநத்யயநகாலத்திற்கும் மற்றும் விசேஷ திருநக்ஷத்ரோத்ஸவாதிகளுக்கும் அந்நாள் தொடங்கி அநுஸந்தேயமாகக் கொள்ளப்பட்டன. இவையும் திவ்யப்ரபந்தங்களோடொக்கப் பரிகணிதங்களாயின.
பாவங்களைப் போக்க வழிதேடுவதிற்காட்டிலும் போதைப் போக்க வழிதேடுவது மிக அவசியமென்பர் பெரியோர். போதும் இனிதாகக் கழிந்து பாவமும் எளிதாகத் தொலையும் விரகு ஏதென்று பார்ப்பர் ரஸிகர்கள். திவ்யப்ரபந்தா நுபவமே நல்விரகென்று கொண்டார்கள் ஆளவந்தார் எம்பெருமானார் ஆழ்வான் பட்டர் முதலான நம் பூருவர்கள். வடமொழியி லமைந்த வேதங்களையும் இதிஹாஸ புராணங்களையும் மற்றும் பலவகை நூல்களையும் அவர்கள் அனுபவித்தும் அவற்றில் த்ருப்தி பெறாமல் ஆழ்வார்களின் ஈரச்சொற்களை யனுபவித்தே அவர்கள் உள் கனிந்துருகி உரோமகூபங்களாய்க் கண்ணநீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளாது தவித்தனர் என்று நாம் நன்கு அறிகிறோம். உண்மையில், நெஞ்சை நீர்ப்பண்ட மாக்கவல்லவை திவ்யப்ரபந்தங்களே யன்றி வேறில்லை. ‘ஸம்ஸ்க்ருத நூல்களில் போதுபோக்க வறியாதவர்களு க்கல்லவோ தமிழ்ப் பாசுரங்கள்’ என்று சொல்லுமவர்களைப் பற்றி நாம் “ஆரானு மாதானுஞ் செய்ய, அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்ற நம்மாழ்வார் பாசுரத்தையே அநுஸந்தித்து நிற்போம். அருளிச் செயல் என்றே பேர்பெற்ற திவ்யப்ரபந்தங்களில் ஈடுபடும் பாக்கியம் பெறுவதென்பது ஒரு விலக்ஷணமான செல்வம். அற்புதமான ஸுக்ருதம். இது ஸாமான்யமாகச் சிலர்க்கு விளையும தன்று. ஜன்மாந்தரஸஹஸ்ர நற்றவங்களினாலேயே விளைய வேண்டுமிது.
ஆழ்வார்களின் திருவவதாரக்ரமம் “பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை யையன் அருள்மாறன் சேரலர்கோன் – துய்ய பட்ட நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நன்கலியன், ஈதிவர் தோற்றத்தடைவாமிங்கு” என்ற உபதேச ரத்தின மாலைப் பாசுரத்தின்படி பொய்கையாழ்வார் முதலாகத் திருமங்கையாழ்வாரீறாக இருந்தாலும் திவ்யப்பந்தங்களின் அடைவு நம் பூருவாசாரியர்களால் ஒருவிதமாக அமைக்கப்பட்டுள்ளது. பெரியாழ்வாரரு ளிச்செய்த திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி என்னும் திவ்யப்ரபந்தங்களைத் தொடக்கத்திலே வைத்து, நம்மாழ்வாரருளிச்செய்த திருவாய்மொழியை முடிவாக வைத்து நாலாயிர திவ்யப்ரபந்த க்ரமத்தை நிர்வஹித்துள்ளார்கள். முதலாயிரம், பெரிய திருமொழி யாயிரம், இயற்பா ஆயிரம், திருவாய்மொழியாயிரம் என நான்கு ஆயிரமாக வகுக்கப்பட்டுள் ளதனால் நாலாயிரமென வழங்குதலாயிற்று. ஒவ்வொரு ஆயிரத்திலும் ஏற்றக் குறை வின்றி ஆயிரம் பாசுரங்கள் இருந்து தீரவேணுமென்கிற நியதி கொள்ளப்படவில்லை. முதலாயிரத்திலும் இயற்பா ஆயிரத்திலும் ஆயிரத்துக்குக் குறைந்த பாசுரங்கள் உள்ளன. பெரிய திருமொழியாயிரத்திலும் திருவாய்மொழியாயிரத்திலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசுரங்கள் உள்ளன. எனினும் இந்த ஏற்றக் குறைகளில் கணிசிப்பு இல்லை. பெரிய தொகையில் சிறிது ஏறினாலும் குறைந்தாலும் பெரிய தொகையையிட்டே வழங்குவது எங்கு முண்டே. சிறிய திருமடல் பெரிய திருமடல் என்னுமிரண்டு திவ்வியப் பிரபந்தங்களைப் பலபாட்டுக்களாக வுடைத்துக் கணக்கிடுவது இலக்கண நெறிக்குச் சேராது. அவை யிரண்டும் தனித்தனி இரண்டு பாட்டுக்களேயாகும். கலிவெண்பா வெனப்படும். நாலாயிரம் பாசுரங்கள் ஏற்றத்தாழ்வில்லாமல் தேறவேணுமென்னுங் கருத்தினால் அவற்றைப் பல பாட்டுக்களாகக் கணக்கிடுவது ஔசித்யம் என்ற ப்ரமாணத்திற்கு ஒக்குமென்னலாம்.