(2655)

(2655)

இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,

தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்

அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு

முகத்தான்நின் உந்தி முதல்.

 

பதவுரை

தனி நின்ற

–

தானொருவனுமே காரணமாய் நின்றவனும்

சார்வு இலா

–

வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான

மூர்த்தி

–

எம்பெருமானே!

அகத்து பனி நீர் உலவு செம்சடையான்

–

உள்ளே குளிர்ந்த சங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.

ஆகத்தான்

–

உன் திருமேனியை அச்ரயித்து வாழ்பவன்;

நான்கு முகத்தான்

–

நான்முகக் கடவுள்

நின் உந்தி முதல்

–

உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;

இனி

–

இப்படியான பின்பு

நின் பெருமை

–

உனது மேன்மையை

யான் நின்று உரைப்பது என்னே

–

தான் முயன்று சொல்வது எங்ஙனே?

(என்னால் சொல்லப்போகாதென்கை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இனி நின்று நின்பெருமை) எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில். இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே, என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற; பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.

தனி நின்ற சார்விலாமூர்த்தி  = காரியப் பொருள்கள் யாவும் அழிந்த காலத்து  ******  எகோ ஹவை நாராயண ஆஸீத்” (நாராயண னொருவனே இருந்தான்.) என்று உபநிஷத்தில் சொன்னபடியே தனியனாக இருந்தவனே என்கிறது= தனிநின்ற என்பதனால் அக்காலத்தில் கீழ்ப்பட்ட தெய்வங்களெல்லாம் மேற்பட்ட தெய்வங்களைச் சரணம்புக, எல்லாருமாக ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைச் சரணம் புகுந்து ஸத்தைபெற்றார்களென்று சொல்லிற்றே யொழிய, நாராயணன் மற்றொருவனைப்பற்றி ஸத்தை பெற்றதாகச் சொல்லாமையாலே சார்விலா மூர்த்தி என்றார்; நான் மற்றொரு தெய்வத்தைச் சாராதமூர்த்தி என்கை. மூர்த்தி-= அண்மைவிளி; ஸ்வாமியே! என்று விளித்தவாறு.

(பனிநீர் இத்யாதி.) கங்கையைச் சடையிலே கொண்ட சிவன் உன்னுடைய திருமேனியில் ஏகதேசத்தை இருப்பிடமாகக் கொண்டு ஸத்தை பெற்றான்; நான்முகனோ உனது நாபிக் கமலத்தில் நின்றும் பிறந்து ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவானான்; இப்படியிருக்க உனது பெருமையை புல்லியனான நான் பேசுவதென்று ஒன்றுண்டோ?- என்றாயிற்று.

ஆகத்தான் = ஆகமாவது சரீரம் ஒரு ஸமய விசேஷத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு எம்பெருமான் தனது திருமேனியின் ஒருபுறத்திலே இடம் கொடுத்து உதவினன் என்கிற இதைப் பெரிய குணமாகக் கொண்டு ஆழ்வார்கள் இதனை அடிக்கடி அருளிச்செய்வார்கள்; “ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனியுடம்பன்” என்பர் திருவாய்மொழியிலும்; “அக்கும் புலியினதளுமுடையாரவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றார் பெரிய திருமொழியிலே திருமங்கையாழ்வார்.

நின்னுந்திமுதல் = அன்மொழித்தொகை; (பஹுரீஹிஸமாஸமடங்கியது) நின் உந்தியை முதற்காரணமாக வுடையவன் என்று பொருள்படுதலால். நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன் என்றுரைத்தலுமாம்.

 

English Translation

Siva with Ganga in his mat-hair, occupies a corner in your person.  Brahma seated on a lotus has his origin in you.  O Lord with a frame that has neither a peer nor superior!  What can I say to praise your glory?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top