(2564)
புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும் , பூங்கழிபாய்ந்
தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே?
பதவுரை
|
திருமால் |
– |
பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே! |
|
புலம்பும் |
– |
(விரஹவேதனையால்) கத்துகிற |
|
கன குரல் |
– |
கனத்த குரலையுடைய |
|
போழ் வாய் அன்றிலும் |
– |
பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும் |
|
பூ கழி பாய்ந்து அலம்பும் |
– |
அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற |
|
கன குரல் |
– |
கம்பீரமான தொனையையுடைய |
|
சூழ் திரை ஆழியும் |
– |
சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய |
|
ஆங்கு அவை |
– |
அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த வஸ்துக்களானவை. |
|
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக |
– |
உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை (இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு |
|
வையம் சிலம்பும்படி |
– |
உலகத்தார் முறையிடும்படி |
|
இ திருவினை |
– |
திருமகள் போன்ற இப்பெண்ணை |
|
செய்வதே |
– |
துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?) |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அன்றிற் குரலுக்கும் கடலோசைக்கும் ஆற்றாத தலைவியின் நிலைமை கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது. அதாவது- நாயகியின் தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ச்சியடைந்து, பாவநாப்ரகருஷத்தாலே நாயகனை எதிரிற் கொண்டு முன்னிலைப்படுத்தித் தன்னிலே யுரைத்த பாசுரம். அன்றி, தோழி தலமைகனை எதிர்ப்பட்டுத் தலைமகளின் ஆற்றாமையை அவனுக்குக் கூறியுணர்த்துவது என்னவுமாம். உன்னிடத்தில் அன்பு கொண்டு தலைவி, உன்னைப் பிரிந்த நிலையில் அத்துயரம் ஒருவாறு தணியும் பொருட்டு உனக்கு வாஹனமாய் உது நித்யஸம்பந்தம் பெற்றுள்ள பெரிய திருவடியின் சிறப்பைப் பாராட்டிக் கூறி நிற்க,’ அதனைக் கண்டு. அதனால், இவள் பிரிவாற்றாத மெல்லிய ளென்று உணர்ந்து அன்றிற் குரலும் கடலொளியும் அவ்வாற்றாமையின் மேலும் தாமும் ஹிம்ஸை பண்ணக் கடவனோ வென்கிறாள். ஆணும் பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னிலர் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொளியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் விரஹ வேதனையை வளரச் செய்வதால் “புலம்புங் கன குரற் போழ்வாயவன்றிலும்” எனப்பட்டது. “பெண்ணை மேல், பின்னும்மவ்வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளாமென் செய்கேன்’ என்று திருமங்கையாழ்வாரும் பெரிய திருமடலில் அருளிச் செய்தார்.
பூங்கழிபாய்ந்து அலம்புங் கனகுரல் சூழ்திரையாழியும் = நதிபதியாகிய கடல் அழகிய கழியினுள்ளே புகப்பாய்ந்து அலைமறிந்து பெருமுக்கஞ் செய்வதை நோக்குமிடத்து, அது, தன் மனைவியைக் கைகளால் தழுவிக் களிப்பினால் ஆரவாரஞ் செய்வது போன்றிருத்தலால் விரஹ வேதனை மிகுகிறபடி. அஃறிணைப் பொருள்களிலும் சேதநமாகிய சிறுபறவையோடு அசேதநமாகிய பெருங்கடலோடு வாசியறப் பிரிவுக்கு வேதனைப் படுவதையும் கலவிக்கு மகிழ்ச்சி கொள்வதையும் கண்ணெதிரிற் காணுதல் கலக்கத்துக்குக் காரணமாம். (புள்ளதுகலம்.) பக்தர்களை ரக்ஷிக்கும் பொருட்டு எம்பெருமானை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து உதவுதல் கருடனுடைய நலமென்க. வையம் சிலம்புதலாவது- இவளுடைய தளர்ச்சிக்காகத் தாயர் தோழியர் உற்றார் உறவினர் ஊரார் அனைவரு முறையிடல். திருமால்! என விளித்தது, ஒருத்திக்கு நல்லவனாயிருக்கின்ற நீ இவள் இங்ஙனம் வருந்தப் பார்த்திருத்தில் பக்ஷபாதமன்றோ? என்றவாறு. ‘இத்திருவினை’ என்ற இவளையுந் திருமகளாகவே சொன்னது. இவள் அவளுக்கு நிழல் போலிருப்பவள் என்றாகிலும் இவளைப் பார்க்க வேண்டாவோ?’ என வெறுத்துரைத்தவாறு. திரு- ஸ்த்ரீகளுட் சிறந்தவள்.
கனகுரல் – பண்புத்தொகை; நிலைமொழி வடமொழியாதலின் இயல்பாயிற்று. ‘கனைகுரல்’ என்ற பாடத்தில் ‘கனைக்கின்ற குரல்’ எனப்பொருள் காண்க; வினைத்தொகை. போழ் வாய அன்றிலும் = தன் குரலால் விரஹிகளை இரு துண்டமாகப் பிளந்திடுகிற வாயையுடைய அன்றில் என்றும் உரைப்ப, ‘போழ்’ என்பது தன் வினை பிறவினை இரண்டுக்கும் பொது. பூங்கழி- பூக்களையுடைய கழி என்னவுமாம். வலம்- வெற்றியுமாம்.
“(ஆங்கவை) பிரிந்திருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணியோசையென்ன, சந்திரோதய மென்ன, தென்ற லென்ன இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்றாதல்” என்ற நம்பிள்ளை வீடு காண்க. (நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம் சிலம்பும்படி செய்வதே!) கருடன் உனக்கு அடிமை செய்த தழும்பு சுமந்தாற்போலே ஸம்ச்லேஷ அடையாளங்களைத் தரிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அக்கருடனைப் பாடினவிது குற்றமாக அன்றில் கடலோசை முதலானவை இவளை நலிய அத்தாலே இவள் நோவுபடா நின்றாளென்று நாட்டார் பழிசொல்லும்படி நீர் விட்டு வைப்பதே!, உம்முடைய மஹிஷி நோவுபடப் பார்த்திருத்தல் உமக்குக் குறையன்றோ என்றபடி, திருமால்- அண்மை விளி; “திருமால் நான்முகன்” (8-3-9) என்ற திருவாய் மொழிப் பாசுரத்திற்போல.
எம்பெருமானைச் சேராமையாலாகுந் துன்பத்தையும் சேர்வதனாலாகும் இன்பத்தையும் உலக நடத்தைகள் நினைபூட்டுதலால் வருந்தாநின்ற ஆழ்வாரது தன்மையைக் கண்ட அன்பர்கள், எம்பெருமானை நோக்கி “இப்படி உலகம் முறையிடும்படி இவரை இவை கலியக்கடவனவோ?’ என்று வெறுத்துரைத்தல் இதற்கு உள்ளுறை பொருள். அன்றிற்குரல் பிரிவுத் துன்பத்துக்கு ஸ்மாரகம்; ஆழிமுழக்கம் சேர்க்கையின்பத்துக்கு ஸ்மாரகம். (நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக) எம்பெருமான் நம்மிடத்து விரைந்து வந்து சேர்வதற்குறுப்பான வேக கதியைவுடைய வாஹனம் அவனுக்குச் சொந்தமாயிருக்கையில் நாம் இழக்கவேண்டுவதில்லையே யென்று மகிழ்ச்சி பாராட்டுதலே குற்றமாக என்கை. அடிமைச்செல்வமுடைமை பற்றி ஆழ்வாரைத் திரு என்றது; எம்பெருமானோடு நித்யாநுபவஞ் செய்யத்தக்கவை ரென்க.
English Translation
O Lord Tirumal! This Tiru-like girl is abused by all for singing the glories of your strong Garuda bird, in the midst of the hoarse double-beaked Anril bird’s mating call, and the roar of the surrounding sea flowing into shallow salt pans, Is it proper for you to bring her to this state?
