(2479)
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண் ணாட்டவர் மூதுவராம்
தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே.
பதவுரை
| முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் |
– |
நிறைந்த நீரையுடைய காளமேகம்போன்ற நிறத்தையுடைவனான எம்பெருமானுடைய |
| மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே |
– |
(யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில் |
| அன்பு சூட்டிய |
– |
தனது அன்பைச்செலுத்தின |
| சூழ் குழற்கு |
– |
அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு. |
| செழுநீர் தடத்து |
– |
மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில் |
| கயல் |
– |
கயல்மீன் |
| மிளிர்ந்தால் ஒப்ப |
– |
பிறழ்ந்தாற்போல |
| சே அரி கண் |
– |
சிவந்த ரேகைளையுடைய கண்கள் |
| அழுநீர் துளும்ப |
– |
(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப |
| அலமருகின்றன |
– |
தடுமாறுகின்றன; |
| வாழி |
– |
இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாசுரம் ஆழ்வார் தரமான தன்மையிலருளிச் செய்தது. அத்தன்மை நீங்கிப் பெண்நிலைமை யெய்திப் பேசும் பாசுரம் இது. நாயிகாவஸ்தையையடைந்து பேசும் பேச்சுக்களில், தாய் பரசுரம் தலைவி பரசுரம் தோழி பாசுரம் என மூன்றுவகைகள் உண்டு. இப்பாட்டு தோழி பாசுரமாய்ச் செல்லுகிறது. தலைவி வேறுபாடுகண்ட தோழி வியந்துரைத்தல். நாயகிக்கு உண்டான வைலக்ஷண்யத்தைத் தோழியானவள் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போகிறாள்.
முதற்பாட்டில் ‘இமையோர் தலைவா! என்று எம்பெருமானுடைய உத்தம புருஷத் தன்மையை அநுஸந்திக்கையாலே அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை கிளர்ந்து, அங்ஙனம் அவனைக் கிட்டப் பெறாமையாலே ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தளர்ந்தார்; அத்தளர்ச்சியாலே தரமான தன்மை யழநிது ஆண் பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒரு பிராட்டி நிலைமையடைந்தார். ஆழ்வார் என்னுந் திருநாமத்தையிழந்து ‘பராங்குச நாயகி’ என்ற பெயர் பெறலாயிற்று. தமக்குண்டான அன்பு நில¬மையைத் தம் வயாற் சொல்லிக் கொள்வதிற் காட்டிலும் வேற்று வாயாலே விளக்குதல் அழகியதாகத் தோன்றினமையால் தோழலி சொல்லுமாபோலே, சொல்லிக் கொள்ளுகிறார்.
எம்பெருமானாகிய நாயகனைப் புணர்ந்து, புணர்ச்சிக்கு அடுத்தபடியாகப் பிரிவு உண்டாவது இயல்வாதலால் அப்படியே பிரிந்து, அப்பிரிவை ஆற்றாதவளான நாயகியினுடைய நிலைமை வேறுபட்டிருப்பதைக் கண்டு வியப்புற்று தோழியின் வார்த்தைபோல் இப்பாசுரம் வெளிப்பட்டிருந்தாலும், எம்பெருமான் திருவடிகளில் ஆழ்வார்க்கு உண்டான அன்புமிகுதியாலாகிய கண்கலக்கத்தைக் கண்டு ‘பகவத் விஷயத்தில் இப்படியும் ஒரு அபிநிவேசம் உண்டாவதே!’ என்று வியப்புற்ற நண்பர்களின் வார்த்தையாக இது கொள்ளத்தக்கது. ஆழ்வாரது ஞானக்கண்ணுக்கு எம்பெருமான் ஒருகால் இலக்கானபொழுது அவனை உடனே சேரவிரும்பிய இவரை அப்பெருமான் அப்போதே சேர்த்துக்கொள்ளாது மறைய, அதனாலுண்டான துயரமே ஆழ்வார்க்குப் பிரிவாற்றாமையாவது.
பின்னடிகளை முந்துற அந்வயித்துக்கொண்டு பிறகு பின்னடிகளை அந்வயித்துக் கொள்வது. கழுத்தளவும் கடல் நீரை முகந்துகொண்டு கிளர்ந்த காளமேகத்தோடொத்த திருநிறத்தையுடையவனான எம்பெருமானுடைய நித்யஸூரி ஸேவ்யமான பாதாரவிந்தங்களிலே அன்பு மிகுந்துள்ள இப்பராங்குச நாயகிக்கு நாயகனைப் பிரிந்த வருத்தத்தினால் கண்கள் நீர்ததும்ப நிற்கும் நிலைமையைக் கண்டால்,பெரிய கடல்போலே யிருப்பதொரு தடாகத்திலே அதன் பரப்பெல்லாம் விம்மும்படி மிளிர்ந்ததொரு கயலானது அத்தடாகம் முழுதும் குழம்பும்படி இடம் வலங்கொள்ளுமா போலேயிருக்கிறதென்கை. கண்களுக்குக் கயலும், கண்ணீர்ப்பெருக்குக்குச் செழுநீர்த் தடாகமும் உவமை.
வாழியரோ= அழுகை நிலைமையைச் சொல்லுகிற இவ்விடத்தில் வாழ்த்துக் கூற அவகாசமேதென்னில், பகவத் விஷயத்தில் அன்பு மிகுதியினால் கண்ணுங்கண்ணீரமாயிருக்கும் நிலைமை அன்பர்கட்குச் சிறந்த கண்காட்சியாதலால் “இந்த நிலைமை பரமபோக்யமாயிருக்கின்றது! இது மாறாமல் என்றும் நிலைத்திருக்கவேணும்” என்று பல்லாண்டு பாடுவது ஏற்கும். “வண்பொன்னிப் பேராறுபோல் வருங் கண்ணீநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ்சேறு என் சென்னிக் கணிவனே” என்றும் “கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண்பயனாவதே” என்றுமுள்ள குலசேகரப் பெருமாள் ஸ்ரீஸூக்திகள் காண்க. வாழி – இந்த விரஹவருத்தம் நீங்கி வாழவேணுமென்றுரைக்கவுமாம்.
‘விண்ணட்டவர் மூதுவாரம்’ என்றது- மூதுவாரம் விண்ணாட்டவர் என மாறி அவ்வயிப்பதால், மொழிமாற்றுப் பொருள்கோள். கீழ்ப்பாட்டில் ‘இமையோர்’ என்றதுபோலவே இப்பாட்டிலும் ‘விண்ணாட்டவர்’ என்பது சுவர்க்கத்திலுள்ள தேவர்களைக் குறியாது எல்லாவுலங்களிலும் மேலான பரமபதத்தில் உள்ளாரைக் குறித்தது. ‘மூதுவாரம்’ என்ற அடைமொழியினால், இவ்வுலகத்திலிருந்து பரமபதஞ்சேர்ந்த முக்தோன்றிப் பரமபதத்திலேயே என்றும் நிலைத்துள்ள அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலிய நித்யஸூரிகள் கூறப்பட்டாராவர்.
‘தொழுநீர்’ என்பதில் ‘நீர்மை+ என்னும பண்பு ஈறுபோயிற்று. நீர்மையாவது ஸ்வபாவம். நித்யஸூரிகளால் தொழப்படுவதையே ஸ்வபாவமாகவுடைய திருவடிகளென்றவாறு. “இணையடிக்கே அன்புவைத்த” என்னாது “அன்புசூட்டிய” என்கையாலே ஆழ்வாரது அன்பு. எம்பெருமானது திருவடிகளுக்கு அலங்காரமென்று தோற்றும். “ஆர்வமென்பதோர் பூ” என்றார் பெரியாழ்வாரும். “இணை யடிக்கே அன்பு சூட்டிய சூழ்சூழற்கே” என்ற சொற்போக்கால்- எம்பெருமான் திருவடிகள் ஆழ்வார் திருமுடிக்கு அலங்கார மென்னுமிடமும் தோற்றும். “கோலாமமென்சென்னிக்கு உன்கமலமன்ன குரைகழலே” என்றார் திருவாய்மொழியில்.
‘சூழ்குழல்’ என்பது சூழ்ந்த கூந்தலையுடையவன் என்று பொருள் படுதலால், வினைத் தொகையன்மொழி.
நித்யஸூரிகள் சிரஸாவஹிக்கும் திருவடியிணையைத் தமது திருமுடியால் தாங்கியிருக்கின்ற இவ்வாழ்வார் எம்பெருமானைப் பிரிந்து வருந்திக் கண்ணநீர் கைளாவிறைப்பநிற்கு மிந் நிலைமை பரமபோக்யமா யிருக்கின்றது என்று அன்பர் வெளியிடும்பாவனையாக ஆழ்வார் தமது பிரிவாற்றாமையை வெளியிட்டாயிற்று.
English Translation
This coiffured girl gave her love garland to the perfect pair of feet of the lord of dark laden-cloud-hue, Kirshna, whom the celestias in heaven worship. Her red-lined eyes rain tears, and chase each other like warning fish in a big lake. Aho! Long live love!
