(2478)

(2478)

பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,

இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்

எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா

மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே.

பதவுரை

உயிர் அளிப்பவன்

எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்

பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்

திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா

தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்

பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்

தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்

அசுத்தங்களோடு கூடின சரீரமும்

(ஆகிய இவற்றோடு கூடி)

இ நின்ற நீர்மை

இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை

இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்

(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருகளாய்

நின்று நீ கேட்டருள வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் தம்முடைய ஞானக்கண்ணுக்கு இலக்கான- எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி!, அடியேனுடைய ஸம்ஸாரபந்தம் தொடர்ந்து வராமல் இவ்வளவோடு அற்றுப் போகுமாறு தேவரீர் அருள்செய்ய வேணுமென்று அடியேன் வணக்கத்துடன் சொல்லிக் கொள்ளும் வார்த்தையை திருச்செவி சார்த்தியருள வேணும்’ என்று பிரார்த்திக்கிறாரிதில்.   இதில் “இனியாமுறாமை” என்றவிடத்து, யாம் என்று பன்மையாகவும் முடிவில் ‘அடியேன்’ என்று ஒருமையாகவும் பிரயோகித்திருப்பதன் உட்கருத்தை கண்டுணரவேண்டும்: இப்போது தேவரீர் முன்னிலையில் நின்று விண்ணப்பம் செய்பவன் அடியேன் ஒருவனே யாகிலும், எவனொருவனுடைய அநர்த்தத்தைப் பரிஹரித்துக் கொள்வதற்காக மாத்திரம் அடியேன் விண்ணப்பம் பண்றுகிறேனல்லேன்; அடியேனும்கூட இவ்விருள் தருமா ஞாலத்தில் துவள்கின்ற மற்றும் பல ஸம்ஸாரிகளின் அநர்த்தமும் நீங்கவேணுமென்று அனைவர்க்கும் பிரதிநிதியாய் அடியேன் விண்ணப்பஞ்செய்கிறேன் என்பது உட்கருத்து. ‘பராநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே நாட்டுக்காகத் தாம் மன்றாடுகிறார்” என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

இந்த ஸம்ஸாரநிலத்தில் ஸம்பவிக்கக்கூடிய மூன்று விஷயங்களை முதலடியிலளிருச் செய்கிறார். பொய்க்கின்ற ஞானமாவது- தக்வஜ்ஞானததிற்கு எதிர்த்தடையான விபரீதஞானம். புண்ய பாபங்களுண்டு, பரலோகமுண்டு, ஈச்வரனுண்டு என்று உணர்வது தத்துவஞானம்; இவையொன்றுமில்லையென மாறாகக் கொள்வது விபரீதஞானம். அதுவே இங்குப் பொய்ந் நின்றஞானமெனப்படுகின்றது.

பொல்லாவொழுக்கு = “யானே நீ யென்னுடைமையும் நீயே” என்கிற அநுஸந்தானத்திற்கு மாறாக அஹங்கார மமகாரங்கள் கொண்டு அவற்றுக்கு ஏற்றபடி நடக்கும் நடத்தைகள் பொல்லாவொழுக்காம். விபரீத ஞானத்திற்கும் பொல்லாத ஒழுக்கத்திற்கும் காரணம் அசுத்தாமன தேஹத்தின் ஸம்பநந்தமேயாதலால் காரியங்களை முற்கூறிக் காரணத்தைப் பிற்கூறிற்று.

“இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” என்றது- பிறப்பு நீங்கி மோக்ஷம் பெறும்படியாக என்றவாறு, மீளாவுலகமாகிற பரமபதத்தையடைந்த உயிர்க்கு மீண்டு மற்றொரு பிறப்பையெடுத்தல் இல்லையென்பது ‘இனிஉறாமை’ என்பதில் விளங்கும். உறாமை என்னும் இவ்வெதிர்மறை வினையெச்சம் ‘அடியேன் செய்யும் என்பதிலாவது ‘கேட்டருளாய்’ என்பதிலாவது அந்வயிக்கும்.

இமையோர் தலைவா = அயர்வறு மமரர்களதிபதியே! என்றவாறு. தென்னத்தியூரரான பொருளாளப் பெருமாளுக்கு தேவாதிராஜன் என்ற திருநாமமாதலால் அவ்வெம்பெருமானை உளப்படுத்தி சரமப்ரபந்தமாகிய திருவாய் மொழியின் முதற்பாசுரத்தில் ‘அயர்வறுமமார்களதிபதி’ என்று அருளிச் செய்ததுபோல, ப்ரதம ப்ரபந்தாமகிய இப்பிரபந்தத்தின் முதற் பாசுரத்திலும் அப்பெருமானையே உளப்படுத்தி ‘இமையோர் தலைவா!’ என விளிக்கிறாரென்று பெரியோர் பணிக்கும்படி. திருநாட்டிலே நித்யமுக்தர்களை அடிமைகொண்டு எழுந்தருளியிருக்குமிருப்பிலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணுமென்னும் விருப்பம் உள்ளுறை.

“மெய்ந்நின்று கேட்டருளாய்” என்றிவிடத்துள்ள ‘மெய்’ என்பதை மேலே விண்ணப்பத்திற்கு விசேஷணமாக்கி ‘மெய்விண்ணப்பம் நின்று கேட்டருளாய்’ என உரைக்கப்பட்டது. இனி, உள்ளபடியே அந்வயித்து உரைத்தலுமாம்; மெய்நின்று- திருமேனியைக் காட்டி உண்மையாக நேர்நின்று என்கை. அங்குமிங்கும் பதறி ஓடிப்போய்விடப் பாராமல் நிலைத்து நின்று என் விண்ணப்பத்தை முடியக் கேட்டருள் என்கிறார். பெருமாள் திருவீதிப் புறப்பாடுகளில் வேதபாராயணம் கேட்க நிற்பதில்லை; அருளிச்செய்ல் இயல் கேட்க நிற்பதுண்டு; ஆழ்வார் இங்ஙனே ‘நின்று கேட்டருளாய்’ என்று பிரார்த்தித்ததனாலன்றோ இது- என்று ரஸிகர்களின் ரஸோக்தி.

‘அடியேன் செய்யும் விண்ணப்பத்தைக் கேட்டருளிக் கோரிக்கையைப் பூர்த்திசெய்ய வேணும்’ என்னாமல் விண்ணப்பத்தைச் செவிதாழ்த்துக் கேட்டருள்வதையே வேண்டினர்; எம்பெருமான்திருவுள்ளத்தில் பட்டால் போதுமானது; காரியஸித்தி தன்னடையே ஆகும் என்பது கருத்து. ‘கேட்டு அருளாய்’ என்று பிரித்து இவ்விண்ணப்பத்தைக் கேட்டுக் கொண்டிருந்த பின்பு அருள் செய்ய வேணும் என்று பொருளல்ல; கேட்கையாகிற அருளைச் செய்ய வேணுமென்கை. ‘வந்தருள்’ ‘அமுதசெய்தருள்’ என்னுமிடங்களிற்போல. (க)

English Translation

O Lord of Celestials! For the sake of protecting all souls, you took birth in several wombs!  Grant that we may never again attain the lowly state of faulty knowledge, wicked actions and fifth-ridden body. This here is my humble petition, pray hear me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top